-குறுந்தொகை மாட்சி—05----
-குறுந்தொகை மாட்சி—05
கடற்கரை ஓரம் வாழ்ந்துகொண்டிருந்த நாரையொன்று, ஆண்டின் முதிர்வால் கிழப்பருவம் எய்தி, சிறகுகள் உதிர்ந்து, பறக்கும் ஆற்றலை இழந்ததுவாகத் தன் கண்ணெதிரில் கிடக்கும் மீனையும் பற்றித்தின்ன மாட்டாததாக வருந்திக் கிடந்தது;
ஆசை பெரிதும் உடைய அந்த நாரைக்கு, அயிரை மீன் உணவில் அளவுகடந்த ஆசை!
அயிரை மீனோ கிடைத்தற்கு அரியது; எளிதில் கைப்பற்றக் கூடியதன்று;உற்று நோக்கி, ஓடிவிடாதவாறு விரைந்த குத்த வல்ல பறவை இனங்களாலும் பற்றுதற்கு அரியதாகும் அவ்வகை அயிரை மீன்கள்!
தான் வாழும் கீழ்க்கடல் நீரில் வாழும் அயிரையின்பால் ஆசை கொள்ளாது, இரவும் பகலும் இடைவிடாது வந்து போகும் வணிகப் பாய்மரக் கப்பல்கள் புழங்கும் தமிழ் நாட்டின் மேற்குக் கடற்கரைத் தொண்டி நகர்த் துறைமுக நீரில் வாழும் அயிரைமீனின் மீது ஆசைகொண்டது. அந்நாரை. அவ்வயிரை மீன் கிடைத்தற்கரியது, அதன் மேல் தனக்குள்ள ஆசையைக் கைவிட வேண்டுமென்பதை எண்ணிப்பாராது அம்மீனை எண்ணி எண்ணிப் பார்த்து வருந்தி வாடிக் கிடந்தது.
அந்நாரையின் நிலையிலேயே ஓர் இளைஞன் செல்வத்திற் சிறந்த,ஊர்த்தலைவரின் மகளான(செல்வாக்குள்ள) ஒரு பெண்ணை, அவளை அடையத் துணை புரியவல்ல நண்பர்கள் இல்லாத நிலையில், தன்னால் எளிதில் அவளை அடைய முடியாது என்ற நிலையிலும் விரும்பினான்;
மாண்புடைய மனைவியாகக் கூடிய அழகி அவளென்று, தன்னிலை மறந்து, பெற மாட்டாது கலங்கக் கூடிய அளவுக்கு, அவள் மீது காதல் கொண்டு வருந்திக் கொண்டிருந்தான்;
‘தான் விரும்பும் பெண் தனக்குக் கிடைப்பதற்கு அரியவள் என்பதை மறந்து, அவள் நல்லவள், நல்லவள் என்று மட்டுமே எண்ணிக் காதல் மேலிடுகிறாயே' என்று தனக்குள்ளேயே தனது நெஞ்சத்தை 'மட நெஞ்சே!' என்று திட்டிக் கொண்டான்;
இதைத்தான் சொல்கிறது இந்தப் பரணர் என்ற புலவரின் குறுந்தொகைப் பாடல்- 128:
குணகடல் திரையது பறைதபு நாரை,
திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆரிரைக்கு அணவந் தாங்குச்
சேயள் அரியோள் படர்தி,
நோயை நெஞ்சே! நோய்ப்பா லோயே!
--------------------------------------------------------------
குணகடல்= கீழைக் கடல்; பறைதபு நாரை= முதுமை காரணமாகச் சிறகுகள் இழந்த நாரை; பொறையன்= சேரன்; ஆரிரைக்கு= பெறற்கரிய உணவுக்கு; அணவந்தாங்கு= தலையை மேலெடுத்தாற் போல; (அண்ணாத்தல், அங்காத்தல், என்பதும் இதுதானோ?) சேயள்= நெடுந்தொலைவில் உள்ளவள்( செல்வாக்கின் காரணமாக); அரியோள்= பெறுவதற்கு அரியவள்; படர்தி=(அவளை வேண்டிச்) செல்லுகின்றாய்! நோயை= வருந்துகின்றாய்! நோய்ப்பாலோய்= வருத்தப் படுவதற்கான் ஊழ்வினையுடையவனாயுள்ளாய்!
=============================== ============
எட்டாக் காதல் எண்ணிப் பார்த்துக்
கிட்டா தாயின் வெட்டென மறந்தே
இளைஞர் கூட்டம் உழைத்துமுன் னேற
முன்வரும் போதே என்வள
நாடும் உயரும்! நன்மைகள் பெருகுமே!
யோசிப்போமா?