ஒரு செல்ல இம்சைதான் காதல்

என்னை யாரென்று கேள்?
எங்கிருந்து தொடங்கியது உன் நேசம்
என்று விசாரணை செய்! உக்கிரமான என்
கோபங்களில்
இருந்து எதை உனக்கு சொல்ல
முயன்றிருப்பேன்
என்று புரிந்துணர்வு கொள்.
ஒவ்வொரு முறையும் விட்டு விலகுவேன்
என்றுரைத்ததெல்லாம் விலகி இருக்க
இயலாதவளின் சொற்கள் என்று அறி;
யசோதையைப் பிரிந்து சென்ற புத்தனின்
ஞானத்தில் முதலில்
தோன்றியது அப்படியான
பிரிவு அவசியமற்றது என்ற சத்தியம் தான்
என்ற உண்மை உணர்.
அன்பு மொழி மட்டும் பேசிச் செல்லும்
அறச்சிந்தனை மட்டுமல்ல காதல்
அது....புயலின் உக்கிரம், எரிமலையின்
தகிப்பு, பிரளயத்தின் நடுக்கம்,
ஆழிப்பேரலையின் உக்கிரம், மூர்க்கம்
கொண்ட அரக்கன்........
என்றாலும் அது கதகதப்பான தாயின்
மார்புக்குள் ஒடுங்கி உறங்கும்
குழந்தையாய் எப்போதும் தன்
துணையை கதகதப்பான
நேசத்திற்கு ஒடுங்கிக் கிடக்கும்
ஒரு செல்ல இம்சைதான்
என்பதை அறிவாயோ?!

எழுதியவர் : ராதா (25-Jun-14, 10:50 am)
பார்வை : 130

மேலே