கனவுப் பூக்கள்
பிரியமுள்ள என்னவளுக்கு!
முதன் முதலாய் உன்னை நான்
சந்தித்த போது-
உன் சின்னக் கண்களிலிருந்து
வண்ணத் தூறல்கள்...
உன் பார்வை என்னை
பாசமாக ஸ்பரிசித்தது!
உன் பதினாறு வயதின் ஸ்பரிசம்
என்
பதினெட்டாம் வயதின்
விளிம்பினிலே பதியமானது!
-வளர்ந்ததெல்லாம் கனவுப்பூக்கள்!
உன் மடியில் தலை வைத்து
உரிமை கீதம் நானிசைக்க-
உன்னிதழை என்னில் வைத்து
என்னை நீ மௌனமாக்க-
ஆயிரமாயிரம் இன்பத் தூறல்கள்
என் நெஞ்சில் மெல்ல விழ-
நீ சிரிக்க...
நான் சிலிர்க்க...
-என்னிலே மலர்ந்ததெல்லாம்
கனவுப் பூக்கள்!
கனவுப் பூக்களின் விளிம்பினிலே
உன் காதல் புன்னகையை
வண்ணந்தீட்ட விழைந்தேன்-
பூக்களைச் சரமாக்கி
உன்னிடம் சமர்ப்பித்தேன்-
நீயோ-
என் கனவுகளின் விளிம்புகளைக்
காயமாக்கினாய்!
கனவுகளின் காம்புகளைக்
கத்தரித்து விட்டாய்!
கனவுகளைத் தாங்கி நின்ற
மனசுக்குள்ளே-
ரத்தம் வராத ரணம் உணர்ந்தேன்!
என் நெஞ்சுக்குள் அரும்பிய
உன் நினைவுகளை
நெஞ்சுக்கே மருந்தாக்கினேன்!
என் கற்பிழந்த கற்பனைகளை
கனவுப் பூக்களின்
காம்புகளாக்கினேன்!
கனவுகளின் விளிம்பினிலே
என் கண்ணீரையே
வண்ணந்தீட்டினேன்!
ப்ரியமுள்ள என்னவளே!
நீ புன்னகைக்க மறுத்ததால்-
மெல்ல மெல்ல மலர்ந்த
என் கனவுப் பூக்கள்
கண்ணீர்ப் பூக்களாகவே
காட்சியளிக்கின்றன!
ப்ரியமுள்ள என்னவளே!
மறு பிறவி எடுத்த
என்
மலர்ச் சரங்களை ஏந்தி
உனக்காகக் காத்திருக்கிறேன்-
உன் ஒரே புன்னகையின்
இன்ப விடியலில்
என் அத்தனை
கண்ணீர்த் துளிகளும்
கலைக்கப்படும் என்ற
கனவுகளோடு!
- ப்ரியங்களுடன்
"உன்னவன்"
25.01.1994