இயற்கை தபோவனம்
ஆற்றங்கரை யோரம்
ஆதி மனிதன் நீ
அலைந்து சேர்ந்த நேரம்
அதிசயமாய் விவசாயம் கற்றாய்.
கல்லைப் பின் கருவியாக்கினாய்
சொல்லைப் பின் கவிதையாக்கினாய்
காட்டை ரசித்தாய் - பல
கலைகள் வளர்த்தாய்
காலத்தின் மேடு பள்ளங்களை
கடந்து முன்னேறி
புது யுகத்தின் கள்வெறியில்
இன்று இடறி விழுந்தாய்....
எழவே முடியாதப்படி....
*
நீ விறகு வெட்டியாய்
இருந்த போது
வனம் மணமாயிருந்தது.
வனக் கொள்ளையனாய்
வளர்ந்த போது
வனம் மயானமாயிருக்கிறது.
*
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
சேதி தெரியுமா?- இது
மனக்குருவி மழையாடும்
பழைய பாட்டு.
இப்போ அந்தக்
குருவியே இல்லே
இது வேட்டு..!
செல் போன் கோபுர
இரும்புக் காடுகளில்
சிட்டுக்குருவி யெங்கே
சிறகடிப்பது?
*
நீரெல்லாம் ஆறாக
நீந்தி வந்தப்போ
ஜோராய் இருந்துச்சு;
அங்கங்கே இப்போ
தடுப்பணையாகி-நீர்
கொடுப்பினையே
இல்லாமப் போச்சு......
வற்றாத ஜீவ நதிகளோடும் நாட்டில்
நதிகள். இணைப்பில்லாது
வெற்றுச் சத்தங்களில்
ஒப்பந்த காகிதங்களில்
கானலாகிக்கொண்டே......
நிலமும் மனிதா உன்
அதீத 'போல் வால்ட்'
ஐ ஜம்ப்' செயல்களால்
இயற்கையை தாண்டியதால்.....
நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது
இந்த உருண்டை உலகம்
மணற் கொள்ளை - வண்டல்
மண் கொள்ளை...நீ
தோண்டித் தோண்டி மண் மாதாவே
போண்டியாகிப் போனாள்
நீருக்காக இன்னொரு
உலகப் போராம்.
உன் போதை தெளிந்தால்
அதை நீ தடுக்கலாம்.
இறைவனை ஒதுக்கிவிட்டு
தவம் நோற்போம்.
இயற்கை தபோவனத்தின்
ஈர அழகில் கோஞ்சம்
எதிர் கால சந்நதிக்காய்
மிச்சம் வைப்போம்!