வ வ வ வருக ரசிக்க வருக

வழி நெடுகிலும்
வளியின் தாலாட்டில்
வலிமறக்கும் இதயம் ...!!

வயல் வரப்போரம்
வளைந்தோடும் ஓடையும்
வசந்தராகம் இசைக்கும் ...!!

வணங்கித்தாழும் கிளையும்
வரவேற்கப்பூச்சொரியும் தருவும்
வதுவைஎங்கும் நிறைக்கும் ....!!

வன்னிக்கொஞ்சி பேசுகையில்
வன்மனமும் கரையும்
வறுநகையும் பூக்கும் .....!!

வனபந்தத் தண்ணீரில்
வனருகம் மலர்ந்திருக்கும்
வனப்போ உள்ளமள்ளும் ....!!

வரிக்கடையும் ரீங்காரமிட்டு
வடிவான மலர்கள்தேடி
வசியம் செய்ய விழையும் ....!!

வகுளம்பூத்த நறுமணமும்
வங்கியத்தின் தேனிசையும்
வசமாக்கும் நம்நெஞ்சம் ...!!

வளமே இயற்கைஎழிலே
வரமே இறைவன் அருளே
வனமே மழையின் கொடையே....!!!


வதுவை =வாசனை
வன்னி =கிளி
வறுநகை =புன்னகை
வனபந்தம் =தடாகம்
வனருகம் =தாமரை
வரிக்கடை= வண்டு
வகுளம் = மகிழ மரம்
வங்கியம் = புல்லாங்குழல்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-May-14, 2:39 pm)
பார்வை : 207

மேலே