சிறப்புக் கவிதை 58 ரேமண்ட் பயஸ் அயல் நாட்டில் அன்னை நாட்டின் ஏக்கம்

கடலுக்குள் பிறந்ததை
கண்ணாடி கூண்டுக்குள்
கூட்டிச் சேர்த்தது போல்
விண்ணில் இருக்க வேண்டியதை
வீட்டில்
இருக்கி வைத்தது போல்
காட்டில் திரிய வேண்டியதை
கடைத் தெருவில்
காட்சியாக்கியது போல்
இந்திய தேசத்தை விட்டு
இந்த தேசத்தில்
நொந்து வாசம் செய்கிறேன்

பட்டத்தை தேடி
இங்கு வந்து
பட்ட பிறகு தான் தெரிந்தது
பலாக்காயை விட
கலாக்காயே மேல் என்று

சிப்பிகள் சிக்கியதால்
உப்பை உணர்ந்ததால்
கண்ணாடிக் கூடு
கடல் வீடாகிவிடாது
இந்தியப் பொருட்கள் கிடைப்பதால்
இந்தப் பெருங்கூடு
இந்தியப் பெருநாடாகிவிடாது

வருடத்திற்கு ஒருமுறை
வந்து போகலாம்
வந்து போவது நொடிகளாகிறது
வராத நொடிகள்
வருடங்களாகிறது - இந்த
வரையறையை எப்படி மாற்றுவது?

காசு இருக்கிறது
ஆனால் அது
என்னுடன் பேசுவதில்லை
காஸ்ட்லி போன் இருக்கிறது
கோஸ்டல் மீன் கிடைக்கிறது
ஆனால் அத்தனையும் என்னை
தனியே தானே வைத்திருக்கிறது
மயான காட்டில்
விருந்து நடக்கிறது - இதை
எப்படி வியந்து கொண்டாடுவது?

பஞ்சு போல் மெத்தைகள்
நெஞ்சு
படுத்துக்கொள்வதில்லையே
தனி அறைகள் எல்லாம்
தகாத உறவு போலவே
பயத்திலேயே எனக்கு
இடம் தருகிறது

தனித்திருக்கிறேன்
என்னும் புழுக்கம்
குளிர் தேசத்திலும் என்னை
விழித்திருக்கச் செய்கிறது
விடியல் தெரிந்தும்
விடியாதது போலவே இருக்கிறது

கண்ணீர் வடிகிறது
கரங்களும் விரைகிறது
கணிணி தடுத்து நிற்கிறது
கணிணியை கடந்து
கணநேரம் கிடைப்பாளா அம்மா?
தொழில் நுட்பமே
தொடும் நுட்பம் எப்போது தருவாய்?

இயந்திரங்களோடு
இயங்கிக்கொண்டிருக்கிறேன்
இதயங்களை
தேடிக்கொண்டிருக்கிறேன்

பண்டிகைகளுக்கு சமைக்கலாம்
யாருக்கு பரிமாறலாம்
நக்கலாய் பேச
நண்பர்கள் இல்லையே
அம்மாவின்
முக்கலும் முனங்களும்
எந்த மூலையிலும் தென்படவில்லையே - இங்கு
பண்டிகைகள் என்னை
எதுவுமே பண்ணவில்லையே

இந்த தேசத்தில்
செத்தவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்
மற்றவர்கள்
செத்துக் கொண்டிருக்கிறார்கள்
இந்த இடு காட்டில்
நான் ஈடு கொடுத்து வாழ்வதா?
விழுந்து விடுவேனோ
என்றே விழிக்கிறேன்
விழவில்லை என்றே
கண்மூடுகிறேன்

நினைவுகளின் துவாரங்கள்
வழியே பார்த்தால்
நிச்சயமாய் தூரமாய்
தெரிகிறேன்

எழுதியவர் : ரேமண்ட் பயஸ் (11-May-14, 6:06 pm)
பார்வை : 140

மேலே