உறவுகள் தொடர்கதை

(ஃபரான்சிஸ் பிரபாகர், வயது 65)
என் சுயத்தை மெல்ல மெல்ல நான் இழந்து கொண்டிருக்கிறேன். எனக்கான சாயலில் யாரோ ஒருவர்தான் இப்போது இருக்கின்றார். நான் என்றிலிருந்து இப்படி ஆனேன் என்று எனக்கு துளியும் ஞாபகம் இல்லை. எனக்கான என் முதல் முகம் எங்கேயோ நழுவிப் போய்விட்டது. தற்காலிகமாக அது மறைந்து போனதா, இல்லை முழுக்க முழுக்க அழிந்தே போனதாவென்று தெரியவில்லை. ஒரு காலத்தில் மிகவும் கலகலப்பாக இருந்தவன் தான் நானும். மற்றவரைப் போல இழப்புகளை நினைத்து அதிகம் வருந்த, ஆதாயங்களை நினைத்து அதிகம் மகிழ, ஒரு சராசரி மனிதனைப் போலத்தான் இருந்தேன். நான் இருக்கும் இடமே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்களுக்கு என்றேனும் கடைசி மீட்பை எதிர்பார்த்து கையசைக்கவும் திராணியற்று ஒரு தனித் தீவில் இருப்பது போன்று தோன்றி இருக்கிறதா? ஆனால் எனக்கு எப்போதுமே அப்படித்தான் இருக்கிறது. என்னைத் தனிமை படுத்துவதற்கு பல யுக்திகளை கையாளுகிறார்கள். எனக்கு மிகவும் கோபக்காரன் என்ற முத்திரை பதிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகி விட்டது. என்னல் அதை கிழித்தெறிய முடியவே இல்லை. அப்படி நான் எவ்வளவோ முயன்று அதைக் கிழிக்க முற்பட்டாலும் அவர்கள் கைகளில் தயார் நிலையில் என் முகத்தில் ஒட்டுவதற்கு வேறு பல முகமுடிகள் இருக்கிறது. பல முறை எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன். நான் நிச்சயம் அப்படியில்லை. என் இயலாமையின் கடைசி நொடி வரை கூட எனக்கு அப்படியான கோப உணர்வு இருந்ததே இல்லை. ஏன் என்னை இப்படி தனிமைப் படுத்துகிறார்கள் என்பதை என்னால் ஓரளவிற்கு யூகிக்க முடிந்தாலும், அதற்கான காரணங்களை என்னால் துளியும் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. என் மன ஓட்டங்களை இது நாள் வரை யாரும் படித்ததில்லை. ஒரு நிராயுதபாணியாக என்னை நிற்க வைத்துப் பார்ப்பதில் என் உறவுகளுக்கு ஏதோ ஒரு குரூர மகிழ்ச்சி இருந்திருக்க வேண்டும். என் தனிமை குறித்தான எல்லைகளை வகுப்பவர்கள் அவர்களாய் இருக்கும் பட்சத்தில் என் சுய பச்சாதாம் என்னையே சுட்டெறிக்கிறது. எந்தத் தருணத்திலும் நான் அழக்கூடாது என்பதில் மட்டும் மிகவும் பிடிவாதமாக இருந்தேன்.
அன்புள்ள மகனுக்கு, நான் போகிறேன். அனைத்திற்கும் நன்றி. இப்படிக்கு அப்பா. கூடத்தில் இருக்கும் நாள் காட்டியின் ஓரத்தில் எழுதிவிட்டு, வீட்டை விட்டு வேகமாக வெளியேறினேன்.
(யுகேந்திரன், வயது 26)
ராமேஸ்வரத்திற்குச் செல்லும் தொடர்வண்டி வர இன்னும் அரை மணி நேரம் இருந்தது. நடை மேடையில் என் பார்வையை மேய விட்டேன். முன் பதிவு இல்லாத பயணிகள், நடை மேடையின் ஓரம் வரிசையாக நிற்க ஆரம்பித்தார்கள். தொலைவில் ஒரு மூதாட்டி சுவற்றில் வரைந்திருக்கும் மாதாவின் படத்தின் முன் கண்ணீர் வழிய மனமுறுகி வேண்டிக் கொண்டிருந்தாள். பத்திரிக்கைக் கடையில் ஒரே ஒருவர் மட்டும் பத்திரிக்கைகளை வேகமாக எடுப்பதும் புரட்டுவதுமாக இருந்தார். என்னிடம் இருக்கும் தமிழ் நாளிதழை சுருட்டி இருக்கைகளின் இடையில் இருக்கும் சிறிய பிளவில் சொறுகினேன். இரண்டு நாட்களுக்குத் தேவையான உடைகளை வைத்திருக்கும் சிறிய பையை தோளில் மாட்டிக்கொண்டு விரைந்தேன். என் முன் தடுமாறி விழப்போன முதியவரைப் பார்த்ததும் என் நடையின் வேகம் குறைந்தது. அவரை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு அழைத்துச் சென்றேன். சிறிய புன்னகையுடன் என்னைத் தொடர்ந்து வந்தார். வயது சுமார் 70க்குக் குறையாமல் இருக்கும். முகத்தில் படர்ந்த ஒரு வார முடி, கருப்பும் வெள்ளையுமாக திட்டு திட்டாக அப்பிக் கிடந்தது. அதற்குள் முப்பது பேருக்கு மேல் வரிசையில் நின்று விட்டார்கள். முதியவரை என் முன்பு நிற்க வைத்தேன். அவரிடம் இருந்த சிறிய கான்வாஸ் பையில் அதிக இடத்தை அடைத்திருந்தது ஓரே ஒரு தண்ணீர் பாட்டில்தான். கீழே அமர்ந்து கொண்டு மிகவும் சிரமத்துடன் தண்ணீர் பாட்டிலைத் திறந்து இரண்டு முடக்கு நீரை அவர் அருந்தியதோடு சரி. ரயில் வந்தவுடன் வரிசை தாறுமாறாகக் கலைந்தது. முதியவரிடன் என் பையை கொடுத்து அங்கேயே இருக்கச் சொல்லி கூட்டத்தோடு கூட்டமாக முண்டி அடித்து இடம் பிடித்தேன். ஏராளமான எதிர்ப்புக்கள் இருந்தது. முதியவரை ஜன்னல் வழியாக அழைத்தேன். தள்ளாடியபடி வந்தவர் என்னை என் இருக்கையில் அமரும்படி செய்கையில் கூறி, ரயில் பெட்டியின் கழிவரைச் சந்தில் உட்கார்ந்து கொண்டார். பெரிய போராட்டத்திற்குப் பிறகு முதியவரை சம்மதிக்க வைத்து என் அருகில் அமரவைத்தேன். ரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிடம் இருந்தது.
ரயில் கிளம்பி ஒரு மணி நேரம் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. பிறகு ஒரு வழியாக செங்கல்பட்டைத் தாண்டியவுடன், என் பையில் வைத்திருக்கும் உணவுப் டப்பாவை எடுத்து , அதில் இருக்கும் ஆறு இட்லிகளில் மூன்றை தனியாக மூடியில் வைத்து முதியவரிடம் கொடுத்தேன். முதலில் மறுத்தவர் பின்பு தயக்கத்துடன் வாங்கிக்கொண்டார். நடுங்கும் விரல்களால் இட்லிகளை விண்டு கொண்டே என்னைப் பார்த்தார். என்னைப் பற்றி அவர் விசாரிக்கும் முன்னமே அவரிடம் நான், அம்மா அப்பாவுக்கு திதி கொடுக்கத்தான் ராமேஸ்வரம் போவதாகக் கூறினேன். எனக்கு விபரம் தெரிந்த வயதில் இருந்து தொடர்ந்து அவர்களுக்கு தவராமல் திதி கொடுக்கிறேன். அவராகப் பேசட்டும் என்று நான் காத்திருந்தேன். முதியவர் எதுவும் பேசவில்லை. ஜன்னல் வழியாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். “நீங்களும் ராமேஸ்வரம்தானே?”என்ற என் கேள்விக்கு தலையை மட்டும் மெதுவாக ஆட்டினார்.
ராமேஸ்வரம்:
முதியவரைப் பற்றி அறிந்து கொள்ள யுகேந்திரன் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அவனைப் பொறுத்தவரை முதியவர் எதோ சில காரணங்களுக்காக வீட்டை விட்டு வேளியறி இருக்கலாம், அல்லது வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்றே எண்ணினான். முதியவர் இப்போது தனிமையில். துடுப்பை வலிக்கும் சக்தியில்லாமல் காற்றின் திசைக் கேற்ப தன் வாழ்க்கையை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார் என்று மட்டும் அறிந்து கொண்டான். யுகேந்திரனைப் பற்றியும் முதியவர் அறிந்து கொள்ள எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை. அவரைப் பொறுத்த வரை தாய் தந்தையை இழந்த ஒரு இளைஞன். ஒரு வகையில் இருவரின் நிலையும் ஒன்றுதான் என்றாலும், வாழ்க்கையை எதிர் கொள்ளும் நம்பிக்கையில்தான் இருவருக்கிடையே வித்தியாசம் இருந்தது. இருவரும் சேர்ந்தே கடற்கரையில் காலை நனைத்தார்கள். கடவுளை தரிசித்தார்கள். உணவருந்தினார்கள். காலார நடந்தார்கள். நீண்ட நேரம் அமைதியாக இருந்த முதியவர் யுகேந்திரனிடம் “காலையிலேயே உங்க அப்பா அம்மாவுக்கு திதி கொடுப்பேன்னு பாத்தேன்” என்று முதன் முறையாக அவன் கண்களைப் பார்த்துக் கேட்டார். அந்தக் கேள்வியை முதியவரிடம் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தவன் போல “வேணாம்னு தோணுது. ஏன்னு தெரியலை. எங்கூடவே வந்திடுங்கப்பா. நாம ரெண்டு பேரும் ஒன்னாவே இருந்திடலாம். ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா, அன்பா. உங்களை நான் நல்லா பாத்துக்குவேன். என்னப்பா சொல்றீங்க?” என்றான் யுகேந்திரன். முதியவர் மறுப்பெதுவும் கூறாமல் தான் கொண்டு வந்திருந்த பையை யுகேந்திரன் பையினுள் வைத்தார்.