நானும் ஒரு நட்சத்திரம் தான்
வீதிகளுக்கு
வெளிச்சம் போட்டு வருகிறேன்
வீட்டுக்கு வந்ததும்
அழுகிறேன்...
இனிய மனைவியே
என்னை வையாதே
தளர்ந்து போகிறேன்
என்னை ஒரு சுவராக தாங்கு.
நான்...சிலிர்த்துப் போனால்
சிறகாக தூக்கு
பானை உருண்டாலும்
உன் உதடுகளில்
பூக்களை விரி.
சோகத்தை
ருசி ... என்
ராகத்தை
ரசி!
மை தொட்டுக் கொடு
ஒரு கவிதை எழுதிக் கொள்கிறேன்
பிறகு, மெல்ல பேசு
உன்னால்......உறங்கிவிடுகிறேன்
நாளை இரவில், அல்லது
ஏதோ ஓர் இரவில்
நானும் மின்னுவேன்
ஒரு நட்சத்திரமாய்
அது வரை,
இனிய மனைவியே
என்னை வையாதே...! (1988)
('சிகரங்களை நோக்கிய சிறகடிப்புகள்' நூலிலிருந்து)