மே-18வாவா

இதோ,
வருகிறது மே 18...
தமிழனாய் இருந்தவனின் பிறந்தநாள்..
தமிழனாய் இருப்பவனின் பிறந்தநாள்......
தமிழனாய் இல்லாதவனின்
தலை எழுத்தை மாற்றிட
வீரியத்துடன் வருகின்றன
காரியப் படகுகள்...
கடலை விழுங்கி...!

வாருங்கள் வரிசையாய்
கடற்கரை ஓரம்..-இரு
வனப்புக் கண்களில் வாரி
வாருங்கள் தமிழ் ஈரம்...

துடுப்புகளில் இறுக்கிய
வெளிச்சப் பிடிகள்
இருட்டுக் கடலின்
இருளைக்கிழிக்க....!

அடிமைக் குளிர் போக்க
விடுதலை வெயிலேற்றி
வேகமாய் வருகின்றன
வாலிபப் படகுகள்...!

பூப்படையும்
பூபாள விடுதலைக்கு
மாப்பிள்ளைமார்களை
அக்கினி படகுகள் அள்ளி வருகின்றன....!

ஆதித் தமிழன் இனம்
நாதியற்று நசிந்துப் போக ,
மீதியற்ற மரணம் அளித்த
போதிமரப் போதனையாளர்களைத்
தொலைந்த ஓர் இனத்தை
தேடி வருகின்றனர்

இவர்களும் தொலையாமல்
இருக்க
வா தோழா
நம்
வாழ்வின் சில நொடிகள் அளிப்போம்..!!

மண்ணெங்கும் மண்டியிட்டு மறைந்த
மறவருக்கு மங்களம் பாடுவோம்.......
கண்மல்கும் நீர் முத்தெடுத்து
ஆரத்தி எடுப்போம்......

சங்கில் தமிழ்ப் பண்ணெடுத்து
முழங்குவோம்...
"எங்கும் தமிழே..எவரும் தமிழரே,, "
சிங்கங்கள் சீறி வரும்
நாளும் வந்ததென்று
குங்கும நிற குருதியால்
சபதமும் எடுப்போம் ..

முடங்கி இருப்பது
முழு வீச்சு மூச்சுக்காக :
அடங்குவது அச்சமுற்றல்ல
என்று பரப்புவோம்...

இணைந்த கரங்கள் இழந்ததில்லை
பிரிந்த கைகள் பெற்றதில்லை..
தமிழனுக்குக் குரல் கொடுக்காத
தலைகளுக்கு ஏன் இனி தலைப்பாகை..

மடை திறந்த வெள்ளமென வா..வா..
தடைகள் தகர்த்து தலை வணங்க வா...வா...

இன்று மே-18..
இதோ,
வருகிறது மே 18...
தமிழனாய் இருந்தவனின் பிறந்தநாள்..
தமிழனாய் இருப்பவனின் பிறந்தநாள்......
தமிழனாய் இல்லாதவனின்
தலை எழுத்தை மாற்றிட
வீரியத்துடன் வருகின்றன
காரியப் படகுகள்...
கடலை விழுங்கி...!

எழுதியவர் : அகன் (14-May-14, 4:14 pm)
பார்வை : 96

மேலே