பூனையின் கடவுள்- நூல் அறிமுகம் -பொள்ளாச்சி அபி

கவிஞர் கோசின்ரா எழுதிய பூனைகளின் கடவுள்.!” தொகுப்பு, புது எழுத்து பதிப்பகத்தின் சார்பில்,116 பக்கங்களுடன்,ரூ.70 விலையில் வந்துள்ளது வெறும் ஐம்பது பக்கங்களுடன் வெளிவரும்,அக்கடா,துக்கடா தொகுப்பெல்லாம் 100,200 என விலைவைத்து விற்கப்பட்டுக் கொண்டிருக்க,விலைமதிப்பற்ற சிந்தனைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள இத்தொகுப்பு கவிதை எழுதும் முயற்சிகளில் இருப்பவர்கள் மட்டுமல்ல,பிரபல கவிஞர்களின் கையிலும் இருக்கவேண்டிய தொகுப்பு என்பது எனது கருத்து.

கோசின்ரா எனும் புனைப்பெயரில் இயங்கும் இவருடைய இயற்பெயர்-கோ.ராசேந்திரன்.கடந்த பதினைந்து வருடங்களாக எழுதிவரும் இவரின் அரசியல் கவிதைகள் மிகப்பிரபலம்.சமூக யதார்த்தங்களின் மீது இவர்கொண்டுள்ள கூர்மையான பார்வையும்,விமர்சனமுமே இவருடைய கவிதைகளின் பாடுபொருளாக இருக்கிறது.

கவிஞரின் முதல் தொகுப்பு-“என் கடவுளும் என்னைப் போல கறுப்பு”

இரண்டாவது தொகுப்பாக “பூனையின் கடவுள்” வந்துள்ளது.இதில் உள்ள ஒவ்வொரு கவிதை குறித்தும்,ஒரு கட்டுரை வரையவேண்டிய அளவு சிறப்பு பெற்றிருந்தாலும்,சில கவிதைகளை மட்டும்,இங்கு எடுத்துக் காட்டுகளாகக் கொள்கிறேன்.

பூனையின் கடவுள்..! தொகுப்பின் தலைப்பைப் பார்த்ததும்,பூனைக்கு ஒரு கடவுள் இருக்குமா..? பூனை என்பது ஒரு விலங்காயிற்றே.? விலங்குகளுக்கும் கடவுள் இருக்குமா..? இல்லை,தொகுப்பின் பெயர் வித்தியாசமாக இருக்கவேண்டுமே என்பதற்காக வைக்கப்பட்ட,வலிந்து திணிக்கப்பட்ட பெயராய் இருக்குமோ..? இயல்பாக எழும் பல வித ஐயங்களுடன் முதலில் அதனைத்தான் வாசித்தேன்.

எதற்காகவென்றே தெரியாத நிலையில், “என்மீது ஆத்திரப்பட்ட பூனையொன்று.., என்று தனது கவிதையைத் துவங்குகிறார்.
என்மீது ஆத்திரப்பட்ட பூனையொன்று,
தன்னுடைய கடவுளின் வீட்டுக்கு அழைத்துச் சென்றது.
குறுகலான சந்து முனைகளைத் தாண்டி,
விசாலமான பரப்பிலிருந்த பூனையின் கோவில்.
கோவிலின் நுழை வாயிலிலிருந்து
தொடங்கிற்று பூனையின் நாற்றம்.,
மியாவ்,மியாவ் வென்று முணுமுணுத்துக்
கொண்டிருந்தது மந்திரங்களை,
மூடிக்கிடந்த திரையை விலக்கியபோது,
பெரிய பூனையின் சிலையிருந்தது.
யாரென்றேன்..! என்னுடைய கடவுளென்றது.
கர்ப்பக் கிரகத்திலிருந்து துரத்திற்று துர்நாற்றம்,
போன மாதம் கடவுளுக்கு எலிக்கறி படைத்தேன்,
கடவுள் இன்னும் சாப்பிடவில்லை.!.
கடவுளை வணங்கச் சொல்லி கட்டளையிட்டது.
பூனையின் கடவுளை வணங்கினேன்,
பின்பு நாய்களின் ஆலயத்திற்கும்,
நரிகளின் இறைவனிடமும்,சென்று திரும்பினேன்,
நாயின் கடவுள் நாயாகவும்,
நரியின் கடவுள் நரியாகவுமிருந்தார்.
விலங்குகளின் கடவுள் ஒரு மனிதனாக இருக்கவில்லை…என்று கவிதையை முடிக்கிறார்.

அப்படியானால்,மனிதர்களின் கடவுளும் ஒரு மனித உருவமாகத்தான் இருக்கும்.இது இயல்பான ஒரு விஷயம்தானே என்று மறைமுகமாக உணர்த்திச் செல்வதோடு, நாற்றமெடுக்கும் கோவில்,துர்நாற்றமடிக்கும் கர்ப்பக் கிரகம்..என அடுக்கிக் கொண்டே செல்லும் கவிஞர்,அதன் காரணங்களை,நமது கோவில்களோடு ஒப்புநோக்கும் வகையில் பல்வேறு விதமாக,குறியீடுகளால் நிறைந்த ஒரு கவிதையாக, நாம் புரிந்து கொள்ளும் வகையில் இடம் கொடுத்து நகர்வது வெகுசிறப்பு.

அதேபோல்,நாங்கள் என்ற தலைப்பில்,

“இந்த தேசம் எத்தனை பழமையானதோ,
அதைவிடப் பழமையானவர்கள் நாங்கள்..!
இந்த தேசத்தில் கடவுள்,
எவ்வளவு மேம்படுத்தப் பட்டிருக்கிறதோ,
அதைவிட மேம்படுத்த வேண்டியவர்கள் நாங்கள்..!
என்பதாக இத்தொகுப்பின் முதல் கவிதை துவங்குகிறது.

இந்த தேசத்தைவிடவும்,கடவுளை விடவும் பழமையானவர்களாக,மேம்படுத்த வேண்டியவர்கள்..யாராக இருக்கமுடியும்..?

அம்பானி,அதானி,டாட்டா,பிர்லா வகையறாவாக நிச்சயம் இருக்கமுடியாது.தேசத்தின் உயர்மட்ட அதிகாரங்களில் இருப்பவர்களாகவும் இருக்கமுடியாது.நம்மைப்போல நடுத்தர வர்க்கங்களாகவும் இருக்கமுடியாது.அப்படியானால்,மேம்படுத்தப்பட வேண்டியவர்கள் யார்.?

யார் இன்றுவரை சராசரி வாழ்க்கைக்கு தேவையான ஆதாரம் இன்றி வாழ்கிறார்களோ,யார் இந்த சமூகத்தால் மிகவும் தாழ்த்தப்பட்டவர்களாக,ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறார்களோ..அவர்கள்தான் மேம்பாட்டுக்கு உரியவர்கள் என்று,கவிஞர் நிறுவிச் செல்கிறார்.

இந்தக் கவிதை வெறும் நான்கு வரிகள்தான், ஆனால்,நாலாயிரம் பக்கத்திற்கு எழுதவேண்டிய நம் நாட்டின் சரித்திரம் இதற்குள் புதைந்து கிடப்பதாகவே நான் காண்கிறேன். கவிதை என்பது அது எழுதப்பட்ட வரிகளில் கிடப்பதல்ல,அந்த வரிகள் எழுப்பும் சிந்தனையிலேயே இருக்கிறது என்பதற்கேற்ப,இந்த வரிகளை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

பொதுவாக,கவிதை என்பது எங்கிருந்து உருவாகிறது.? என்ற கேள்விக்கு நம் எல்லோரிடத்திலும் ஒரு நியாயமான விடை இருக்கத்தான் செய்கிறது.உதாரணமாய்ச் சொல்லவேண்டுமெனில்,தோழர் க.அம்சப்ரியாவின் கவிதையொன்று..,

அயர்ந்து தூங்கும் நடு இரவொன்றில்-
செல்லமாய் தோள் தட்டியெழுப்பும்,-
பயணத்தின் ரசிப்பொன்றில்
கன்னம் கிள்ளிப் புன்னகைக்கும்-
முதல்முங்காய் ஆற்றில் இறங்கி
நிமிர்கையில் நீருக்குள்ளிருந்து
விளையாட்டாய் சீண்டும்-
வயிற்றுக்கான பிழைப்பில் மூழ்கி
சோர்ந்திருக்கையில்,
பூவொன்று நீட்டி ஆறுதலாய் நிற்கும்-
வேலையற்ற பொழுதுகளிலும்
எப்போதும் மெல்ல முறைத்துச் சிலிர்ப்பூட்டும்
ஏதேனும் ஒரு கவிதை வரி..! -

இப்படி கவிதை முகிழ்க்கும் புள்ளியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவமிருக்கையில்,கவிஞர் கோசின்ரா தனது கவிதை துவங்கும் இடமாக சுட்டிக் காட்டுவது,நமக்கு பிரமிப்பையும், மனிதாபிமானமிக்க அவரது படைப்புள்ளத்தையும் காட்டுகிறது.

“எங்கெல்லாம் சமூகக் கொடுமையாய்,
ஒரு உடல் எரிக்கப்படுகிறதோ-
எங்கெல்லாம் காதல் சாதிவெறியால் பிரிக்கப்படுகிறதோ-
எங்கெல்லாம் அதிகாரிகளின் அலட்சியத்தால்-
ஒரு உயிர் துவண்டுபோகிறதோ,-
எங்கெல்லாம் அத்துமீறலாய்
ஒரு வன்முறை அரங்கேற்றப்படுகிறதோ,
எங்கெல்லாம் அலட்சியத்தால்
ஒரு உயிர் பறிக்கப்படுகின்றதோ-
எங்கெல்லாம் வறுமையில்
ஒரு உடல் வெந்து தணிகிறதோ,-
எங்கெல்லாம் கடவுளின் பெயரால்
ஒரு பித்தலாட்டம் நடத்தப் படுகிறதோ-
எங்கெல்லாம் ஒரு நாடு,
இன்னொரு நாட்டில் யுத்தத்தைப் புகுத்துகிறதோ,
எங்கெல்லாம் ஒரு நாட்டின் செல்வம்
இன்னொரு நாட்;;டால் சுரண்டப் படுகிறதோ,
எங்கெல்லாம் மதத்தின் நிலங்களில்
தீவிரவாதம் பயிராகிறதோ,
எங்கெல்லாம் பயங்கரவாதம்
மக்களைக் கொன்றுவிடுகிறதோ,
அங்கெல்லாம் ஒரு எதிர்ப்புக் குரல்,
தானாகவே ஒலிக்கத் தொடங்கும்..,
அந்தக் குரலின் முதல் எழுத்திலிருந்து
தொடங்குகிறது என்னுடைய கவிதை..!-

இது வெறும் கவிதையாக மட்டுமின்றி படைப்பாளிகளாக இருப்பவர்களின் கடமை என்னவென்று உணர்த்திச் செல்வதாகவே இக் கவிதையை நான் பார்க்கிறேன். அப்படியானால்,இந்தத் தொகுப்பு முழுவதுமாக இருக்கும் கவிதைகள் எப்படிப்பட்ட கவிதைகள்,அவை யாருக்காக பாடப்பட்டுள்ளன என்று நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியும்.

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளில்,பெரும்பாலானவை, கடவுள் மறுப்பு,கடவுள் எதிர்ப்பு,சாதி,மத எதிர்ப்பு சிந்தனைகளால் நிரம்பி வழிந்தாலும், அவையெல்லாம் முரட்டுத்தனமான விமர்சனப் போக்குகளாக இல்லாமல்,நமக்கு தெளிவை அளிக்கும் சிந்தனைகளாகவே விரிந்து பரந்து கிடக்கிறது என்று உறுதியாக சொல்லிவிடமுடியும்.

அது மட்டுமின்றி வேறு பல தலைப்புகளிலும் இடம் பெற்றிருக்கும் சில கவிதைகள்,நமது பழக்கப்பட்டுப் போன சிந்தனைகளுக்கு எதிராகவும், புதுமையாகவும், நம்மை மாற்றியமைத்துக் கொள்ளும்படியாகவும் உள்ளன.

மரங்கள் கவிதை எழுதுகின்றன என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு கவிதையில், வெறும் மனிதனாக இல்லாமல்,ஒரு கவிஞனாக மரத்தைப் பார்க்கின்ற தனக்கு தோன்றுவதாக,

“கல்லெறிபவர்களுக்கு மரங்கள்
விதைகளை பரிசாகத் தருகின்றன.
அதனால்தானோ என்னவோ
மரங்கள் புத்தனைத் தேடிப் போவதில்லை.
புத்தர்கள்தான் மரங்களைத் தேடிவருகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

நதியை உன் வீட்டிற்கு கொண்டு வருவேன்,துப்பாக்கிகளின் தாய்மொழி,பழுப்புநிறப் பொய்,கடவுளின் பிரேதப் பரிசோதனை அறிக்கை,..என பல்வேறு தலைப்புகளின் கீழ் மாறுபட்ட சிந்தனைகளுடன், உணர்ச்சிகளுடன் எழுதப்பட்ட கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.இதில் நகைச்சுவையுணர்ச்சிக்கும் பஞ்சமில்லை.

நாய்ப்பிழைப்பு என்ற தலைப்பில் எழுதிய ஒரு கவிதை,வாசித்து முடித்தவுடன் வெடிச்சிரிப்புக்குள் ஆழ்த்துவதோடு,ஆழமான சிந்தனைக்குள்ளும் நம்மை செலுத்தும் என்பது உறுதி.

அதேபோல் “எல்லோரும் பார்க்கும் படியாயிருந்த சாட்டை தொலைந்து விட்டது.” என்ற தலைப்பில் உள்ள ஒரு கவிதையில்,

அரண்மனையின் பலிபீடத்திலிருந்தது ஒரு காலத்தில்-
மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பிறகு-
ஜமீன்தார்களின் காலம் முடிந்தபிறகு-
சாட்டையும் தொலைந்து விட்டது.-
அந்தச் சாட்டைகளின் நகல்
வீடுகளில் தொங்கிக் கொண்டிருந்தது-
விருந்தினர்களை பயமுறுத்திக் கொண்டு-
சாட்டைகளில்லாமல் நடமாடிக் கொண்டிருந்தனர் மக்கள்-
சாட்டைகள் மனிதனின் மாமிசத்தைத்
தின்றதெல்லாம் பழைய காலம்-
இப்போது சாட்டைகள் அலங்காரப் பொருட்களாகிவிட்டன-
அரசியல்வாதிகள்,நடிகர்கள்
அவ்வப்போது சொடுக்குவார்கள் சாட்டையை-
எல்லாம் நடிப்புத்தான்-
அப்புறம் சாட்டைகள் யார் கண்ணிலும் படவில்லை-
இனி வரலாற்றாசிரியர்கள் எழுதுவார்கள்-
சாட்டைகளின் காலம் முடிந்து
பதவிகளின் காலம் தொடங்கிவிட்டதென்று..!

அரசர்கள் காலத்தில்,அதிகாரத்தின் குறியீடாக இருந்த சாட்டை,இப்போது பதவியாக உருமாறி இருக்கிறது என்பதோடு,அரசியல் என்பதும்,பதவிகள் என்பதும் எந்த அளவு கொடூரமாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதை எடுத்துக் காட்டும் விதமாக இருக்கிறது.

இத்தொகுப்பில் அமைந்திருக்கும் கவிதைகள்,அவருடைய வழக்கப்படி சற்று, நீண்டவரிகளுடன் தான் அமைந்திருக்கிறது.சில கவிதைகள் இரண்டாவது பக்கத்திலும் விரிந்திருக்கிறது.ஆனால்,அதில் சொல்லப்பட்ட விஷயங்கள் ஒவ்வொன்றும்,மானுட வரலாற்றை மறுபரிசீலனை செய்து கொள்ளவும்,மாற்றிக் கொள்ளவும் வேண்டிய நிலைக்கு நம்மைத் தள்ளிக் கொண்டுபோகிறது. படைப்பாளியாக மிளிரத் துடிப்பவருக்கு,இந்த வாசிப்பு அவசியமும் ஆகிறது.

பொதுவாக,புதிதாக எழுதவருபவர்கள் மட்டுமின்றி,ஊரறிந்த சில கவிஞர்களும் கூட, நிலா,மேகம்,பூ,வானவில்,பறவை,அம்மா,நட்பு,காதல்..என்பனவற்றை தவிர்த்துவிட்டு ஒரு கவிதை எழுதுங்கள் என்று சொன்னால்,சற்று திணறித்தான் போகிறார்கள். ஆனால்,தொடர்ந்து நல்ல கவிதைகளை எழுதவேண்டும்..என்று ஆர்வமுள்ள கவிஞர்கள் இந்தத் தொகுப்பை அவசியம் வாசிக்க வேண்டும்.

காரணம்,உள்@ர் சாதிப் பிரச்சினைகள் முதல் சர்வதேச அரசியல் வரை நிலவும் சிக்கல்களை அலசுகின்ற தொகுப்பாக,தனது மேதமையை மட்டுமே காட்டும் படைப்பாக,வார்த்தை ஜாலங்களின்றி, தமிழ் படிக்கத் தெரிந்த அனைவருமே, கவிதையின் சுவையை,பொருளை உணர்ந்து கொள்ளும்படி,மிக எளிமையான வார்த்தைகளால்,படைக்கப்பட்டதாக “பூனையின் கடவுள்” தொகுப்பு உள்ளது.

மிக நீண்ட காலத்திற்குப்பிறகு,முழுக்கமுழுக்க பயனுள்ள..,நேரத்தைத் தின்று தீர்க்காத.,கற்றுக் கொள்ள வாய்ப்பளித்த ஒரு கவிதைத் தொகுப்பை வாசித்ததன் நிறைவு,இத்தொகுப்பை வாசித்ததன் மூலம் எனக்குள் இருக்கிறது.அந்த நிறைவை நீங்கள் அனைவரும் பெறவேண்டும் என்ற எனது ஆவலை,இங்கு தெரிவித்துக் கொண்டு,கவிஞர் கோசின்ராவிற்கு எனது வாழ்த்துக்களையும்,இந்த நல்ல வாய்ப்பை அளித்த தோழர்கள் அம்சப்ரியாவிற்கும், பூபாலன் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

[15-06-2014- பொள்ளாச்சி இலக்கிய வட்டம்-14-வது சந்திப்பு-]

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (15-Jun-14, 8:30 pm)
பார்வை : 236

மேலே