உணர்வுகள்

உணர்வுகளின் சாலைகள்
முழுமையும்
சற்றே குறுகலாகவும்
குண்டும் குழியுமாகவே தொடர
எப்போதாவது
பளிங்குச் சாலையின்
பயணங்கள்
வழுக்கலாகவே முடிகிறது !

ஏனையவற்றில்
பயணம் போகிற வாகனங்களின்
தேர்ந்தெடுத்தல் சிறந்ததாயினும் -
முடிவுகளை நிச்சயமற்றதாக
மாற்றுகிற வாய்ப்புகளில்
முட்களையும் , கற்களையும்
தவிர்த்தலென்பது
இயலாததாகிவிடுகிறது !

நமக்கான பயணங்களின்
பாதைகளில்
எவர், எவரையோ சுமைகளென
தூக்கிச் செல்லுதல்
அலுப்பும் , ஆனந்தமும்
தருகிற
தருணங்களில் -
சாலையோர மரங்கள்
வெட்டப்பட்டுக் கிடக்கின்றன !

நடுகிற கைகளெல்லாம்
கால்களென புழுதிகிளப்பி
ஓடுகிற எண்ணற்ற
உணர்வுச் சாலைகளில்
அனைவரிடமும் சுமைகள்
அதிகமென்கிற போது
யார் மடியில்
யார் இளைப்பாற ?

எழுதியவர் : பாலா (20-Jun-14, 1:42 pm)
Tanglish : unarvukal
பார்வை : 255

மேலே