இந்தியா சுதந்திர மகாவீரர் ஹைதர் அலி

இந்தியா சுதந்திர மகாவீரர் ஹைதர் அலி

மன்னரின் மகன் மன்னராவதுதான் இந்திய மரபு. விதிவிலக்காக அரச மரபில் பிறக்காதவர்களும் தங்களின் அறிவுத்திறத்தால், உடல்வலிமையால் ஆட்சியைப் பிடித்து மன்னராவதும் உண்டு.

எளியவர்கள் தங்களின் அறிவால், துணிவால் அரியணையேறினாலும் அவர்கள் முழுவதுமாகத் தங்களை மன்னர்களாகவே கருதுவதில்லை. தாம் என்றும் ஒரு சாதாரண குடிமகன்தான் என்று நினைத்து குடிமக்களின் மன்னராகவே வாழ்வர். அத்தகையோருள் ஒருவர் ஹைதர் அலி, மற்றொருவர் திப்பு சுல்தான். இவர்களுள் ஒருவர் சிங்கம் என்றால் மற்றொருவர் புலி. ஹைதர் என்பதற்குச் “சிங்கம்“ என்று அர்த்தம். ஹைதர்அலி உண்மையிலேயே சிங்கம்தான். ஆனால் கொஞ்சம் முரட்டுச் சிங்கம். திப்பு சுல்தானுக்கு ஜாகோபியன்கள் “குடிமகன்“ என்ற பட்டத்தினை வழங்கினர். மன்னர் மரபினர் அல்லாத மன்னர்கள் மக்களின் மனத்தில் வாழும் நல்ல குடிமகன்கள்தான் என்பதற்கு இந்தச் சிங்கமும் புலியுமே சான்று.

சூஃபி மரபு

ஹைதர் அலியின் முன்னோர்கள் “அகவிழிப்புடைய மனிதர்கள்” என்று அழைக்கப்படும் சூஃபி குடும்பத்தினர். அவர்களுள் ஒருவர் ஃபட்டா முகம்மது. சூஃபி மரபினர் போர் வீரராவது ஒரு வகையில் முரண்தான். சூஃபி இஸ்லாமின் அடிப்படைக் கொள்கை சுல்ஹ்-இ-குல் என அழைக்கப்படுகிறது. இதன் பொருள் ‘அனைத்துடனும் சமாதானம்’ என்பதாகும்.

சமாதானத்தை விரும்பும் மரபில் போர் வீரர் உருவாவது முரண்தானே?. பத்தே முகம்மது ஆற்காடு நவாபின் முதன்மைத் தளபதியாக இருந்தவர். அவருக்கு இரண்டாவது மகனாக கி.பி.1720ஆம் ஆண்டு ஹைதர் அலி பிறந்தார்.

படைவீரர்

மைசூரை ஆண்ட இளம்வயது அரசர் கிக்க கிருஷ்ணராசாவிடம் படை வீரர்களாக ஹைதர் அலியும், அவரது அண்ணன் ஷாபாஸ் சாஹிபும் சேர்ந்தனர். கி.பி. 1749ஆம் ஆண்டு நடைபெற்ற தேவனஹள்ளிப் போரில் இவர்கள் காட்டிய வீரம் கிருஷ்ணராசாவை வியப்பில் ஆழ்த்தியது. அப்போரில் பெற்ற வெற்றிக்குக் கைமாறாக கிருஷ்ணராசா ஹைதர் அலியைக் குதிரைப்படைத் தளபதியாக்கினார்.

பிரிட்டிஷ் எதிர்ப்பு

கி.பி.1750ஆம் ஆண்டு பிரிட்டிஷாருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இந்திய மண்ணில் கடும்போர் ஏற்பட்டது. இந்நிலையில் அரசர் கிக்க கிருஷ்ணராசா பிரெஞ்சுக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தார். இப்போரில்தான் ஹைதர்அலி பிரிட்டிஷாரை எதிர்த்து முதல் முதலில் மோதினார். தன் அணியினரான பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து நவீன போர் நுணுக்கங்களையும் ஆயுதங்களையும் அறிந்துகொண்டார்.

ஆயுதப்படை

பிரிட்டிஷாரை ஹைதர் அலி எதிர்கொண்ட விதத்தையும் வீரத்தைக் கண்டு வியந்த மைசூர் அமைச்சர் நஞ்ஞராஜர் மைசூர் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்த திண்டுக்கல்லை நிர்வகிக்கும் பொறுப்பினை ஹைதர் அலிக்கு வழங்கினார்.

திண்டுக்கல்லில் ஹைதர் அலி தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்தினார். அங்கு இராணுவ ஆய்வுக் கூடத்தை உருவாக்கி, பிரிட்டிஷ் படையை எதிர்கொள்ளும் வகையில் பீரங்கிப் படையை அமைத்தார்.

வீரர்களின் நண்பர்

மைசூர் படையில் வீரர்களுக்கு ஊதிய நிலுவை, ஊதிய உயர்வு சார்ந்த சிக்கல்கள் எழுந்தன. அது பெருஞ்சிக்கலாகி கி.பி.1758ஆம் ஆண்டில் வீரர்களுக்கும் மன்னருக்கும் இடையில் ஒரு கலகமாக உருவெடுத்தது. அக்கலகத்தை அடக்கும் பொறுப்பை அரசர் கிக்க கிருஷ்ணராசா ஹைதர் அலியிடம் ஒப்படைத்தார்.

ஹைதர் அலி தன் சாட்டையைச் சொடுக்கிக் கலவரத்தை அடக்கி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். தன் முயற்சியால் கிருஷ்ணராசாவிடம் பணம்பெற்றும் தன் சொந்தப் பணத்தைக்கொண்டும் வீரர்களின் பண(மன)த்துயரைத் துடைத்தார். இதனால் படைவீரர்கள் மத்தியில் ஹைதர் அலிக்குச் செல்வாக்கு ஏற்பட்டது.

வெற்றிச்சிங்கம்

கி.பி. 1759ஆம் ஆண்டு மராட்டியப் படை மைசூரைத் தாக்கியது. மைசூர் படைக்கு ஹைதர்அலியைத் தலைமையேற்குமாறு அரசர் கிக்க கிருஷ்ணராசா கட்டளையிட்டார். மைசூர் படை ஹைதர் அலியின் தலைமையில் மராட்டியப் படையினை எதிர்த்தது. மகத்தான வெற்றியினைப் பெற்றது.

அரசர் கிக்க கிருஷ்ணராசா அவ்வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் ஹைதர்அலியைப் பாராட்டும் வகையிலும் ஹைதர் அலிக்கு “பதே ஹைதர் பஹதூர்“ என்ற பட்டத்தினை வழங்கினார். அதாவது “தைரியம் உடைய வெற்றிச் சிங்கம்“ என்று பொருள்.

தொடரும்......

எழுதியவர் : லெத்தீப் (9-May-14, 10:44 pm)
பார்வை : 471

மேலே