அன்பின் மனையாளுக்கு
அன்பின் மனையாளுக்கு !
.....................................................
எம் உணர்வுகள் மதியா
தேசத்திலிருந்து ...
என் உயிரினும் இனிய
நேசத்திற்கு .
இங்கு பாலைவனத்தில்
உன் நினைப்பில் - என்
சுவாசம்,
பூவையே அங்கு நீ
எவ்விதம் ?
.................................................
இடைவேளையின் போது
எழுதுகிறேன் - இடையில்
மணி அடித்தால் புறப்பாடு,
புருவம் உயர்த்தாமல்
புரிவாய் என்னை .
....................................................
ஊரில் மணிக் கணக்கில்
பேசினாலும் - இங்கு எல்லாம்
தனிக் கணக்கு தான் !
ஆதலால் ....
மணிக்கணக்கையும்,
Money கணக்கையும் ..
சேமித்து வைக்கிறேன்
நாம் சேர்ந்து செலவு செய்ய .
அதுவரை கொஞ்சம்
பொறுத்துக்கொள் ..
இது நீண்ட ஆடி என
கருத்தில் கொள் ...
வசந்தத்தை வரவேற்க .
கொஞ்சம் நிசப்தமாய்
இருப்போமே !
................................................................
என்னவளே உன் நினைப்புகள்
என் நிழலாய்த் தொடர்கிறது ...
விடியலிலும் சாயலிலும்
விதம் விதமாய் மாயம் செய்கிறது .
மீட்டும் மெல்லிசையாய்
உன் புலம்பல்கள் ..
கேட்க கேட்க சலிக்காத
செல்போனில் பதிவு செய்து வைத்த
உன் செல்ல கரையல்கள் ...
மீட்டல் செய்து பார்க்கிறேன்,
கூட்டிச் செல்கிறது
வாழ்க்கைப் பயணத்தை ...
................................................................
உயிரை அங்கே விட்டு விட்டு
உலாவுகிறேன் நடைபிணமாய் ,
வாழ்க்கை ஆயிற்றே ?
நெரிசலும், நெருடலும் சகஜம் தான்.
எங்கோ தூரத்தில் விடிவெள்ளி
மின்னுவது பரீட்சயமாய் தெரிகிறது;
இது பரீட்சை காலம் ..ஆகையால்
பட்டை தீட்டிக்கொண்டிருக்கிறேன்
என்னை !
தினம் சீருடை அணிந்து செல்லும்
வழியெங்கும் ..நாளை சீருடன்
வாழவேண்டுமென்ற எண்ணப்பூக்கள்
தான் பூத்துக் குழுங்குகின்றன.
......................................................................
ரோட்டுக்கடையில்
நொறுக்குத் தீண் விரயமில்லை
இப்போதெல்லாம் ;
சிறுக சேர்க்கிறேன் சிட்டுக்குருவியாய்,
கோட்டை கட்டும் எண்ணமில்லை
முதலில் நாம் வாழ ஒரு
வீட்டைக்கட்டும் கிரயமிருக்கிறதே !
..................................................................
எத்தனை நாளாயிற்று உன்
கைப் பக்குவத்தில்
சப்புகொட்டி சாப்பிட்டு ?
இங்கு எல்லாமே
அவசர சமையல் ,
அரை அவியல் தான் ..
புசிப்பது பசிக்காக
மட்டுமே .
ஜீவனம் என்றாலே
ஜீரணம் என்றாற் போலும்,
எல்லாம் ஜீரணிக்க பழகிவிட்டேன்
முதலில் சீராய் நிற்க தளம் வேண்டாமா ?
வீராய் இறங்கிவிட்டேன் களத்தில் .
.....................................................................
இதோ ஒலிக்கிறது
மணி ஓசை !
இதயம் பிளக்கும்
இடி ஓசை !
இணைபிரியும் தறுவாய்
கண்மணி விடை தருவாய்!
உன்னோடு உரையாடும் போது
இதயம் இலேசாகிப் போனாலும் ,
ஒவ்வொரு பிரிவிலும்
இதயம் இரும்பாக்கியே பிரிகிறேன் .
..............................................................
இரும்பு நான் வேலைப் பார்க்கும்
இயந்திரத்திற்கு மட்டுமல்ல ..
அவ்வப்போது இதயத்திற்கும்
அவசியம் என்பதை இணங்கி
பிரிகிறேன் .
இதழ் சுளிக்கதே ..
எந்த இரும்பிலும் மிஞ்சிய
வன்மையை உணர்கிறேன் .
பெண்மையே உன்
கண் மை களைகையில்...
சொல்லாத பல கதை
நிலுவையில் ....
தொடர்கிறேன் மீண்டும்
அண்மையில் ...
என்றும்
உன் நினைவுகளுடன்...
- நிஷான் சுந்தரராஜா -
(கடல் கடந்து .. இணை பிரிந்து வாழும் ஓர் ஆடவன்
தன் துணைக்கு எழுதும் மடல் .. என் கற்பனையில்)