கெளரவம்
கண்ணின் மணியே என்று
கண்மணியாய் வளர்த்தீரே !
கண்ணில் சிறு
துரும்பும் தீண்டிடாது
கருத்தாய் எனை காத்தீரே !
என் சுக வாழ்விற்காய்
ரத்தம் சிந்தி உழைத்தீரே !
பசிதனை உணருமுன்னே
பல்சுவை உணவுதனை ஊட்டினீரே !
விழிநீர் வழியுமுன்னே
விரைந்தெனை தேற்றினீரே !
பண்புடன் வாழ்ந்திடவே
பள்ளிச்சாலை அனுப்பினீரே !
கற்ற கல்வி காப்பாற்றும் என்று
கல்லூரியில் எனை சேர்த்தீரே !
ஐயோ ! தவறிழைத்தீரே ----
கற்கும் கல்வியுடன்
காதற்பாடமும் உடன் கற்றேனே...
கற்பனையில் சிறகடித்தேனே
கல்லெறியுண்ட குளமாய் கலங்கினேனே...
நீவிர் கலக்கம் கொள்வீர் என்று
மறந்தே போனேனே ---இதை
கேள்வியுற்ற உம்
கண்களின் கனலில்
நான் எரிந்து சாம்பலானேன் ....
அப்பொழுதும் ----
நான் தனிமையில்
தவிப்பேன் என்று
காதலனையும் உடன் அனுப்பினீரோ?
உயிரிலா என்
உடலினை கண்டதும்
உம் விழிகளில்
துளி கண்ணீர் ஏனோ ?
தவப்புதல்வி
தவறினாள் என்றா ??
கெளரவம்
நிலை நாட்டப்பட்டது என்றா ???
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
