கடவுள் இல்லாதவர்தான்

திடீரென்று படத்தின் பெயர் மனதில் தோன்றியதாகவும், உடனே இயக்குனர் சுந்தர். சியைக் கூப்பிட்டு நாம ஒரு படம் படம் பண்றோம் படத்தோட பேர் அருணாச்சலம் என்று சொல்லி முடித்த கையோடு இசையைமைப்பாளர் தேவாவையும் அழைத்து இந்த விசயத்தைக் கூறினாராம் சூப்பர் ஸ்டார். கதை எதுவுமே முடிவாகவில்லையாம் அப்போது, அதனால்தான் படத்தில் வந்த பஞ்ச் டயலாக்கை கூட " ஆண்டவன் சொல்றான் இந்த அருணாச்சலம் சொல்றான் " என்று கூட வைத்தார்களாம். அதாவது எதுவுமே மனிதர்கள் முடிவு பண்ணாமல் கடவுள் முடிவு பண்ணியதாம்.

நிஜத்தில் இந்த உள்ளுக்குள் தோன்றும் விசயங்களை ஆண்டவன் தான் தீர்மானிக்கிறாரா? என்ற ஒரு கேள்வி எனக்குள் வெகுநாளாய் இருந்து கொண்டிருப்பதற்கு காரணம் இதே போன்று எழுத்துச் சித்தர் பாலகுமாரனும் கூறுவதுதான். அவரும் கூட நான் எழுதுவது எல்லாம் எனக்குள் ஸ்பூரித்தது என்று அடிக்கடி சொல்வார். கடவுள் என்னை வழிநடத்துகிறார், எல்லாம் கடவுள் கிருபை, நான் ஆன்மீகத் தேடலில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதில் ஏதோ ஒரு கிறக்கம் நிறைந்த சுகம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. இந்தக் கட்டுரை நாத்திகம் பேசி ஆத்திகத்தை தூக்கவோ அல்லது ஆத்திகம் பேசி நாத்திகத்தை நசுக்கவோ விரும்பவில்லை மாறாக இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு மியூட் மனோ நிலையில் எழுதப்பட்டது என்பதை வெகு குறிப்பாக இங்கே கூற கடமைப்படிருக்கிறேன்.

எல்லோருக்குள்ளும் ரஜினிக்குத் தோன்றியதைப் போல, பாலகுமாரன் கூறுவதைப் போல எப்போதும் ஏதோ ஒன்று ஸ்பூரித்துக் கொண்டுதான் இருக்கிறது...ஆனால் இந்த ஸ்பூரிப்புத் தன்மைக்கு ஏன் நாம் ஒரு அமானுஷ்யத் தன்மை கொடுக்க வேண்டும் என்பதுதான் எனக்குப் பிடிபடவில்லை. ஒரு கட்டுரையாளனோ, அல்லது கதாசிரியனோ உருவாவது கடவுள் விருப்பம் என்று நான் நினைக்கவில்லை. அதைக் கடவுள் அனுக்கிரகம் என்று சொல்லும் பதம் கூட எனக்கு அபத்தமாய் தெரிகிறது. இதே போலத்தான் ஆன்மீகக் குருக்களையும் நான் வெகு சமீப காலமாய் நினைக்கத் தொடங்கி இருக்கிறேன். ரஜினிக்கு அருணாச்சலம் பிடித்த கடவுள், அதே சிந்தனையில் இருந்திருப்பார், கிரிவலம் போகும் போதெல்லாம் சிவனை பற்றி யோசித்து யோசித்து அந்த ஆழமான எண்ணம், அந்த பாசம், அந்த கடவுளின் மீது கொண்ட ஈர்ப்பு டக்கென்று அவரை அந்தப் பெயரை சூட்டவைத்து படம் எடுக்கச் சொல்லி விட்டது. அவருக்கு இருந்த வசதிகள் அதுநாள் வரை கட்டமைத்து வைத்திருந்த அவரது தொடர்புகள் சூழலை சாதகமாக்கி வைத்து விட்டது அவ்வளவுதான்.

இதே போல அபூர்வ ராகங்கள் நடித்து முடித்த பின்பு ரஜினிக்கு மனதில் ஏதோ ஒருபடத்தின் பெயர் ஏன் தோன்றவில்லை? அது தோன்றாது. அப்போது அப்படி எண்ண மனதுக்கு தைரியமும் கிடையாது. மனம் கூட நமது வ்சதி பார்த்துதான் செலக்டிவாக இந்த ஸ்பூரித்தல்களை உண்டாக்குகிறது. இதே போலத்தான் எழுத்தாளர்களுக்கும் எழுத்தாளன் என்பவன் ஏதோ பேனா பிடித்து காகிதத்தில் எழுதத்தெரிந்தவன் மட்டும் அல்ல. எழுத்தாளன் என்பது ஒரு குணம். அது சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கும் பிறப்பியல் தன்மை. அந்த பிறப்பியல் தன்மைக்கு கர்மா காரணமாகிறது. கர்மாவை ஏற்றுக் கொள்ளும் நான் ஏன் கடவுளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றுதானே கேட்கிறீர்கள்...!

நான் கடவுளை ஏற்றுக் கொள்கிறேன். அதன் பரிபூரண இயக்கத்தை மானசீகமாய் நம்புகிறேன் ஆனால் அதை மனிதர்கள் தங்களோடு தொடர்புபடுத்திக் கொண்டு ஒரு அசாதரண நிலைக்கு தங்களை உயர்த்திக் கொண்டு சுற்றி இருக்கும் மனிதர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ளும் அந்த போலி புனிதத்தன்மையை நான் எதிர்க்கிறேன் அவ்வளவுதான். கடவுளை தொடர்புபடுத்திக் கொள்ளாத புனிதனாக ஏன் நம்மால் இருக்க முடியாது? வெகுஜனத்தை வசிகரிக்க ஒரு சூப்பர் பவர் நமக்குத் தேவைப்படுவதால்தானே....நான் கடவுளின் பிரதிநிதி அல்லது நான் கடவுள் என்றெல்லாம் கூறவேண்டி இருக்கிறது?

தொடர்ச்சியாய் எதைச் சிந்திக்கிறோமோ எது பற்றி அதிகம் ஆர்வம் காட்டி ஈடுபாடு கொள்கிறோமோ இன்னும் சொல்லப்போனால் எது நமக்குப் பிடிக்கிறதோ அதன் மீது ஒரு ப்ளூயன்சி நமக்கு வந்து விடுகிறது. அது கடவுளாய் இருந்தாலும் சரி கடா வெட்டுவதாய் இருந்தாலும் சரி. எல்லோர் முன்பும் நான் நல்லவன் என்றூ காட்டிக் கொள்ளும் முயற்சியில்தான் இந்த பூமிப்பந்தில் வசிக்கும் எல்லா தரப்பு மனிதர்களும் இருக்கிறார்கள். என்ன ஒன்று ஒருவன் டாஸ்மாக்கில் தனது கட்டிங்கிற்கு சைட் டிஷ் நன்றாக இருக்கிறது என்ற சந்தோசத்தோடு ஒரே மடக்கில் குடித்தபடியே தன்னை நல்லவானக எண்ணிக் கொள்கிறான்....இன்னொருவன் பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி தன்னை யாரென்று அறிந்து கொள்கிறேன் பேர்வழி என்று சாந்த சொரூபியாக தன்னை நல்லவன் என்று நிலை நிறுத்திக் கொள்ள முயல்கிறான்.

இதில் ஒன்று சிறப்பு இன்னொன்று தவறு என்று நாம் சொல்வதற்குப் பின்னால் திணிக்கப்பட்ட வழமையான பொதுபுத்தி மட்டுமே இருகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? கெட்டுப்போவன் குடித்து குடித்தும் கெட்டுப் போவான், கடவுள் எனக்கு வெகு பரீட்சயம் என்று கூறிக் கொண்டு சராசரி வாழ்க்கையின் சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமலும் கெட்டுப்போவான்.

கடவுள் தேடல் என்பதும் ஆன்மீகத்தில் ஈடுபாடு என்பதும் ஒரு பாட்டு கற்றுக் கொள்ளவும், ஆட்டம் கற்றுக் கொள்ளவும், கவிதை எழுதவும், கணக்குப் போடவும் கொலை செய்யவும், திருடவும் ஒரு மனிதன் கொள்ளும் ஆர்வத்தைப் போன்றேதான். இங்கே சிறப்பு விகுதி எங்கே இருந்து வந்தது என்பதுதான் எனக்கு இதுவரை பிடிபடவில்லை. ஒரு ஓவியன் தன்னை தலை சிறந்த மனிதப்படைப்பாக கருதிக் கொண்டானேயானால் அது எவ்வளவு பெரிய அபத்தமோ, ஒரு பாடகன் தான் தான் உலகை வழிநடத்த வந்த அதி சிறந்த மனிதன் என்று கூறிக் கொள்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தமானது கடவுள் பெயரால் வழிகாட்டுகிறேன் என்று சொல்வதும் கடவுள் வழிகாட்டுகிறார் என்று சொல்வதும்....

காலங்கள் தோறும் மனிதர்களை வழிநடத்த ஏதோ ஒரு சக்தியோ அல்லது சூழலோ அல்லது மனிதர்களோ அவசியப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு சராசரியான நிகழ்வு. சிந்திக்க தெரிந்தவன் சிந்தனையின் தெளிவினை சக மனிதனுக்குச் சொல்லிக் கொடுப்பதில் என்ன அமானுஷ்யம் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? எவ்வளவுதான் கற்றுக் கொடுத்தாலும் மெளனத்தை யார்தான் நமக்குச் சொல்லிக் கொடுத்துவிட முடியும்? யாராவது நமக்காக நடக்க முடியுமா? உயிர் வாழ முடியுமா? அல்லது உறங்க முடியுமா? முடியாதுதானே...? ஜென்மங்களாய் அலைந்து திரிந்து, மிதிபட்டு, அடிபட்டு அனுபவத்தோடு பயணிக்கும் ஒரு ஆத்மா அந்த அனுபவத்திலிருந்துதான் தனது அடுத்த அடுத்த வாழ்க்கையைப் பார்க்கிறது. இங்கே தேடிக் கொண்டிருக்கிறேன் என்று நாம் கூறுவதும் எனக்கு கடவுள் தேடல் பிடித்திருக்கிறது என்று எண்ணிக் கொள்வதும் கர்மாவின் தொடர்ச்சி. இந்த பிறவியில் நமக்கு வாய்த்தது அடுத்த பிறப்பில் வேறு ஒருவனுக்கு வாய்க்கும் அல்லது போன பிறவிகளில் யார் யாருக்கோ வாய்த்தது இந்த பிறவியில் நமக்கு வாய்த்திருக்கிறது அவ்வளவுதான்.

’சும்மா இரு சொல்லற” என்ற ஒரு மகா வாக்கியம் இருக்கிறது. இந்த சும்மா இருத்தல் என்பது கடவுள் தேடலையும் தூக்கி ஓரமாகத்தான் வைக்கச் சொல்கிறது. எந்த வழிமுறையையும் பின்பற்றாமல் இருந்ததனை இருந்தபடி இருந்து போகத்தான் சொல்கிறது. கடவுள் தேடுகிறேன் பேர்வழி என்று நானும் பல்வேறு அபத்தங்களுக்குள் சிக்கிக் கொண்டிருந்திருக்கிறேன். மனதால் கற்பனைகள் கூட செய்து பார்த்திட முடியாத பிரபஞ்சத்தின் முழுமையை இங்கே சொற்களில் இறக்கி வைத்து விட முடியுமா என்ன? கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பதுதான் உண்மை. அறிந்த மாத்திரத்திரத்தில் அங்கே அறிவிக்க ஒன்றுமே இல்லாமல் போய்விடுவதுதான் இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய உச்சபட்ச அறிவாய் இதுவரை அறியப்பட்டிருக்கிறது. இந்த சத்தியத்தை முழுமையாக ஒரு வார்த்தைப் பகிர்தலும் இன்றி உணரவைத்தவர், உருவாக்கிக் கொடுத்தவர் என் அறிவுக்கு எட்டியவரை புத்தரும் லாவோட்சுவும் தான்...!

இவர்கள் இருவரைத் தவிர நான் பார்த்த அத்தனை பேரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சட்ட திட்டங்கள் வகுத்துக் கொடுக்கிறார்கள். தங்களை பீடத்தின் மீது இருத்திக் கொண்டு என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சிஷ்யகோடிகளுக்கு ஆணையிடுகிறார்கள். புத்தரும், லாவோட்சுவும் தன் வாழ்நாள் முழுதும் எதையுமே போதிக்க விரும்பியிருக்கவில்லை. இங்கும் அங்கும் இருக்கும் அவர்களின் தத்துவங்கள் எனப்படுவது யாவுமே சுற்றி இருந்தவர்களின் நச்சரிப்பு தாங்காமல் அவர் உரைத்துச் சென்ற சில பொய்கள்தான்....!

எதுவும் இங்கே யாருக்கும் ஸ்பூரிக்காது. ஸ்பூரிக்க வைக்கவும் யாரோ ஒருவரை ஆகச் சிறந்தவராக்கி தன்னோடு அழைத்துச் செல்லவும் கடவுள் ஒரு போதும் விரும்பியதில்லை, விரும்பப்போவதும் இல்லை....! முழுதும் தன்னை உணர்ந்த யோகியாய் தன்னுள் ஆழ்ந்து கிடந்து தன்னை மறந்து கிடப்பதும் அவர்தான்......

பாசிபிடித்த குளத்தின் அழுக்கு நீரில் ஒரு சொறித்தவளையாய் மிதந்து கொண்டே இன்னொரு சொறித்தவளையை புணர்ந்து கொண்டிருப்பதும் அவர்தான்....

கடவுள் இல்லாதவர்தான்....

ஆமாம்...

இங்கிருப்பவர்கள் எல்லாம்ம கடவுளென்றால் என்னமோ ஏதோ என்று எண்ணிக் கொண்டு தேடி ஓடும் இலக்குகளில் எல்லாம் அவர் இல்லாதவர்தான்...!



தேவா சுப்பையா...

எழுதியவர் : தேவா சுப்பையா.... (27-May-14, 2:33 pm)
பார்வை : 512

சிறந்த கட்டுரைகள்

மேலே