மஹாபாரதத்தை நேசிக்கிறேன்…4

ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய:
காதல் நதி (அப்சரஸ்)
*********************************
அப்சரஸ் என்பவள் யார்? அவளொரு ஜலகன்னிகை, பேரழகி, தேவர்களுடன் வசிக்கும் அவள், எப்பொழுதேனும் புவிக்கு வந்து செல்வாள், அவள் வரும்பொழுது மரம் செடி கொடிகள் மட்டுமல்லாது எல்லாவகையான விலங்குகள்கூட அவளை ஒருமுறையேனும் தொட்டுவிட விழையும் என்று மஹாபாரதத்தில் ஊர்வசி என்கிற தேவகன்னிகையானவள் வர்ணிக்கப்படுகிறாள்.

சந்திரனுக்கும் தாரைக்கும் பிறந்தவன் புதன், புதனுக்கும் இலாவுக்கும் பிறந்தவன் புரூரவன். இவன் ஒருமுறை தனது தேசத்திற்குட்பட்ட நதியில் குளித்து கொண்டிருந்த அப்சரஸ் ஊர்வசியை கண்டு காதலுற்றான், தன்னை திருமணம் செய்துகொண்டு, தனது ராணியாக, தமது அரண்மனையிலேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டான். அவள் விளையாட்டாக, எனது செல்லப்பிராணிகளான ஆடுகளை நன்முறையில் கவனித்துக் கொள்ளவேண்டும். மேலும், என்னைத்தவிர உங்களை யாரும் ஆடையின்றி பார்க்கக்கூடாது, என்றாள். அவளே எதிர்ப்பார்க்கதவாறு புரூரவன் சம்மதிக்கிறார், ஊர்வசியோ வேறுவழியின்றி திருமணம் செய்துகொள்கிறாள்.

ஒரு மனிதனின் முழுவாழ்கைக்கான காலம் இந்திரனின் ஒரு கண்சிமிட்டும் நேரம் தான். இமைக்கும் பொழுதில் கூட அவனால் ஊர்வசியின் தற்காலிகப் பிரிவைத் தாங்க முடியவில்லை. ஆகவே, மற்ற தேவர்களை அழைத்து அவளை அழைத்துவர ஆணையிடுகிறான். தேவகன்னிகையான ஊர்வசி இப்போது அரசியாக வாழும் காலம் பிடித்துவிடுகிறது. இப்புதிய வாழ்வையும் ரசிக்கிறாள். புரூரவனுக்கு நிறையக் குழந்தைகளை ஈன்றளிக்கிறாள். மனிதகுலப் பெண்ணாகவே மாறிவிடுகிறாள்.

ஓரிரவு ஊர்வசியின் ஆடுகளை சிலர் இரவோடிரவாக ஓட்டிசெல்வதை கண்டுகொள்கிறாள் தன்மேல் உள்ளக் காதலினால் மயங்கிக் கிடந்த புரூரவனை எழுப்பி தனக்களித்த வாக்குறுதியை நினைவுபடுத்தி தனது ஆடுகளை மீட்டுவருமாறு பெருங்குரலெடுத்து புலம்பினாள். உடனே, புரூரவன் தான் ஆடையின்றி இருப்பதைக்கூட மறந்து ஆடுகளை மீட்க படுக்கையிலிருந்து குதித்தோடினார். திருடர்களை துரத்திக் கொண்டு அரண்மனை விட்டு அதிவிரைவாக ஓடிடும் பொழுது வானத்தில் இடிஇடித்து பெரும் மின்னலொன்று தோன்றியது. அந்த மின்னல் ஒளியில் நகரிலிருந்த அனைவரும் புரூரவனை நிர்வாணமாக இருந்ததைப் பார்த்துவிட்டார்கள். அதனால், ஊர்வசி புவியில் இருப்பதற்கான கட்டுப்பாடு நீங்கியது. அவள் அமராவதிக்கு செல்லும் நேரம் நெருங்கிவிட்ட பிறகுதான் தெரிந்தது இவையனைத்தும் அப்சரஸ் ஊர்வசியை விண்ணுலகம் அழைத்துவர, இந்திரனின் ஆணைக்கிணங்க தேவர்கள் செய்த சூழ்ச்சி.

அதோ, புறவுலகம் மறந்து புலன்களை இன்புறச் செய்து பிறவிப் பயனளித்த தன் இன்னுயிர்க் காதலி தன் கண்முன்னே விண்ணுலகம் செல்வதை கண்டு கலக்கமடைந்து பித்து பிடித்தவர் போல், அப்சரஸ் ஊர்வசியை வனம் மற்றும் நதிக்கரைகளில் வாழ்நாள் முழுவதும் தேடியலைந்தார். இன்றைக்கும் தேடியலைவதாக சிலர் நம்புகிறார்கள் மேலும், சிலர் ஊர்வசி புரூரவனை கந்தர்வனாக மாற்றி தான் நடனமாடும் இடங்களில் எல்லாம் கானம் இசைத்து எப்பொழுதும் உடனிருப்பவனாக அமைத்துக்கொண்டாள் என்பாரும் உண்டு.

அப்ஸா என்பது நீர். ஆக, அப்சரஸ் என்றால் ஜலதேவதை. நீர் என்பது வானத்திலிருந்து மழையாக பொழிந்து பிறகு, நதியாக கடலில் கலந்து, மீண்டும் முகிலாக மாறி, வானையே சென்றடைகிறது.
"நீரின்றி அமையாது உலகு" இத்தண்ணீரே புவியைக் காக்கின்றது. அதைப்போலவே வானுலகத்திலிருந்து வந்த ஊர்வசி, காதல் நதியாகி புவியாளும் புரூரவனை தானாண்டு வாழவைத்து, மீண்டும் விண்ணுலகை அடைந்தாள் என்பதை உள்ளீடாக பாரதம் உணர்த்துகிறது.

இச்சம்பவத்தை முன்வைத்து கவி காளிதாசர் விக்ரமோர்வசியம் என்ற காவியத்தை வரைந்துள்ளார். அதில், புரூரவன் பேரழகன் என்றும் ஊர்வசியே அவனைத் காதலித்தாள் என்றும் தனக்கு பிறக்கும் குழந்தையை அவன் பார்க்காதவரை புவிவாழ்வு நிலைக்கும் என்று கடவுள் அனுமதி அளித்ததாக எழுதியிருக்கிறார். இதுபோல் புரூரவன் - ஊர்வசி காதல் பற்றி பல்வேறு வடிவங்களில் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக நினைவுகூறப்படுகிறது. அடியேன் இத்துடன் நிறைவுசெய்கிறேன்.

புரூரவனுக்கும் ஊர்வசிக்கும் பிறந்தவன் நகுஷன், நகுஷனின் மகன் ஆயு, ஆயுவின் மகன் யயாதி.

(இந்தப்பதிவுடன் இணைத்திருக்கும் ஊர்வசி புரூரவனிடமிருந்து விடைபெறும் ஓவியம் ராஜாரவிவர்மா வரைந்தது.)

எழுதியவர் : ரமணபாரதி (16-Jun-14, 1:12 am)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 168

மேலே