பாசம் மறந்த தினம்
தினந்தினம்
உன்னை பார்த்து
சிரிக்க கற்றுகொண்ட
என் உதடுகள்
இப்போதெல்லாம்
மௌனமாய் இருக்க
பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கின்றன ........!!
இருவருக்கும்
மொழிகள் தெரிந்தும்
பேச வார்த்தையின்றி போகிறது
வார நாட்கள்.......................!!!
நீ சிரித்து நான் சிரித்த நாட்கள்
எல்லாம் நடைபழகிய
நடைவண்டியாய்
ஓரங்கட்டபட்டுவிட்டன............
நீ
வளரும் பொழுதுகளில்
வழிகாட்டியாய் தெரிந்த நான்
இப்போது
விருப்பமில்லாமல் பெற்ற
வழிதெரியா குழந்தையாகிறேன் .............. !!
கதை சொல்லும்
நாட்களில் எல்லாம்
கதாநாயகன் ஆகிப்போன
நான்
நடக்கமுடியாமல்
உன் எதிரில் நிற்பதால்
எதிரியாகிப்போகிறேன்...........
உன்னை கருவறை சுமந்த பிறகு
இதயஅறையில் சுமந்த
என்னை
இருட்டறையில்
வைக்கக்கூடவா இடமில்லை
உன் மனதில்.? .................
என்
தாய் என்னை
வலியுடன் பிரசவித்தாள்
நீ
என்னில் வலிகளை
பிரசவிக்கிறாய்
உன்னை
நெஞ்சில் சுமந்ததற்க்காக
நீ மிதித்த போது
வலிக்காத என் நெஞ்சம்
நீ மதிக்காத போது வலிக்கிறது
இன்னும் அதிகமாய்..................!!!
உன்னைப்போல் ஒருவன்
உலகத்தில் இல்லை..
ஏன்
உனக்கே கூட பிறக்கலாம்
அந்நிலை காணும்வரை
என் ஆயுள்
நீளவேண்டாம்
அணுவணுவாய் சாகும்
இந்த நிலை
ஆவியாகிப்போன என் அன்புநிலை..................
முகத்தில் சுருக்கங்களுடனும்
நெஞ்சில் வருத்தங்களுடனும்
முதியோர் இல்ல
மூச்சுக்காற்றின் முனகல்கள்...............
கவிதாயினி நிலாபாரதி

