இயற்கை வீதியில் எனது யாத்திரை

தொடும்போதே
என்னை மலராக்கி
தன்னை விரலாக்கும்
பூவின் ஸ்பரிசம்….

சிறகடித்து சிறகடித்து
சற்று நேரம்
அப்படியே மிதக்கும்
கடற் பறவைகளின்
சிறகுகளில்
இறகாய் ஒட்டிக் கொள்கிறது
மனம்….

வரிந்து கட்டி ஓடிவரும்
நதிகளுக்குத்தான்
எத்தனை எததனை ஆசை
தங்கள் பெயரை
கடலென சூடிக்கொள்ள?

வயல் வெளியில்
தலையசைக்கும்
நெற்கதிரின் கதிர் வீச்சில்
சரிந்து விழும் கவிதை…..

கிளையிலிருந்த
கனாக்களுடன்
முதல் முறையாய்
தரை தொடும்
இளமை கடந்த
இலைகள்….

எந்த விசிறியின்
விளம்பரத்திற்காய்
பாலை நிலத்தில்
பூனை நடை போடுகின்றன
ஒட்டகங்கள்?

குருவிகளே அசந்துவிடும்
தூக்கணாங்குருவிக் கூட்டிற்கு
சரவிளக்காய்
மின்மினிகள்….

முகம் தெரியும் உயிர்களின்
சுரங்களையெல்லாம்
மீட்டி மீட்டி
இன்று வரை
தன் முகம் காட்டாத காற்று…

உலகிலும் உன்னிலும்
பெரும் பகுதி
நானே தான்,
மல்லாந்து படுத்திருக்கும்
சமுத்திரம்…

உருகும் இதயம்
உயர்ந்தே நிற்கும்
சொல்லாமல் சொல்கிறதோ
வெண்பனிச் சிகரம்...?

பளிங்காய் மாறிய
தாமரைக் குளத்தில்
பாங்காய் கண்ணசைக்கும
குட்டி குட்டி நட்சத்திரங்கள்…..

ஆடையின்றி உலா வரும்
வளர் இளம் நிலா,
ஏரியைக் கூட
ஏதேன் தோட்டமாய்
மாற்றிவிடுகிறது.

நிசப்தமான வானில்தான்
நிர்வாணமும்
களை கட்டுகிறது...

மேகங்கள்
இருளும் போதெல்லாம்
தாய் வீட்டிற்கு
நடை கட்டும்
மழைத்துளிகள்…..

நிறத்தைப் பிரிப்பவர்க்கே
விண்ணரசியென
இங்கேயும் ஒரு
ஜனகனின் வில்

ஆயிரமாயிரம்
கரங்கள் நீட்டி
பூமியின் துயிலெழுப்பும்
சூரியன்

பிரபஞ்சத்தின்
அத்தனை ஈர்ப்பையும்
மொத்தமாய் விழுங்கி விட்டு
வெகுளியாய்
மழலை...

இப்படி
எழுதிக்கொண்டே போகலாம்
பேனா மையில்
ஆயுள் கரைந்துவிடும்…….

உலகம் இன்னும்
அழகாய் இருந்திருக்கும்

சிருஷ்டியின் முதல் ஜோடி
அறிவின் கனியை
ருசிக்காது இருந்திருப்பின்

உலகம்,
இன்னும் இன்னும் அழகாய்...!

எழுதியவர் : ம.பிரபு, ஊட்டி (14-May-14, 10:08 pm)
சேர்த்தது : கவித்தாசபாபதி
பார்வை : 101

மேலே