சூறாவளியாய் சுழன்று விடு

மண்மேல் உயிர் நிலைக்க - கரு
வன்கால் இறை கொடுத்தான்
நிலமிசையில் நீ பிறந்தாய்
திசைக்கொரு பெயர் கொண்டாய்!
வடக்கில் வர வாடை ஆனாய்
தெற்கில் எழ தென்றல் ஆனாய்
கீழ்த் திசையில் கொண்டல் என
மேல் திசையில் கச்சான் தானே!
நாசி வழி நுழைந்து
தூசி வெளி கொணர்ந்து
குருதியினில் நீ கலந்தாய் - என்
இறுதி வரை நீ வருவாய்!
தூசித் துகள்களையும்
தாவர வித்துகளையும்
வீசி எடுத்து வந்தே
மண் செழிக்க செய்கின்றாய்!
தொன்மங்களும் நீ செய்தாய்
புதுமைகளும் நீ படைத்தாய்
ஒரு சேர உனை இழுத்து
மின்சாரம் யாம் எடுத்தோம்!
சுத்தம் தான் இல்லாத
தொழிற்கூட புகை மேகம்
நித்தம் நாம் கொண்டாடும்
குளிர்சாதன பொருள் மோகம்!
பெருகி விட்ட வாகனங்கள்
கக்குகின்ற கரும்புகையும்
உருகும் நெகிழிகள்
வெளியேற்றும் நச்சுகளும்
ஒசோன் படலத்தை
ஓட்டையாக்கி பார்ப்பதென்ன
சுற்றுகின்ற பூமி தன்னை
சூடாக்கி விட்டதென்ன
தொழில் நுட்பம் வளர்ந்து விட
தட்ப வெப்பம் தளர்ந்ததென்ன
ஆழ்ந்து சுவாசம் கொள்ள -என்
சித்தன் சொன்ன வாக்கெல்லாம்
சூழ்ந்த வினை செய்த
பித்தன் எந்தன் பிழையாலே
ஜீவ சக்தியும் விடமாய் ஆனதே - பிற
ஜீவனும் திடமாய் வாழ திணறுதே!
இரக்கம் நீ கொண்டதெல்லாம்
இனியும் எனக்கு வேண்டாமே
கருவளி மோட்சம் பெற்றிடவே
சூறாவளியாய் சுழன்று விடு
எங்கள் சந்ததிகள் வாழ்வு பெற
மீண்டும் புத்துயிர் பெற்று விடு!!!!