சித்தன் வாக்கு

கையுறை தரித்து
காற்றோடு கலந்தடைத்து
கருக்கிய வறுவல்கள்
துரத்தி விட்டிருக்கின்றன
மல்லிகை இட்டிலிகளையும்
மல்லிக்கொத்து
சட்டினிகளையும்.....!
சுத்தமில்லையென்று
சொல்லி
சத்தமில்லாத் திருட்டு....
எங்கும் நிறைந்திருக்கிறார்
இறைவனைப் போல்...
சிவப்புப் பலகையில்
வெள்ளைக்காரத் தாத்தா...
இப்போதைய ஒவ்வாமைகள்
எங்களோடு
உறவாடியிருக்கவில்லை
சேறு கலந்த சோறும்..
வேர்பரவித் தெளிந்திருந்த
நீரும்..
பழகியிருக்கையில்....!!!
அதிரசங்களையும்
பணியாரங்களையும்
அசீரணக் காரணிகளாக்கி...
அஜினோமோட்டோ
களவாடித் தின்று களித்திருக்கிறது
வயிற்றமில நொதிகளை .!!!
கொஞ்சம் கொஞ்சமாய்
செத்துப்போகும்
நொதிகளின் கதறல்
கேட்பதே இல்லை.. டாலர்களின்
மீதக்கணக்கு
கேட்டுப்பழகிய காதுகளுக்கு..
காலத்தை பொய்யாக்கி
காற்றடைத்த பையாக்கிய
கவிச்சித்தன் வாக்கும்
பலிக்கத்
தொடங்கியிருக்கிறது
அடுத்தவொரு பன்னாட்டு
சிற்றுண்டி நிலையத்
திறப்புவிழாவில்....!!!