ஒரு ரசிகனின் இரவு
நீல வானம்
நிறைத்து வைத்திருக்கும்
மேகங்களில்
யூகமாய் கூட
என் யுவராணி பயணிக்கவில்லை.
நீண்ட ஆகாயம்
நீட்டிக் கொண்டிருக்கும்
ஆடியில்
அவள் முகமில்லை.
மடல்களற்ற மலரில்
மகரந்தம்
மட்டும் தெரிகிறது.
ஒளிரும்
துகள்களெண்ணத்
துவங்கிய நான்,
எண்ணிக் கொண்டிருந்தேன்
புணைவுகள் நிரம்பிய
நினைவுகள் பற்றி.
உடலில்
ஒதுங்கிய உள்ளம்
வெளி வந்து
விரவி கிடக்கிறதோ
இந்த பிரபஞ்சமாளும்
இரவாய்.
உரைத்தது
உண்மை போலும்!
அவளைக் கண்ட
அன்று
ஆடிக்கழித்திருந்த மரங்கூட
துக்கமனுஷ்டித்து
கருப்புடைப் பூண்டுள்ளதே!
அவளிருந்த
இடமெல்லாம்
திரண்டு கிடக்கிறது
இல்லாமை.
விரிக்கப்பட்ட படுக்கை
விசாரிக்கப்படாமலே கிடக்கிறது.
ஒவ்வொரு
மணி ஓடியதும்
கடிகாரம் கதைக்கிறது
“உறங்கு
உன் கனவில்
வர
அவளங்கு காத்திருக்கிறாள்” என்று.
நனவுகள்
நினைவுகளால்
ஆட்சிபடுத்தியமையால்
நீட்சிகளின்
ஆட்சிக்கு அவர மறுத்து
பொறுத்திருக்கிறது மனம்.
கால முழக்கம் செய்த
கடிகார முனகல் கீதம்
ஞாபகங்களை ஒதுக்க,
ஓடி வருகிறாள்!
ஒளிந்து பார்க்கிறாள்!
மறைந்து போகிறாள்!
துடிக்கச் செய்கிறாள்!
கனவு நினைவாய்
தொடர
பொழுது விடிந்திருந்தது.