சியாச்சினிலிருந்து
கழிசேர் காலமோ இல்லை
கலிசூழ் காலமோ?
பனி சூழ் மலையின்
இருள்சேர் பாறையின் இடுக்கிலிருந்து...
எண்ணிக்கையின் பின் புலங்களில்
கணிதம் கசந்தது! முன்நெற்றி
முடிகோதலில் முட்டி போன
தோட்டாவுடன் சேர்த்து மூன்று !!!
இதோ எனக்கருகே நிமிர்ந்து
நிற்கும் நமது உயிர்
கொடி சில முறையாவது
எனக்காக படபடக்கும் நிச்சயமாக....
பனிப்புதர்களில் இள ரத்தம்
பாய்ச்சும் நான்! சிறுவயல்
சின்னம்மையின் தவப் புதல்வன்!
சேக்காளி பயலுகளின் செல்வம்(எ)செல்வராசு ....
ஏகாந்தம் சேர்க்கும் கழனிக்
காட்டின் கடைசி வாரிசுநான்!
கார்கில் காப்பில் கருகிப்
போன கதிரேசனின் தம்பிநான்...
ஆத்தாவின் அரைக்காப்படி செல்லம்!
ஒத்தருவா தொலைச்சாலே துடிச்சு
போகும்! மொத்தமுமாய் சேர்ந்து
போனால் தாங்குமா தெரியாது...
அழுக்கு வேட்டி ஆட்டுகுச்சி
அப்பன் அரைமனுசன் ஆயி
ஆண்டு பலஆச்சு! கதிரேசன்
பக்கத்துல குழிதோண்டுமா தெரியாது...
பிஞ்சு புளியங்காயும் செவ்விழனி
தேங்காயும் நேசம் எனக்கு!
எட்டிப்போன வாரத்தில் மாங்காயும்
பிடித்துப்போனது மனைவியின் மசக்கையில்...
வரி வரியாய் அவள்
வரையும் கடிதங்களின் கடைசிவரி
எப்பொழுதும் தித்திக்கும் முத்தங்களுடன்
முற்றுபெறாத மூன்று புள்ளிகள்...
என் பிள்ளை பற்றுகளின்
தேடலில் தினமும் ஒரு
பொம்மையாய் பெட்டி புழுங்கியது!
தொலைபேசி தொடுதிரையாய் புல்லரிப்புகள்....
தோட்டாக்கள் தராத கண்ணீர்
அவள் எண்ணங்களில் ஆறாய்!
மீண்டுவந்தாலும்! செத்து போனாலும்!
வருகிறேன் உருவாகவோ! கருவாகவோ!....
மையிருட்டு சூழலும் கையிருக்கும்
துப்பாக்கியும் ஒரே நம்பிக்கை!
விடியல் எனக்கா எமனுக்கா
அழுகுரலும்! ஆனந்தகண்ணீரும்! விடியலிலேயே ...
(இவரைபோன்று தாய் நாட்டிற்காக உதிரம் கொடுத்த அனைத்து வீரர்களுக்கும் இக்கவி சமர்ப்பணம்)