“டாக்டர் முவ ஆய்வுக்கோவை “ பதிப்பாசிரியர்கள் முனைவர் பா கந்தசாமி முனைவர் வாமுசே ஆண்டவர் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
“டாக்டர் மு.வ. ஆய்வுக்கோவை “
பதிப்பாசிரியர்கள் : முனைவர் பா. கந்தசாமி
முனைவர் வா.மு.சே. ஆண்டவர்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
சேதுச்செல்வி பதிப்பகம்,
26/2, நேரு நகர் முதன்மைச் சாலை, சாலிக்கிராமம், சென்னை-93.
அலைபேசி : 94445 51750, விலை : ரூ. 150
*****
இலக்கிய இமயம் மு. வரதராசன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு பன்னாட்டு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக நூல் வந்துள்ளது. இந்த நூலை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் முனைவர் பா. கந்தசாமி மற்றும் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களின் புதல்வர் பேராசிரியர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர் ஆகிய இருவரும் தொகுத்து நூலாக்கி உள்ளனர். அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையினை கட்டுரை வடிவில் வடிப்பதற்கு உழைத்த உழைப்பை உணர முடிகின்றது. இலக்கிய இமயம் மு.வ. அவர்களின் புகழ் மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக இந்த நூல் ஒளிர்கின்றது.
இலக்கிய இமயம் மு.வ. பற்றி அறிஞர் அண்ணா சொன்னவை. டாக்டர் மு.வ. அவர்கள் தம்முடைய எழுத்தின் மூலம் பேச்சின் மூலம் தாமும் சிந்திப்பார். அவருடைய பேச்சையும் எழுத்தையும் பெற்றவர்கள் தாமும் சிந்திக்கத் தொடங்குகின்ற வகையில் அந்த எழுத்துக்கும் பேச்சுக்கும் தனிச்சிறப்பு இருக்கிறது.
டாக்டர் மு.வ. அவர்களைப் பார்த்துவிட்டு அவர்களுடைய ஏடுகளைப் படித்தால் இந்த சாந்தபுருசரா இவ்வளவு புரட்சிகரமான கருத்துக்களையும் எழுதி இருக்கிறார்? உண்மை தானா? என்று எண்ணிப் பார்ப்பார்கள். அப்படித் தோற்றத்திலேயும், நடைமுறையிலும், தன்மையிலேயும் அமைதியே உருவாக இருந்து கொண்டு, அந்த அமைதியைத் துணைக் கொண்டு, ஆர்வத்தை உடன் வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு வழிகாட்டியாக பல அரிய கருத்துக்களை அவர் தந்திருக்கிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றல்மிகு சொல்வலிமையினால், மு.வ. அவர்களை பார்த்திராத இன்றைய இளைய தலைமுறையினருக்கு காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார். மு.வ. அவர்கள் பற்றிய பிம்பத்தை மேலும் மேலும் உயர்த்தும் விதமாக நூலைத் தொகுத்த தொகுப்பாசிரியர்களுக்கு பாராட்டுக்கள்.
மு.வ. அவர்களின் படைப்பை படித்தவர்கள், ஆராய்ந்தவர்கள், பழகியவர்கள், துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள் என தேடிப் பிடித்து, தகவல் தந்து, வேண்டுகோள் விடுத்து, கட்டுரைகள் பெற்று நூலாக்கி உள்ளனர். நூலில் மொத்தம் 22 கட்டுரைகள் உள்ளன. முத்தாய்ப்பாக உள்ளன. முத்திரை பதிக்கும் விதமாக உள்ளன.
மு.வ. அவர்கள் எழுதிய திருக்குறள் உரை விற்பனையில் சாதனை படைத்த உரை. அவருக்கு திருக்குறள் மீது அளப்பரிய பற்றும், பாசமும், புலமையும் உண்டு. அவர் எழுதிய திருக்குறள் கட்டுரைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரையை சிறப்பாக புலவர்
பா. வீரமணி எழுதி உள்ளார்கள்.
“தமிழகத்தில் திருக்குறளைப் போதித்தவர்களில், பரப்பியவர்களில் டாக்டர் மு. வரதராசனார் தலையாயவர். தமிழ் படிக்கும் மாணவ மாணவியரிடத்து மட்டுமல்லாமல் சாதாரணப் பாமரரிடத்தும் திருக்குறளைக் கொண்டு சென்றவர்”.
மு.வ.வின் இலக்கியப் பணி : முனைவர் தெ. ஞானசுந்தரம்
பெருந்தகை மு.வ. தமிழ் இலக்கியப் பரப்பு முழுவதையும் அறிந்தவர். எனினும் சங்க இலக்கியம், திருக்குறள் சிலம்பு ஆகியவற்றில் தோய்ந்தவர் என்றும் அவற்றில் அரிய ஆய்வு முடிவுகளைக் கண்டு அறிந்தவர் என்றும் கூறலாம்.
மொழியியல் அறிஞர் மு.வ. : பேராசிரியர் ச. வளவன்
தமிழ் இலக்கியத்தையும், தமிழர் நலனையும், தமில் மொழியினையும் போற்றும் வகையிலும், போற்றவும் காக்கவும் துணிந்தவர் மு.வ. சங்க இலக்கியம் முதற்கொண்டு இக்கால இலக்கியம் வரை ஆழ்ந்து கற்றவர் அவர். அவற்றின் சிறப்புகளை நூல்களில் காட்டியவர் அவர்.
மு.வ.வும் மொழி நடை இயல்பும் : முனைவர் இராம. குருநாதன்,
மு.வ. காலத்திற்கு முன் புதினங்கள் எழுதிட, பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் போன்ற பேராசிரியர்கள் படைப்பிலக்கியத்தில் வெற்றி பெற்றதாக கருத இயலாது. அப்படியே வெற்றி பெற்றிருந்தாலும் அவர்கள் நடை கடுநடையாக இருந்தது. மு.வ. தம் எழுத்து யாவரும் உணர்ந்து படிக்கக் கூடியதாகவும், எளிமை மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கரை செலுத்தினார்.
மு.வ.வும் திராவிட இயக்கமும் என்ற கட்டுரையை
திரு. க. திருநாவுக்கரசும்,
மு.வ.வும் பாரி நிலையமும் என்ற கட்டுரையை
திரு. செ. அமர்ஜோதி அவர்களும்,
மு.வ.வும், ஈழ மண்ணும் என்ற கட்டுரையை
திரு. செ. கணேசலிங்கமும் எழுதி உள்ளனர்.
தொகுப்பாசிரியரகளில் ஒருவரான பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர் எழுதியுள்ள மு.வ.வும் பழந்தமிழ் இலக்கியமும் என்ற கட்டுரையில் இருந்த சிறு துளிகள்.
“தனக்கென ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு ஓர் இலட்சிய நெறியில் வாழ்ந்தவர் மு.வ. அவர்கள். மனித இதயத்தின் உணர்வுகளையும், இயற்கையின் கவர்ச்சி நிறைந்த எழிலையும் நெருங்கிப் பிணைப்புடையனவாய் இனிய உறவுடையனவாய் மு.வ.கருதினார். இவற்றை மேனாட்டு அறிஞர்களின் அரிய ஆய்வுக் குறிப்புகளுடன் நிறுவினார்.
இலக்கிய இமயம் மு.வ. என்ற மிகப்பெரிய ஆளுமையாளர் பற்றி அறிந்து கொள்ள உதவும் ஆய்வு நூல். வருங்கால சந்ததிகளும் மு.வ. பற்றி அறிந்து கொள்ள ஆவணப்படுத்திய அற்புதமான நூல். மு.வ. வின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களிடமும் ஒரு கட்டுரை வாங்கி இருக்கலாமே என்று தோன்றியது. தொகுப்பாசிரியர் இருவருக்கும் பாராட்டுக்கள்.
.