அப்பா
தோளில் சுமந்து உலகம் காட்டினாய் !
தேவைகள் தீர்க்கும் தேவதருவானாய் !
ஆயுளின் அர்த்தத்தை அன்றாடம் உணர்த்தினாய் !
மூவடியில் உலகம் அளந்த கடவுள் தெரியும்,
நீ ஓரடியில் உள்ளம் உணர்பவன் !
கண்டிப்பும் பரிவும் சொல்லி விளக்காமல்,
பார்வையிலேயே உணர்த்திய உன்னதம் நீ !
பார்த்ததும் பிடித்துவிடும் எதுவும்,
கேட்கவும் துணிந்துவிடும் மனது,
அதை கொணரும் சிரமங்கள் தெரியாமல்,
நீயோ பிரயத்தனப்படுவாய்,
என் ஆசைக்கு அர்த்தம் தந்து அழகாக்க !
இயலாது என்று இடிந்து போவேன்,
ஆற்றவொனாத காயங்களிலும் காரியங்களிலும்,
தோள் தடவி நேசம் காட்டுவாய்,
உன்னாலன்றி எவர் முடிப்பார் இதை !
முயற்சி இன்னொருதரம் என்பாய்,
முனைப்புடன் புறப்படுவேன் உடனே !
தவறிழைத்தால் முகம்பார்க்க மறுப்பாய் !
முழுவதும் உடைந்துபோவேன் !
நீ எதிர்பார்த்த மாற்றத்தை,
என் நாவினிலேயே வெளிப்படவைப்பாய் !
அங்கே ஆங்காரமாய் வதம்செய்யும் உன் மௌனம் !
கற்றுத்தந்த ஆசான் மட்டிலுமா?
நீ பெற்றுவளர்த்த கடவுளாயிற்றே !
உன்னைப்பற்றி பேச எண்ணங்கள் கோடி உண்டு,
ஏனோ நடுங்குகிறது என் கைகளின் விரல்கள்,
அதற்கு கடியமும் சொல்கிறது கடைவிழியின் கண்ணீர் !
அப்பா !!
என் அண்டமும் ஆகாசமுமே,
உன்னில் பாதியல்ல ஒற்றை நகம் நான்,
கிட்டகிடைக்காத நிலாவாய் ஆயினும்,
நான் எட்டிப்பிடித்தவன் நீ !
அப்பா நீ அற்புதம் !!