திருப்பிரமபுரம் - சம்பந்தர் தேவாரம் பாடல் 7

ஓரடியே பொருள் வேறுபட்டு நான்கு முறை மடித்து வந்து ஒரு பாடலாக அமைவது ஏகபாத அந்தாதி எனப்படும்.

ஏகம் – ஒன்று, பாதம் – அடி.

முதல் திருமுறையில் உள்ள 127 வது திருப்பிரமபுர பதிகம் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டது. இது ஏகபாத அமைப்புடையது.

செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில். பாடல் எண்: 7

குறிப்புரை :

தனது திருவடிப் பிரசாதமில்லாதார்க்கு மல மயக்கத்தின் மேலீட்டைக் கெடாத சிவனுக்கு விசுவாதீதமான இருப்பிடம் எனது சைதன்னியமே.

சத்தாதிகள் அஞ்சும் சேரப்பட்ட உலகத்தைத் தன் வாயினிடமாகவுடைய விஷ்ணுவின் களேபரத்தைத் திருமேனியிலே தரித்துள்ளான். சேர் என்றது செர் எனவும், சீர் என்றது சிர் எனவும் குறுகிநின்றன.

களேபரம் – பிணம், எலும்பு, உடல்

ஆத்தும விகாரமாகிய கர்மத்தினாலே இந்திரியங்களுக்கு விடயமாகிய சுவர்க்கத்தில் இச்சையுடையானுக்கு அந்தச் சுவர்க்கம் மெய்யாக விசேடித்திருக்குமன்றே.

இந்திரிய வன்மையாகிய யுத்தத்துக்கு இளையாமல் அந்த இந்திரியமாகிய பாணங்கள் தனது அறிவுக்குள் தைக்கப்படான்.

ஒருகால் சிரபுரம் என்று சொன்னவிடத்துப் பஞ்சேந்திரியங்களையும் அவியப் பொருது சிவனுடைய திருவடியிலே அடைந்து நிற்பான் என்பதாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jun-14, 5:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 75

மேலே