மலர்களும் தேனீக்களும்
காலையிளங் காற்றினிலே
கட்டின்றிக் காவலின்றி
கன்னியெனப் பூக்களெல்லாம்
கண்கவரும் வண்ணங்களாய் ,
முத்து முத்து பனித்துளிகள்
முத்தாடும் வேளையிலே
முன் சென்று தேனீக்கள்
முறுவலிட்டுக் கூடினவே ,
தேடல் கொண்ட தேனீக்கள்
தேன் மலரில் மையல் கொண்டு
தென்றலென பறந்து வந்து
தெவிட்டாத தேன் விரும்பி ,
மண்டியிட்டு மலரிதழில்
மற்றவர் கண் படுமுன்னே
மதுவென்ற தேன் அருந்தி
மயக்கத்திலே கிறங்கினவே .