வாலி நீ வாழி நீ

('வள்ளுவம்' தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட'வாலி', நீ வாழி|)

எந்த அரங்கிலும், நீயே அங்கு ராஜன்
குரங்கு ராஜன் 'வாலி' பெயர் புனைந்த
ஸ்ரீ ரங்கத்து ரங்க ராஜன்!

உனை மறைந்துத் தாக்க யெத்தனிக்கும் அந்த இராமபாணம்,
கிரங்கிச் சொக்கி நிக்குமே பருகி உந்தன் கவிச்சோமபானம்!

முப்பாலைத் தப்பாமல் அருந்திய அன்னம் நீ; அதிலும்
தேன்குழைத்து இன்பத்துப்பா லூட்டிய
அய்யராத்து அய்யன் நீ!

சிலேடைகளைச் சில்லறைகளாய் சிதறிவிட்டச் சீமான் நீ!
பதங்களைப் பந்தாடி பாமரனுக்குப்
பகிர்ந்தளித்த பாவலன் நீ!!


பெண்மையில் திளைத்தாய்;
மடமையைத் துளைத்தாய்
இயற்கையைத் துதித்தாய்;
அறிவியல் மதித்தாய்

மெய்ஞானம் உணர்ந்தாய் - 'மெய்' பொய் யென்றுரைத்தாய்
அஞ்ஞானம் துறந்தாய் - கவியால் புவியை யீர்த்தாய்

நீ வாழ்ந்த வரை வாலி, அறிவாளி நீ! புவி
நீங்கினும் வாலி, கவிப்பூவாளி நீ!

வாளி வாளியாய் அள்ளி யிறைத்தாலும்
வற்றாத தமிழ் கேணி நீ, வாலி நீ! வாழி நீ!!

எழுதியவர் : வைரன் (17-Jun-14, 8:19 am)
சேர்த்தது : வைரன்
பார்வை : 138

மேலே