புன்னை மரத்தடியில் என்னவன் – வெண்பாக்கள் 36
இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்
புன்னை மரத்தடியில் என்னவன் நின்றுதான்
புன்னகைத்தே ஆதுரமாய் பொன்னென - என்னை
பெருமிதமும், மிக்கவே பேரன்பும் கொண்டு
பிரமிக்க வைக்கிறான் காண்! 1 *
கண்மூடி நாணமுடன் வெட்கத்தில் நானிருக்க,
கண்விழித்தேன்! அந்தோ! கனவன்றோ - கண்டேன்;
மலர்க்கொத்தும் அன்பான முத்தமும் இன்றி
பலர்நகைப் பிற்கிடமாய் நான்! 2 *
பல விகற்ப பஃறொடை வெண்பா
உன்னையன்றி யாரையும் உள்ளத்தில் எண்ணாது
உன்னையே நெஞ்சினிலே உள்ளுகிறேன் - என்காதில்
சத்தமின்றி மெல்லவே சன்னமாய்ச் சொல்லித்தான்
முத்தமிட்டு வாசமலர், மங்கையென் மன்னவன்
சூட்டுகிறான் என்கருங் கூந்தலில்! நாணமுடன்
வெட்கத்தில் கண்மூடி நான்! 1 *