நீ என் மணாளன் ஆனால்

நிழலாய் உன்னை தொடர்வேன் ,
இருளினில் மறைவேனோ என்று மருளாதே ,
உன்னுள் நானாய் பிணைந்திருப்பேன், அப்பொழுதில் தான் !

மெல்லிசையில் உறங்கிய உன்னை ,
என் இதய தாலாட்டில் இசைய வைப்பேன்
செவிகலன்றி மனதினுக்கும் தேனாய் தான்!

வளைவுகளில் கூட முந்தாத உன்னை ,
என் வளைவுகளில் மோதி வீழ வைப்பேன்
கனிந்த காயங்களுடன் தான் !

மரியாதைக்குரிய மனிதனாய் மற்றோர் முன் திகழும் உன்னையும் ,
மழலையாக்கி விளையாடி மகிழ்வேன் ,
மயக்கம் உறக்கமாகும் வரையும் தான் !

இளம் கதிரவன் விழிப்பிற்கு முன்னே எழ மறுத்தாலும் ,
இளம் காதலன் உன் விழிப்பு என் விழியினில் புலர , மலர்ந்திருப்பேன் ,
இது கட்டாயம் தான் !

எத்தனை பதார்த்தம் பரிமாறினாலும் ,
உன்னையும் வேண்ட வைப்பேன் ,
உன் பசிக்கு ருசியான பதார்த்தமாய் என்னையும் தான் !

இவ்வாறெல்லாம்...
என் காதல் வளி ,
புலன் வழி மட்டுமன்றி ,
பொருள்சார் வலைதளம் ஊடுருவி …

உணர்வின் வழி ,
மன சாளரங்களையும் பாவங்கள் பிடிக்க செய்வேன் ,
நீ என் மணாளன் ஆனால் !

எழுதியவர் : மகா (27-May-14, 10:08 pm)
பார்வை : 102

மேலே