உதவிடுங்கள் உள்ளோரே உலகிற்கு

​பள்ளிக்கு செல்லும் பாலகர்கள்
பார்த்திடும் பார்வையிலும் ஏக்கம் !
பள்ளிக்கு செல்பவர்களை பார்க்கும்
பால்யத்தின் பார்வையிலும் ஏக்கம் !

வாய்ப்பும் வசதியும் அமைந்ததால்
வாசிக்க செல்கின்றனர் ஒருபுறம் !
வாழ்வதற்கே வசதியிலா வறியோர்
வாய்ப்பிறகாக ஏங்குவோர் மறுபுறம் !

ஆரம்பக் கல்வியே அடிதடி விற்பனை
அள்ளித் தருவோருக்கே இடமுண்டு !
அடித்தள மக்களோ தள்ளுபடி இங்கே
ஆர்வம் இருந்தும் ஆறாத உள்ளங்கள் !

திரும்பிப் பார்க்குது திக்குத் தெரியாமல்
சிறகு முளைத்தும் பறக்க முடியாமல் !
அரும்பிய தளிர்கள் விரும்பிய வண்ணம்
கற்றிட வழியின்றி சுற்றுது வாழ்ந்திட !

ஏழை வர்க்கமேன் என்றுமே தவிக்குது
பாழும் பணம்தான் மக்களைப் பிரிக்குது !
தாழ்ந்த நிலையேன் தரணியில் சிலருக்கு
வாழ்வில் வறுமை நிலையேன் பலருக்கு !

மனிதனின் வாழ்க்கை மண்ணில் ஒன்றே
மாற்றமும் ஏன்தான் வாழ்விலே என்றுமே !
முடிவு முடிவில் ஒன்றுதானே மனிதனுக்கு
ஏற்றமும் இறக்கமும் ஏனோ வாழ்விலே !

உதவிடுங்கள் உள்ளோரே உலகிற்கு நீங்கள்
உணவோடு கல்வியும் அவசியம் அகிலத்தில் !
இல்லாத இதயங்களின் கல்லாமை நீங்கிட
கனிவோடு உதவுங்கள் கல்வியை பெற்றிட !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (17-May-14, 8:29 am)
பார்வை : 385

மேலே