என்னுள் உணர்ந்த அவள்,,,,

29 வருடங்களாக
என்னுள் உணர்ந்த அவள்,,,,
எதுவுமே இல்லாத அந்த விளக்கின்வெளிச்சம் மட்டும்
பனைமரம் சேர்ந்ததுபோல கட்டியிருக்கு
அந்த குளியலறை ,,
அங்கேதான் எல்லோரும்
அழுகின்றகுமுறல் என்னைப்போலவே
தலைத்தட்டுகிற சத்தத்தோடு ஏசலும் பூசலும்
கருப்புப்பூ பதிந்த தங்கசரிகை மின்ன
நினைவிருக்கிற நிறம் அதுமட்டுந்தான்
காலெல்லையைக் கடந்து
குதிக்கால் சிறுவெடிப்பினூடேசிக்கிய
சீலைநாணலின் பாதிநனைந்தசுவடு
சீவக்காய் போட்டுத்தேய்த்ததில்
கண்ணெல்லாம் எரிச்சல் கரைச்சல்
உள்ளங்கைய்யோடு தோய்ந்துவிட்ட
வெள்ளைப்பூண்டுநெடி
கழுத்தில் தொங்குகிற ஆரம்
தலைக்கும் தண்டுவடத்திற்குமாய்
அங்கிங்கெனாதபடி எங்கும் ஆடி ஆடி
திடமாக அடிக்கிறதுவலிக்க
மேலும் அழுகுரல் க்ரீச் க்ரீச் என்று
தலை கால் கை கன்னம் என்று
எல்லாவற்றையும் நல்லா
அமுக்கு அமுக்கு என்று கூவுகின்ற
கிழட்டேவல்
குழறல் குரலோடு
அம்மை எம்மை நும்மை தம்மை
என்கின்ற மெல்லென ஒலித்த
இசையரங்குபோல் பிஞ்சுகளின்
கிளர்ந்த கதறலின் இதத்தில்
அவளை அன்றி ஆரை நினைக்கேனே
அவளற்று "அவள்" ஆகத் திரிந்ததும்
தாழிப்பானையின்
இருகரம் அழுந்தக்குலுங்கியநீரில்
குழம்பிய நிலாவாக
தன் அம்சிறையன்னக்கூந்தலவிழ
அது எனை விழுங்கவே
முழுதாய் மறைத்தாள் அவள்முகந்தான்
பல்முளைக்கா எயிறுதொட்ட
அக்குவியிதழ்ச்சுளைகளிரண்டு
எதுக்களித்து விரிக்ககண்டவள்
பால்மணம் நறும்பிய மாரோடு அள்ளி
எக்களித்து முத்தமிட்டாள்
பொத்தலில்லா பலுக்கல் தூளியில்
பருத்தியினால்
பாயல்செய்திட்டுக்கிடத்தி
பொறுமியத் தாலாட்டின்
விடைப்பெறாத சில
அன்றைய ஆகாசவாணிகள்
வழப்பமாகிக்கொண்டது
இன்றைய தூக்கத்தினிடையில்
அனுசரன்