தமிழன்பன் அவர்களுக்கும் தமிழுக்கும் நன்றிகள்

அன்பு எசக்கியேல்
அமுதன் மடல் கண்டேன்..மகிழ்ந்தேன்
புதிய வாழ்வின், புதிய உலகின் அடையாளங்களாய் வரும் புன்னகை வார்ப்புகளின் பூங்கரங்களில் வெண்பா செண்டுகளா..?என்ன வியப்பு..?

பொங்கிவருகிற புதுவெள்ளமென குறள் வெண்பாக்கள்........ என்னை நான் இழந்து நுகர்ந்தேன்....... என்னை நான் இழக்காமல் என் யாப்பாசான்களை வணங்கினேன்.

தமிழ் யாப்பாற்றல் காலம் கடந்து வளரும் பேராற்றல் என்பதை –வெண்சீரும் இயற்சீரும் காளியப்பனிடம் நுழைந்து முரசறைக்கின்றன.

உணர்வுகளில் மையமிட்டு , உண்மைகளில் பதியமிட்டு , கலை அழகுகளில் கை ஒப்பமிட்டுப் பிறந்துள்ள இக்குறட்பாக்களை வாசிக்கவும் நேசிக்கவும் இன்று வள்ளுவன் இல்லையே என்பதுதான் என் ஏக்கம்..!அவன் வழியில் வந்த எனக்கு வாய்த்தது என்பதில் எனக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி. !!

இன அடையாளத்தைக் காப்பது போலத் தமிழனுக்குத் தமிழ் அடையாளத்தையும் காக்கும் கடமை உண்டு. தமிழ் அடையாளமே தன் இன அடையாளம் என்பதை உலகத்தமிழர் உணர்வர்: உள்ளூர்த்தமிழரும் உணர்ந்துள்ளனர் என்பதற்கு அடையாளம் காளியப்பனின் இக்குறட்பாக்கள்..

கடந்தகாலத்தைப் பார்த்துத்தான் வருங்காலத்தைச் சமைக்க முடியும். வாழ்க்கைக்கு மட்டுமல்ல : மொழிக்கும் இது முற்றாகப்பொருந்தும். இது கடந்த காலத்தைக் கல்லறைகளிலிருந்து மீட்டெடுப்பது என்றாகாது கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்டு நிகழ் காலத்தை நிகழ்த்துவதாகும்.:எதிர் காலத்தை முடிவு செய்வதாகும்.

ஓசையும் உணர்வுமாய்ப் பேரர் உலகம் போடும் முற்றுகையில் தமிழ் இனிக்கிறது:கவிதை இனிக்கிறது:நானும் நீங்களும் இனிக்காமல் எப்படி..?

தமிழன்பன்
========
இப்படிப்பட்ட நல்ல வாழ்த்தொன்றைப் பெறுவது எனக்கு மிகப் பெரிய பேறாக இருந்துள்ளது. இதற்கு மூல காரணமான அகனுக்கு நான் மிகவும் கடன்பட்டுள்ளேன் என்பதை இவ்விடத்தில் தெரியப்படுத்த விழைகிறேன்.

என்னுடைய நன்றியை இவர்கள் எல்லோருக்கும் எப்படிச் சொல்லிக் கொள்வேன்..?
நான் எழுதுவதில் இன்னும் குறைபாடுகள் நிறைய உள்ளன என்பதை அறிகிறேன்..ஆகையால்

தமிழன்பன் அவர்களுக்கு இது:

உண்டும் உறங்கியும் ஓய்வெடுத்த பின்னரே
கண்டேன் அகனின் மடல்!
**
வெண்பாவின் செண்டு! வியக்கவைத்த சொல்லாட்சி!
கண்பாவை கூட்டும் களிப்பு!

தன்னை யிழந்தவராய்த் தானுகர்ந்த செய்தியினில்
என்னை இழந்தேன் மகிழ்ந்து!

யாப்பாசான் கள்வணங்க யானுமொரு காரணமோ?
மூப்பெனக் கில்லை இனி!

சீர்கள் முரசறையச் செய்த கவிதைகளால்
பேறிதனின் உண்டோ பெரிது?

உலக மகாக்கவியின் உன்னதக் கைகள்
திலகம் இடப்பெற்றேன் தெம்பு!

மைய உணர்வவர்! மாற்றமிலா உண்மையவர்!
ஐய! தமிழ்வாரா தா?

வள்ளுவர் என்றென்முன் வந்தார் தமிழன்பன்
வெள்ளமாய்க் கண்டேன் குறள்!

தமிழர்க்கெல் லாமன்பன் தந்த,இச் சொற்கள்
அமுது,எனக் கில்லை அழிவு!
**
அன்புள்ள அகனுக்கு இது :
வணக்கம்.

நாற்றை அகன்கைகள் நற்பதிய மிட்டு,தமிழ்
ஊற்றையும் கூட்டி உதவிசெயப் –போற்றிடுவார்
பேச்செலாம் இவ்வுழவர் பேராக நிற்குமே!
ஆச்சரியம் இல்லை அது!

அகன்!
தமிழன்பன் அவர்கள் நேரமெடுத்து, ஊன்றிப் படித்த பின், உணர்வொன்ற இந்த மடலைச் செய்து அனுப்பியுள்ளதைக் கண்டு என் உள்ளம் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கொள்கிறது என்றால் அது மிகையில்லை. அவர் தளைதட்ட நான் எழுதியிருந்த குறள் பாக்களை, பண்புடன் எடுத்துக் காட்டியிருப்பதைப் படிக்கும்பொழுது எனது தோள்மீது அவர்கை இருப்பது போல் உணர்ந்தேன். எனக்குள் இறும்பூதெய்தினேன்! இவற்றிற்கெல்லாம் நீரே காரணம் என்பதை மறுக்கவும் மறைக்கவும் கூடாது. எவ்வளவு நன்றி சொல்லினும் அது குறைவாதத்தான் இருக்கும் என்பதே உண்மை.
நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி....

பெருமகிழ்ச்சி கொண்டேன்! பெருமிதம்உம் நட்பில்!
வரும்நாட்கள் கூட்டும் வளம்.
இது பொதுவில்:

நற்றமிழே! நானுன்னைக் காத லிப்பேன்!
==நல்லறிஞர் வாழ்த்துகளில் பூரிப் பேனே!
சொற்றிறன்கள் வளர்த்திடவே எழுது கின்றேன்!
==சொல்வதனைப் பிறர்புரிய முயற்சிக் கின்றேன்!
கற்றவர்கள் மட்டுமிலை கல்லார் கூடக்
==கண்டறிந்து மகிழ்வதையும் விரும்பு கின்றேன்!
அற்றமெனக் கிடையாது, தமிழே! உன்னை
==அறியாதேன் எழுதுமிவை மன்னிப் பாயா?

என்றுமட்டும் சொல்லி முடிக்கின்றேன்...
நன்றிகளுடன்

எசேக்கியல் காளியப்பன்..

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (20-Jun-14, 9:25 am)
பார்வை : 566

மேலே