நடுநிசி நாடகங்கள் Mano Red
சில மாதங்களுக்கு முன்
மழை பெய்து ஓய்ந்த
ஓர் ஈர இரவில்,
நடுநிசி நாய்கள் துரத்த
தனியாக பயணம்..!!
வார்த்தைகள் தொடங்கி
வாழ்க்கை தரம் வரை
அடையாளம் இல்லாத
அனுபவம் தொலைத்த
தனி ரகமான மனிதர்கள்..!!
அழுக்கேறிய தலையில்
சிக்கல் எடுக்காத
பரட்டை முடியுடன்
சாலையோரத்தில் குடியேறிய
ஓட்டுப் போட்ட குடும்பங்கள்..!!
உலக அரசியல் பற்றி
ஒற்றை வரியில்
விமர்சனம் சொல்லி
தள்ளாடியபடி
சாலை கடந்து சென்ற
"குடி"மகன்..!!
முன் எப்போதும் விட
எண்ணிக்கை அதிகமிருந்தது,
முகமூடி அணிந்த
யாரென்று தெரியாத
மர்மமான முகங்கள்..!!
அனைத்து ரகசியங்களையும்
இருளில் புதைத்து
எதுவும் தெரியாத
திருட்டு முழியுடன்
ஒளி வீசிக் கொண்டிருந்தது
ஒன்றுமறியாத நிலா...!!
நாகரிகம் நகர்ந்தாலும்,
சமத்துவம் மரணமெய்தாலும்,
மனிதம் மறைந்து போனாலும்,
அந்த மக்களுக்கான
வாழ்க்கை நாடகம் மட்டும்
வாழ்வதற்கு மிச்சமிருந்தது...!!