குச்சிக்காலன் – 2
அந்தப் பெயர் பலகையைப் பார்த்தவுடன் குச்சிக்காலன் அதிர்ச்சியடைந்ததுடன் குழப்பமும் அடைந்தான். “டி. எஸ்ஸி’” என்றால் கண்டிப்பாக அது டிப்ளமா இன் சயன்ஸ் ஆகத்தான் இருக்கும். இது போன்ற டிப்ளமா இதுவரை இந்தியாவில் எந்தப் பாலிடெக்னிக் கல்லூரியிலும் கற்பிக்கப்படுவதாகத் தெரியவில்லையே. அடைப்புக் குறிக்குள் ‘ஆக்சன்”’ என்று போட்டிருக்கு. ஒண்ணுமே புரியலயே. பேருக்கு முன்னாடி ‘டாக்டர்’ன்னு போட்டிருக்கு. டிப்ளமா படித்தவருக்கு டாக்டர் பட்டம் யார் கொடுப்பாங்க. டிப்ளமா மற்றும் பி.டெக், பி.இ. படிச்சவங்க அவுங்க பெயருக்கு முன்னால் இஞ்சினியர் என்பதைக் குறிக்க ‘இ.ஆர்’ என்று போட்டுக் கொள்ளும் புதுப்பழக்கத்தைக் கடைப்பிடிக்கறாங்க. அதே போல காசிலிங்கமும் தான் சய்ன்ஸில் டிபளமா பெற்றுள்ளாதைக் குறிக்கும் வகையில் தன் பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ன்னு போடுக் கொள்றாரொ என்னவோ. எதற்கும் அவரிடமே கேட்டுவிடுவது நல்லது என்ற முடிவுக்கு வந்தான் நம் பட்டயத்தான்.
அடுத்த நாள் காலை பேராசிரியர் வெளியில் புறப்படும் நேரம் பார்த்து அவரை நோக்கி விரைந்தான் குச்சிக்காலன். “குட் மார்னிங் சார்! (வணக்கம் என்று தமிழில் சொல்வது குச்சிக்கு அறவே பிடிக்காது. தான் படித்தவன் எனப்தைக் காட்டிக் கொள்ள முடிந்தவரை ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவது அவனது இயல்பு. அரைகுறைப் படிப்பு படித்த தமிழர்களுக்கு உள்ள நோயிலிருந்து குச்சிக்காலனும் தப்பவில்லை). “உங்க நேம் போர்ட்லே (பெயர்ப் பலகையிலே) ‘டி.எஸ்ஸி’ போட்டிருக்கு. நீங்க எந்தப் பாலிடெக்னிக்லெ படிச்சீங்க?” என்று கேட்டான் பலராமன். இதைக் கேட்டவுடன் வயிறு குலுங்கச் சிரித்தார் காசிலிங்கம்.
பேராசிரியர் எதற்குச் சிரிக்கிறார் என்று குச்சிக்கு ஒன்றும் புரியவில்லை. “இவனுக்கு என்ன பதில் சொல்வது. இவனோ பாலிடெக்னிக்கில் டிப்ளமாப் படித்தவன். பத்தாம் வகுப்புக்குப் பின மூன்று ஆண்டுகள் படிக்க வேண்டிய படிப்பை தான் படித்து முடிக்க பத்து ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும் அதனால் தன் படிப்பு பொறியியல் கல்வியில் ’பிஎச்.டி’ படிப்புக்கு சமம் என்று பலமுறை சொல்லியிருக்கிறான. பாவம் பாலிடெக்னிக் டிப்ளமா முதலாம் ஆண்டு பி.ஏ., பி.எஸ்ஸி முடித்தமைக்குச் சமமான படிப்பு என்ற உண்மையே பலராமனுக்கு தெரியாது. தான் பெற்ற பட்டங்களைப் பற்றி இவனிடம் சொல்லி என்ன ஆகப்போகிறது என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொ ண்டார் காசிலிங்கம்.
”ஆமாம் பலராமன். நான் படிச்சது டிப்ளமா தான். வெளிநாட்லே படிச்சேன். உன்ன மாதிரியே நானும் பல வருஷம் படிச்சேன்” என்றார். இதைக் கேட்டதும் பலராமன் சந்தோஷப்பட்டான், “ரோம்ப சந்தோஷம் சார். நீங்களும் பல வருஷம் படிச்சு டிப்ளமாப் பட்டம் வாங்கினவர்னு காதிலெ கேக்கறபோது பெருமையா இருக்குதுங்க சார். அப்புறம் ‘டாக்டர்’ன்னு உங்க வேருக்கு முன்னாடி போட்டிருக்கே அதுக்கு என்ன காரணம் சார்?” “ ஓ, ஆதுவா? வெளிநாட்லே டிப்ளமா படிக்கிறவங்களுக்கெல்லாம் ‘டாக்டர் ‘ பட்டம் கொடுப்பாங்க” என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டே சொன்னார் காசிலிங்கம்.
”ஓஹோ அப்படியா? ஆறுமாசம் தபால்லெ படிக்கிறவனும் ‘டாக்டர்’ன்னு சொல்லிக்கறான். அஞ்சரை வருஷம் மெடிக்கல் காலேஜ்ல படிச்சவனும் ’டாக்டர்’ன்னு பேருக்குப் பின்னாடி போட்டுக்கறான். பிஎச். டி படித்தவனும் ’டாக்டர்’ன்னு போட்டுக்கறான. நீங்களும் நான் வெளிநாட்லெ டிப்ளமாப் படிச்சவன். எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்தாங்கன்னு சொல்லிக்கிறீங்க. இந்த டாக்டர் பட்டத்துகெல்லாம் மரியாதை கிடையாதுங்க சார். யார் வேணும்னாலும் ‘டாக்டர்’ன்னு போட்டுக்கறதெல்லாம் ஒரு பட்டமா? ஆனா என்னப் பாருங்க. இஞ்ஜினியர்ன்னு போட்டுக்கறேன். இஞ்ஜினியரிங் படிச்சவங்கதான் இந்தப் பட்டத்தைக் குறிக்கற மாதிரி பேருக்கு முன்னாடி ‘இ.ஆர்’ன்னு போட்டுக்க முடியும். இது தான் சார் எங்க படிப்போட தனித் தன்மை” என்றான் குச்சியப்பன். “ஆமாம் பலா, நீ சொல்றது சரி தான்” என்று சொன்னார் பேராசிரியர். “அப்புறம் இன்னொரு விஷயம் சார். நீங்க நிறைய சம்பளம் வாங்கறதா கேள்விப்பட்டேன். என்ன இருந்தாலும் நீங்க வாத்தியார் தான் சார்” என்றான் பலா.