பிரிவு வந்தாலும் பரிவோடு வா எந்தங்கையே
அரும்பாகி மொட்டாகி
பூவாக மலர்ந்தாய் நீ
நம் தாயும் மகிழ்ந்தாலே!
குட்டிமுகம் கண்டு
கொத்தி மகிழ்ந்ததுண்டு!
பிஞ்சுமுகம் கொஞ்சும் போது
பஞ்சாய் மாறி தஞ்சம் கொண்டதெனதுள்ளம்!
அஞ்சி அழும்போது
பதறி துடிக்குமென்னெஞ்சம்
முட்டி தேய தவழ்கையில்
என் இதயம் வலியாகும்!
பாதம் தரைபட்டு எழும்போது
என்மனம் வானுயர துள்ளும் !!
அண்ணாவென நீ அழைக்கையில்
என் நா தழுதழுக்கும்!!
உடன் வாரி அணைக்கும்
இதயம் மாறிமாறி இடும் முத்தம்!
எனக்கான பொம்மை நீயடி!
உனக்காக உண்மையாய் நானடி !!
பிறர் உன்னை நெருங்க
என் மனம் விரும்பா !
கொலைகார கோபம் ஆங்கே உதயம்
பரிவோடு அன்னை மார்போடு அணைக்க
இருவர் நிலைமறந்து உறங்கும் ஆங்கடி !
ஓடோடி விளையாடி
ஒற்றுமை உணர்வாகி
உன்னை சுமந்த நெஞ்சடி!
வளர வளர இடைவெளி ஏனடி?
இருமனங்கள் வலியோடு
திருமணங்கள் நடைபோட
விம்மி அழும் என்மனதை
அறிந்தவர் யாரடி?
தாய் அன்பிற்கு அடுத்தபடி நீயடி!
உன்னை பிரியும் நிலையாலே
உள்மனமும் ரணமாகி
என்னிலையை மாய்க்கும்
மாயவலை ஏதடி!!
விண்மீன்கள் பூக்கும்
வானுயர பார்க்கும் விழியடி!
இடைவந்தால் மறந்திடலாம்
முளையோடு இணைந்தவளே!
என்னை மாய்த்துதான் போனாயோ !!
வாவென்று நானழைக்க
போவென்று நீ விலக
சருகாகி போனப்பின்
செழிப்போடு வாழ்வதெப்போ!!
செல்லென்று சொல்லிட
சொல்லொன்று இல்லையம்மா !!
நீ வந்தாலே வசந்தம்
நீ சென்றாலே இலையுதிர்காலம்
உன்னுடன் எனை படைத்த
இறைவனை தினம் நிந்திக்கிறேன்!
எங்கிருந்தாலும் தினம்
கனவில் வந்துனை சந்திக்கிறேன் !!