வாழ்க்கை வாழ்வதற்கே
சிப்பிக்குள் முத்தாக
சிந்தனையின் வித்தாக
சிரிக்கும் மழலையே
சினம் கலைக்கும் சாரலே!
பரந்த உலகிலே
திறந்த புத்தகமே
வருத்தம் போக்கிடும்
விருத்தம் நீயடா !!
நாளை எண்ணியே
இன்று புலம்பிடும்
விந்தை மனிதர்க்கு
தந்த தத்துவம் மழலைசிரிப்பன்றோ !!
ஜனிக்கும் போது அழுது பிறக்கிறோம்
ஜொலிக்கும் போது சிரித்து மகிழ்கிறோம்
இடையிடையே
இன்பதுன்பத்தை கண்டு புலம்பி தவிக்கிறோம்
இறுதி நாளை எண்ணி வருந்திதொலைக்கிறோம்
வாழும் காலம் புன்னகைத்தால்
வரும் நோயும்நொடியும் விலகி ஓடும்
வழி மறந்து விழிபிதுங்கி
வாழ்வை தொலைக்கிறோம்
ஏதும் அறியாமல் பிறந்தகுழந்தை நீயடா
சூதும் வாதும் தந்ததாரடா
போதுமென்ற மனமிருந்தால்
சாது வாழ்க்கை வாழ்ந்து பாராடா !!
யாதும் ஊரே யாவரும் கேளீர்
மறந்து மதத்தில் நுழைந்து
மதம் கொண்ட களிறாய் மாறி
மனிதம் செத்ததால் விளையும் நிலையடா !!
குழந்தையாக வாழும் காலமே
நீ வாழ்ந்த காலமாகுமே !
கபட நாடக நடிகனாகையில்
வாழ்க்கை தொலைந்து வலியில் தவிக்குமே!!