துஷ்டரைக் கண்டால் தூர விலகு

ஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன.அந்த விலங்குகளைப் பிடிக்க பலரும் அந்தக் காட்டுக்கு வேட்டைக்கு வருவது வழக்கம். ஒருமுறை வேட்டைக்காரன் ஒருவன் அந்தக் காட்டில் ஒரு கூண்டை வைத்துவிட்டுப் போய் விட்டான். அந்தக் கூண்டில் ஒரு புலி மாட்டிக் கொண்டது.

-- அந்தக் கூண்டில் அகப்பட்ட புலி உறுமிக் கொண்டே நடை பயின்று கொண்டிருந்தது.அப்போது அந்தக் காட்டுவழியே ஒரு வழிப்போக்கன் சென்று கொண்டிருந்தான்.அவனைப் பார்த்து அந்தப் புலி
"ஐயா, தயவு செய்து என் அருகே வாரும் "என்று அழைத்தது. புலியைக் கண்டு பயந்து தூர விலகிச் சென்றவன் அதன் அழைப்பைக் கேட்டு கூண்டின் அருகே வந்தான். அவனைப் பார்த்து,அந்தப் புலி பரிதாபமாகக் கூறியது.
"ஐயா, எனக்கு மிகவும் வயதாகிவிட்டது.கண்ணும் தெரியவில்லை. இந்த வேட்டைக்காரன் என்னைப் பிடித்துப் போய் துன்புறுத்துவான். தயவு செய்து என்னை விடுவித்து விட்டுப் பிறகு உங்கள் வழியே போகலாம் ஐயா."
அதன் முகத்தையும் கூர்மையான அதன் பற்களையும் பார்த்துப் பயந்த அந்த வழிப்போக்கன்,"ஹூ...ஹூம் நான் மாட்டேன்.நீ துஷ்ட மிருகம். உன்னை வெளியே விட்டால் என்னைக் கொன்று தின்று விடுவாய்."என்று மறுத்தான். தன வழியே போகத் தொடங்கினான்.

அப்போது அந்தப் புலி," ஐயா, நான் சைவமாக மாறி ரொம்ப காலமாயிற்று. இப்போதெல்லாம் நான் மனிதர்களையே தின்பதில்லை. என்னை வெளியே விட்டுப் பாருங்கள் ஐயா.அப்போதுதான் தெரியும் நான் எவ்வளவு நல்லவன் என்று." எனக் கெஞ்சியது.
தயங்கி நன்ற வழிப்போக்கனிடம் அது கெஞ்சியது.மன்றாடியது. "உன்னைத் தின்னமாட்டேன்" என்று சத்தியம் செய்தது. அதன் தவிப்பைப் பார்த்த அந்த வழிப்போக்கன் பாவமாயிருக்கிறதே இந்தப் புலியைப் பார்க்க என எண்ணி அந்தக் கூண்டின் அருகே சென்று அதைத் திறந்து விட்டான்.

என்ன நடக்கும்?வெளியே வந்த புலி "என்ன நண்பரே, நலமா?" என்றா விசாரிக்கும்?

ஒரே பாய்ச்சலில் பாய்ந்து அந்த வழிப்போக்கனைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டது. அந்த மனிதன் பயந்து அலறினான்.

"ஏ புலியே, என்னைத் தின்னமாட்டேன் என்று சத்தியம் செய்தாயே,இப்போது கொல்ல வருகிறாயே,"

"அட அப்பாவி மனிதா,பட்டினியாய் இருப்பவர் முன் உணவு கிடைத்தால் உண்ணாமல் இருப்பது முட்டாள்தனம் அல்லவா? இது தெரியாதா உனக்கு?"

"இதோ பார், நீ செய்வது நியாயம் என்று யாராவது சொன்னால் நான் உனக்கு உணவாகிறேன்."
என்றான் நடுங்கியவாறே.
அந்த சமயம் பார்த்து ஒரு நரி அந்த இடத்துக்கு வந்தது.நரியைப் பார்த்த வழிப்போக்கன்
"இந்த நரியிடம் நியாயம் கேட்போம்" என்றான்.
புலி "இதுவும் நம் இனத்தைச் சேர்ந்தது. எனக்கு சாதகமாகத்தான் சொல்லும் என எண்ணிக் கொண்டு
நரியிடம் நியாயம் கேட்க சம்மதித்தது.

அருகே வந்த நரியைப் பார்த்து புலி அதிகாரத்துடன் பேசியது.
"நரியாரே, நீரே நியாயம் சொல்லும்.நான் கூண்டுக்குள் இருந்தேனா, இந்த மனிதன் வெளியே போய்க்கொண்டு இருந்தாரா,"என்று சொல்லும்போது நரி குறுக்கிட்டு, "என்ன என்ன, யார் உள்ளே இருந்தது, யார் வெளியே இருந்தது?" என்று ஒன்றுமே புரியாதது போல் கேட்டது.

புலி பொறுமையாக மீண்டும் கூறத் தொடங்க, நரி "ஒ..ஹோ.. இந்த மனிதன் கூண்டுக்குள்ளும் நீங்கள் வெளியிலும் இருந்தீர்களா?" என்று வேண்டுமென்றே கூறியது.
புலி பொறுமையிழந்து,உறுமியது.அதைக்கண்டு அஞ்சியது போலப் பாசாங்கு செய்த நரி,
"புலியாரே, மன்னியுங்கள் எனக்கும் வயதாகிவிட்டதால் மறதி அதிகம். சரி தாங்கள் எங்கு இருந்தீர்களோ அங்கு சென்று நின்று சொல்லுங்கள் என்றதும் புலி கூண்டுக்குள் சென்று நின்றது." இதோ பார், நான் இங்குதான் இருந்தேன். இந்த மனிதன்..."என்று நரிக்கு விளக்கமாக சொல்வதில் கவனமாக இருக்கும்போது, நரி மெதுவாக அந்த வழிப்போக்கனிடம்,"ஓய், சீக்கிரம் கூண்டுக் கதவைச் சாத்துமஅய்யா, நிற்கிறீரே"என்று கூறவும் பாய்ந்து சென்று கூண்டுக் கதவைச் சாத்தி விட்டு அப்பாடா என்று பெருமூச்சு விட்டான் அந்த மனிதன்.

அந்தநரி, "துஷ்டரைக் கண்டால் தூர விலகு "என்ற பழமொழியை அறியமாட்டீரா,உங்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போங்கள் ஐயா"என்று சொல்லிவிட்டுக் காட்டுக்குள் ஓடிவிட்டது.

உண்மைதான் அனுபவபூர்வமாக அறிந்து கொண்டேன் என்று சொல்லியவாறே வேகமாக அங்கிருந்து நடந்தான் அந்த மனிதன்.
அறியாமையாலும் அவசரத்தாலும் ஆணவத்தாலும் மீண்டும் கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டதைஎண்ணி உறுமியவாறு நின்றிருந்தது அந்தப் புலி.

நம் வாழ்க்கையிலும் நாம் இந்தப் பழமொழியை மறவாமல் இருந்தால் பல துன்பங்கள் நம்மை அணுகாது நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

எழுதியவர் : (11-Jun-14, 11:31 am)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 515

மேலே