நாட்குறிப்பு

நான் நடந்த பாதையில் உண்டான
பேனா கால்தடம் -அதில்
பூக்கள் பூசிய வாசமும் தெரியும்
முட்கள் குத்திய இரத்தமும் இருக்கும்

என்னை நானே திரும்பி பார்க்க
எனக்குதவும் காகிதக் கண்ணாடி
என்னைப் பற்றி உண்மைசொல்லும்
ஓர் ஓசையில்லா உயிர்நாடி

மனநிழல் தேடி சில நேரம்
நான் போகும் எனக்கேயான ஒரு போதி
பிறர் கண்களுக்குத் தெரியாத - என்
மனதின் மறைவான ஒரு பாதி

காலத்தின் ஒரு பகுதியை காகிதத்தில்
உறையவைக்கும் எழுத்துச் சிற்பம்
நிறைவேறா என் ஆசையெல்லாம்
தன்னுளே கொண்ட கனவின் கர்ப்பம்

கைரேகை போல் தனித்துவம் கொண்ட
சிறு சுயசரிதை களஞ்சியம் - இது
இரவல் தரமுடியா இரகசிய பெட்டகம்
ஒரு வருடத்தில் ஒற்றை பிரதி
மட்டும் வரும் அதிசய புத்தகம்

என் நாட்கள் முடிந்தபின்
எப்போதாவது என் நாட்குறிப்பை
நீங்கள் வாசிக்க நேர்ந்தால்
பக்குவமாக பக்கங்களை புரட்டுங்கள்
நீங்கள் வாசிப்பது வெறும் சுவடியல்ல
நான் சுவாசித்துப் போன சுவடுகள்

எழுதியவர் : வீரா ஜெயசீலன் (11-May-14, 1:42 am)
சேர்த்தது : veeraa
Tanglish : natkuraippu
பார்வை : 106

மேலே