அழகிய வண்ணக் கைபேசி
அழகிய வண்ணக் கைபேசி!
தொலைவினில் இருப்பினும் மனைவியை போலே,
தொடுதூரத்தில் இருப்பினும் காதலி போலே,
கவனம் ஈர்ப்பாய், குறைந்தால் அய்யோ அபாயம் அபாயம்!
அழகிய வண்ணக் கைபேசி!
பேரைச் சொல்லும், கூப்பிட்டவர் ஊரைச் சொல்லும்,
காடு விற்று வாங்கினேனே, அலைபேசி! சிறு உபயம் செய்வாயா?
வீடு வரை பயணம் உண்டு, அழைத்தவரை அமைதி காக்கச் சொல்வாயா?
அழகிய வண்ணக் கைபேசி!
காதலர், கயவர் ரகசியங்கள் யாவும், 'கையளவு மனசு' இதற்குள்ளே,
உஷ்ண முத்தம் வாங்கிக் கொள்ளும், உப்புக் கண்ணீர் தாங்கிக் கொள்ளும்,
மோதிரமாய் வந்தது, விரல் ஆறாய் ஆனது என் விந்தை?!
அழகிய வண்ணக் கைபேசி!
மனிதன் கிழித்த எல்லைகள் கிழித்து, கடல் கடந்த பயணங்கள்,
உனை கையில் கொண்டு பயணித்தால், தூரம் சோரம் போகும்!
வாமனன் போலே பூமியளந்தாய், இன்னொரு விந்தையும் புரிவாயா?
அழகிய வண்ணக் கைபேசி!
உன்னால் தனித்தீவாகும் மனிதர்களை, கரைத் தொட்டு ஏற்றி விடுவாயா?
மாந்தர் குரலை இணைத்திட்டாய், இனி மனங்களிடை பாலம் இடுவாயா?
பிள்ளைகள் உன் கையில் சிக்காமல், மணல் வீடுகள் கட்டட்டும், விடுவாயா?

