ஆட்டிப் படைக்கும் சிந்தனைகள் -9

உள்ளத்தில் உள்ள ஆத்மார்த்த விடயங்களை வெளிக்கொணரும் ஊடகங்களாகவே முற்காலத்தில் கலை இலக்கியங்கள் தோன்றின. கருவிலே திருவுடையோரால் படைக்கப்பட்டு இன்பம் துய்ப்பதற்கென்றே கவிதை முதலிய இலக்கியங்கள் படைக்கப்பட்டன. மனிதர் வாழ்வில் பெறும் அனுபவங்களில் பல சாதாரண வார்த்தைகளில் சொல்லக்கூடியவை. மிகப் பல அப்படி சாதாரண வார்த்தைகளில் சொல்ல இயலாதவை. அப்படி சொல்ல இயலாதவற்றை தமக்கே உரிய சொற்செரிவு, மொழி வளம், கற்பனைத் திறம் ஆகிய ஆயுதங்களின் வாயிலாக இயற்கை நிகழ்வுகளை கவிதை, காவியம் என வருணிப்பது வியவகாரிக ஆற்றல் என்றும் இறைவன் போன்ற புத்திக்கு அப்பாற்பட்ட விடயங்களை விவரிக்கும்போது அவை பரமார்த்திக ஆற்றல் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டே படைக்கப் பட்டன.

இவ்வாறு எவரோ ஒருவர் இரவும் பகலும் சிந்தனை செய்து ,தமக்கெ உரிய பாணியில், ஆய்வுகள் செய்தோ, கேள்வி ஞானத்திலோ படைக்கும் படைப்புக்களை பிறிதொருவர் மிக எளிதாக தனது அரு முயற்சியில் படைக்கப் பட்டதுபோல் உலகுக்குத் தருவது அல்லது வெளியிடுவது அசலாக படைத்தவர்க்கு நெஞ்சில் வலியை உண்டாக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.

அடுத்தவர் படைப்பை கடத்தி, திருடி, படைப்பு செய்யும் செயலுக்கு ஆங்கிலத்தில் ப்ளேகியரிஸம் எனக் கூறுவர். முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ரோமையின் கவிஞர் மார்ஷியல் என்பவர் தனது கவிதையை மற்றொரு கவிஞர் ”கடத்தி விட்டார்”எனும் பொருளில் முதன் முதலாக இவ்வார்த்தையப் பயன் படுத்தினார். அதன் பின்னர் 1601 ஆம் ஆண்டில் பென் ஜான்சன் எனும் ஆங்கிலக் கவிஞர் மற்றும் விமர்சகர், இது ”இலக்கியத் திருட்டு” எனக் குறிப்பிட்டார். ப்ளேகா எனும் லத்தீன் வேர்ச்சொல்லுக்கு, கிரேக்க, பல்கேரிய மற்றும் லத்தீன் மொழிகளில் ’நெசவு செய்தல்’ என்பதே பொருள்.

லாரன்ஸ் ஸ்டெர்ன்ஸ் என்பவர் தனது ‘ட்ரிஸ்ட்ரம் ஷாண்டி’ எனும் நூலில் இத்தகைய நெசவு செய்து படைப்பு அபகரிப்பினை செய்பவர்களை வன்மையாகக் கண்டித்துள்ளார். இதனைப் படித்த ஆலிவர் கோல்டுஸ்மித் எனும் ஆங்கிலக் கவிஞர்,

“ஸ்டெர்ன்ஸின் எழுத்துக்களை, அவர் கண்கூடாகக் காட்டியுள்ளபடி, அவரது நடை, அழகு ஆகியவை கொண்டு பார்க்கும்போது இத்தனை நாட்கள் அசலானவை என நினைக்கப்பட்டு வந்தது. உண்மையில் அவர் எவ்வித தயக்கமும் இல்லாத கடத்தல்காரர் ஆகி பிறரது படைப்புகளை அலங்காரம் செய்து தன் படைப்புக்களாக்கி அளித்துள்ளார். அதே நேரத்தில் இதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஸ்டெர்ன் அவரது மொசைக் தளத்திற்கு தேவையானவற்றை மிகக் கலை நயமானவற்றை தெரிவு செய்து அவற்றிற்கு பொலிவூட்டி, அசல் எது என்பதை தேட அவசியம் இல்லாமல் செய்து விட்ட அவரது அப்பூர்வ திறம் மெச்சப்படவேண்டிய ஒன்றாகும். இவ்வாறு படைப்பு அபகரிப்பினை கண்டனம் செய்தவர் கூட ஒரு வகையில் கடத்தல் செய்தவரே என்பது அவரைப் பற்றி மற்றொருவர் கூறும்பொழுது புலனாகிறது.

’கரகாட்டக்காரன்’ என்றொரு தமிழ் திரைப்படம் .தமிழக மக்கள் அனைவரையும் கவர்ந்த ஒன்று. அதில் கவுண்டமணி, செந்தில் ஆகிய இரு பெரும் நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் இரு வாழைப்பழம் பற்றிய நகைச்சுவை மிக மிகப் பிரபலமான ஒன்று என்பதுடன், இன்று கேட்டாலும் சிரிப்பை வரவழைக்கக் கூடியது. உண்மையில், தூர்தர்ஷன் சென்னையில், கோவை அனுராதா எழுதிய ஒரு நாடகத்தில் ’கடலை உருண்டை’ வாங்கி வா என சொல்லப்பட்ட நகைச்சுவைப் பகுதி கரகாட்டக் காரனில் வாழைப் பழமாகி, கவுண்டமணி செந்தில் நடிப்பில் அழியாக் காவியமாகத் திகழ்கிறது.

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் இருப்பினும் உண்மையில் அசலாகப் படைத்தவர்கட்கு மட்டுமே கடத்தப்பட்டதன் வலி தெரியும். தமிழ் திரை உலகில் அடுத்தவன் கதையை வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டு எழுதியவனுக்கு அல்வா கொடுப்பது சர்வ சாதாரணமான நிகழ்வுகளில் ஒன்றாகும். அண்மையில் கூட இயக்குனர் பாக்யராஜ் தனது இன்று போய் நாளை வா எனும் திரைப் படக் கதை திருடப்பட்டதாக காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்து விட்டு அலைந்து கொண்டு இருக்கிறார்

இவ்வாறு செய்யப்படும் அபகரிப்பு, திருட்டு, இலக்கியத்தில் மட்டுமல்லாமல், திரைப்படங்கள் , மெல்லிசை, ஓவியம், நாடகம் நடனம், மற்றும் பலகலைக் கழகங்களில் முனைவர் பட்டம் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் மலினமாகி விட்டுள்ளது...
படைப்பு அபகரிப்பில் பல வகைகள் உண்டு. அப்படியே வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி, வசனம், பத்திக்குப் பத்தியாகப் பிற நூல்களிலிருந்து அப்படியே பெயர்த்து எழுதி விடுவது. இந்தக் கால கணிணியில் கட், காப்பி, பேஸ்ட் இதனை ஒரு நொடியில் செய்து விடுகிறது. எவரோ எங்கோ நன்றாக ஆய்வு செய்து மூலத்தைப் படித்து மேற்கோள் காட்டி எழுதி இருப்பதை எந்த நூலகமும் செல்லாமல், உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே அவர் கொடுத்துள்ள பார்வைப் புத்தக வரிசையினை பொன்னே போல் பொதிந்து எழுதி விடுவதன் மூலம் தாங்களே அதனைக் கண்டுபிடித்த மாதிரி அப்படியே தேவையான ஆராய்ச்சிக் கட்டுரையில் புகுத்திவிடுவர். இதை மற்றொருவகையான படைப்பகரிப்பு என்று எடுத்துக்கொள்ளலாம்.

சில நேரங்களில் ஒருவரது படைப்பை அவர் உலகுக்கு அளிக்கும் முன்னரே திருடிச் சென்று விடுவதும் உண்டு. கத்தோலிக்க திருச்சபையின் பழந்தந்தையர்கள் எனப் போற்றப் படுபவர்களில் ஒருவராகிய ஹிப்போ நகரத்து ஆயர்(பிஷப்) ஆகிய புனித அகஸ்டின் என்பவர் இறையியல் குறித்த ‘இறைவனின் நகரம்’, ’என் மனஸ்தாபங்கள்’ போன்ற புத்தகங்கள் எழுதியவர். ஆவர் பல்லாண்டுகளாக இறைவன் மூவராய் இருக்கிறார் என்ற சித்தாந்தத்தை ’தே த்ரினிதாத்தே’ என லத்தீன் மொழியில் பல்லாண்டுகளாக எழுதி வந்தார். அவர் மொத்தம் 15 அத்தியாயங்கள் எழுத வேண்டும் என நினைந்து எழுதி வருகையில் 13 அத்தியாயங்கள் முடிந்த நிலையில் அந்த பதிமூன்றும் களவு போயிற்று. திருத்தா நகல் ஆகிய அதனை திருத்தம் செய்ய வேண்டுமென மேசையில் வைத்து இருந்ததை திருடர் களவாடிச் சென்றதில் அத்தனையயும் அவர் மீண்டும் எழுத வேண்டியதாயிற்று.

குமாவோன் பல்கலைக் கழகத்தின் வேந்தரும் மருத்துவருமான பேராசிரியர் ராஜ்புத் என்பவர் 2003இல் முனைவர் பட்டம் வேண்டி ஒரு மாணவன் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் கடத்தல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு தம் பதவியைத் துறக்கும் நிலை ஏற்பட்டது.

அண்மையில், அண்ணா பல்கலைக் கழகம், சென்னை, 2007ல் ’ஜர்னல் ஆஃப் மெட்டீரியல் சயின்சஸ்’எனும் சஞ்சிகையில் வெளியிட்ட கட்டுரை லின்கோபிங் பல்கலைக் கழகம் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையின் காப்பி என கண்டனம் பெற்றது..

கணினி விளையாட்டுகளில் ‘லிம்பொ ஆஃப் தெ லாஸ்ட்’, ‘பாங்’ எனும் டென்னிஸ் விளையாட்டு, ’ரிபக்’ எனும் செஸ் சாம்பியன் விளையாட்டு ஆகியவை பிற கம்பெனிகளில் இருந்து திருடப்பட்டவை என திரும்பப் பெறப்பட்டன.

1892 ஹெலென் கெல்லெர் மார்கரெட் கான்பி என்பவரால் படைப்பகரிப்பு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். அவரது ‘தி ஃப்ராஸ்ட் ஃபே’ரீ எனும் கதையிலிருந்து ‘தி ஃப்ராஸ்ட் கிங்’ திருடப்பட்டது என்பது ஒத்துக் கொள்ளப்பட்டு அவர் சுய சரிதை மட்டுமே எழுதலாம் என எச்சரித்து விடப்பட்டார்.

இத்தகைய திருட்டு செய்து எளிதில் பலரும் தப்பித்து விட்டனர். ஆனால் ஒரு தமிழர் அதிலும் ஒரு பெண் செய்த இலக்கியத் திருட்டு தமிழ் எழுத்தாளர்கட்கே அவமானம் தருவதாய் அமைந்துவிட்டது. காவியா விஸ்வனாதனின் முதல் நாவல் ஆகிய ‘எப்படி ஓப்பல் மேத்தா முத்தமிடப்ப்பட்டார், கோபமாகி வாழ்வு பெற்றார்’ எனும் அந்த நாவல் “லிட்டில் ப்ரொளன் அண்ட் கோவால் வெளியிடப்பட்டது. பிற ஐந்து நாவல்களில் இருந்து திருடப்பட்டது என்பதை ஒத்துக் கொண்டதில் விற்பனையில் இருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது..

”அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்பதெல்லாம் அந்தக் காலம் ஆகி விட்டது. 3-2-2003 இல் அலிஸ்டேர் காம்பெல், டோனி ப்ளேர் எனும் பிரிட்டிஷ் பிரதமரின் தகவல் துறை இயக்குனர் ஆக இருந்தபோது, ’ஈராக்கும் அதன் படை பலமும்’ என்ற தலைப்பில் ‘எ டாட்ஜி டோஸ்ஸியர்” எனும் நூலை வெளியிட்டர். இது இப்ராகிம் மராஸ்தி எனும் ஒரு மாணவரது படைப்பு என்றும், அதில் காணப்பட்ட எழுத்துப் பிழைகள் கூட திருத்தப் படாமல் காப்பி அடிக்கப் பட்டுள்ளது என்பது வெளி வந்தபோது, அறம் கூற்றாகவில்லை, எவரும் அசடும் வழியவில்லை.

விளாமிடிர் புடின் எனும் ரஷ்ய அதிபரின், ‘தி ஸ்ட்ராடெஜிக் ப்லானிங் அண்ட் பாலிஸி” எனும் ஆய்வுக் கட்டுரை 218 பக்கங்கள் கொண்டது அமெரிக்க பொருளாதார பேராசிரியர்கள் ஆன வில்லியம் கிங் மற்றும் டேவிட் க்லீலண்ட் ஆகியோரின் அசல் படைப்பின் நகல் என முறையிடப்பட்டும் புரியாத புதிராய் வலம் வருகிறார் புதின் எவ்வித விளக்கமும் அளிக்காமல்.

மார்டின் லூதர் கிங் ஜூனியர்- 2. அமெரிக்க குடியுரிமை போராட்ட தலைவராகவும் கிறிஸ்தவ மத போதகராகவும் இருந்தவர்’, ’பால் டில்லிஷ் மற்றும் ஹென்றி நியூமன் வீசரின் சிந்தனைகளின்படி இறைவன் பற்றிய கொள்கை’ என ஆய்வு நூல் தனது முனைவர் பட்டத்திற்காக சமர்ப்பித்து 5-6-1955 இல் முனைவர் பட்டமும் பெற்று விட்டார். இவற்றுள் பெரும்பான்மை பக்கங்கள் காப்பி செய்து சேர்க்கப்பட்டன எனக் கண்டு பிடித்து இருப்பினும் முனைவர் பட்டத்தை அவர் மன்னனிப்பு கேட்டதால் அவரை வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழும் காப்புரிமை சட்டத்தின் கீழும் பயமுறுத்தும் வகையில், ஆங்கிலத்திலும், ப்ராந்தீய மொழிகளிலும் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்களின் பின் அட்டையிலேயே எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு இருப்பினும் அந்த சலசலப்பிற்கு இந்த பனங்காட்டு நரிகள் அஞ்சாது எனும் வகையில் படைபகரிப்பு பரவலாக ராஜ நடை போட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

. .

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (9-Jun-14, 3:39 pm)
பார்வை : 179

சிறந்த கட்டுரைகள்

மேலே