இன்னும் ஒரு ஏக்கம்

ப்ரியமுள்ள என்னவளே!

பதினெட்டாம் விளிம்பினிலே
என்
பருவப் பறவை சிறகடித்த போது-

நீ
பத்தொன்பதாம் வாசற்படியிலே
பறந்து திரிந்தாய்!

நீ மூத்தவளென்று தெரிந்தும்
உன் முகம் பார்க்க ஏங்கினேன்
உன் பார்வைகளுக்காய் தவித்தேன்!

உன் புன்னகைகள் வேண்டுமென்று
என்னமாய் துடித்தேன்!

உன் முந்தானையின்
ஒவ்வொரு அசைவுகளிலும்-
ஒவ்வொரு கவிதைகள் படித்தேன்!
ஓராயிரம் காவியங்கள் படைத்தேன்!

என் பருவச் சிறகினிலே
நிழலாகத் தெரிந்தவளே!

"உன்னை நான் காதலித்தேன்!"

ப்ரியமுள்ள என்னவளே!

நீ-
தொட முடியாத
தூரத்திலிருந்தும்

காதல் விரல் கொண்டு
கட்டியணைக்க முயன்றேன்!

நீ விளக்காயிருந்தும்
உன்னை
விட்டிலாக வட்டமிட்டேன்!

காலத்தை வென்று-
காதலைத் தெரிவிக்க
உன்னை உரசினேன்-

என் சிறகுகளின் விளிம்பினிலே
சின்னச் சின்னக் காயங்கள்...

என் காதல் கீதங்களில்
சுருதியற்ற ராகங்கள்...

என் புல்லாங்குழலிலே
எக்கச்சக்க ஓட்டைகள்...

*
என் பருவக் கனவுகளில்
பதிந்து விட்ட சித்திரமே!

எத்தனையோ சூர்யோதயங்கள்
கடந்த பிறகும்-
என் காயம்பட்ட சிறகுகளில்
காயங்கள் ஆறவில்லை!

என் ராகங்களிலிருந்து
சுருதியும் எழும்பவில்லை!

என் புல்லாங்குழலின்
தேவையற்ற ஓட்டைகள்
இன்னும் அடைபடவில்லை!

என் நினைவுகளின் மடியிலிருந்து
இன்னும் நீ
இறங்கவேயில்லை!

ப்ரியமுள்ள என்னவளே!

என் மடியில் தவழ்வதற்காய்
உன்னை அழைத்தேன்!

நீயோ-
உன் நினைவுகளை மட்டும்
என்னில் தவற விட்டு விட்டு-
எங்கோ மறைந்து விட்டாய்!

என்னவளே!

என் இதயத்தில் பதிந்திருக்கும்
உன் நினைவுகளென்னும்
காதல் காவியங்கள்-

அடுத்த ஜென்மத்திலே
தன்னை அரங்கேற்றிக்கொள்ள
உன்னைத் தேடி வரும்!

அப்போதாவது-
உன் மனக்கதவை திறந்துவை!

"எனக்காக மட்டும்!"

10.02.1994

எழுதியவர் : மனோ & மனோ (21-May-14, 3:51 pm)
Tanglish : innum oru aekkam
பார்வை : 114

மேலே