பொறியியலும் சூழலும்

2013 இல் 80,000 சீட்டு , 2012 ல 50,000 சீட்டு' என்று ஒரு நபர் கூறுகையில் "என்னப்பா இவ்வளோ கம்மியா சீட்டு போட்டிருக்க ?" என்றார் இன்னொருவர். இதற்கு முதல் நபர் "அட நீங்க வேற இது இன்ஜினியரிங் காலேஜ்ல காலியா இருக்கிற சீட்டுங்க! " என்றார்.
"வருடாவருடம் சுமார் 50,000 த்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நம் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பார்க்கலாம், இது காலி இடங்களுக்கான சராசரி நிலவரம். அப்படி என்றால் பொறியியல் படிப்பிற்கான மவுசு குறைந்துள்ளதா ? என்று கேட்டால் , அது சந்தேகம் தான் ! பெற்றோர்கள் தம் பிள்ளைகள் பொறியியல் படிப்பில் தாக்குப் பிடிபர்களா ? அவர்களின் கனவு என்ன ? விருப்பம் தான் என்ன ? என சிந்திப்பவர்கள் வெகு குறைவு. பாதிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில். சமூகம் என்ன சொல்லும் தமது பிள்ளைகளைப் பொறியியல் சேர்க்கவில்லை என்றால் ? என்ற கேள்விக்காக எதிர்கால பதில்களைத் தொலைக்கிறார்கள் பிள்ளைகள் ".

2004 இல் தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகள் 250 க்குள். ஆனால் , இன்று 570 பொறியியல் கல்லூரிகள் , இதில் 520 கல்லூரிகள் அண்ணா பல்கலைகழகத்தோடு இணைக்கப்பெற்றவை. கடந்த பத்து ஆண்டுகளில் கல்லூரிகளின் எண்ணிக்கை 100 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வருடாவருடம் 50,000 த்துக்கும் மேல் காலி இடங்கள் என்று கூறுவது குறைவுதான் ஏனென்றால், கல்லூரிகள் அதிகரித்துவிட்டன மற்றும் சராசரியாக வருடத்திற்கு 8 லட்சம் மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகிறார்கள், குறிப்பிடும் படியாக 90 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். இயற்பியல் , வேதியல் , கணிதம் , கணினி/ உயிரியல் இந்த பிரிவை தேர்ந்தெடுத்த பெரும்பாலனோர் பொறியியல் தான் சேருகிறார்கள்.

2005-2006 ஆம் ஆண்டு பொறியியலுக்கான நுழைவு தேர்வு (TNPCEE-Tamil Nadu Professional Courses Entrance Examination) இறுதியாக நடை பெற்றது,இதில் வேதியல் , இயற்பியல் மற்றும் கணிதம் என மூன்று பாடங்களில் இருந்து ஒரு மதிப்பெண் கேள்விகளாக ஒவ்வொரு பாடமும் 50 மதிப்பெண்கள் கொண்டது. இந்த தேர்வின் முடிவும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வின் மதிப்பெண்களையும் ஒன்று சேர்த்து 'கட் ஆப்' முறையில் கணக்கிடுவார்கள், கிராமப் புற மாணவர்களை மனதில் கொண்டு, அவர்களின் பொருளாதாரமும் , இத்தகைய தேர்வின் வெளிபடுத்துதல் குறைவாக இருக்கிறது என்று கருதி (TNPCEE ) நிறுத்தப்பட்டது. 2006 க்கு பிறகு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் அடிப்படையில் கலந்தாய்வும் , பட்டியலும் உருவாகிறது. கோழி பண்ணையில் ஊசிப் போட்டு வளர்க்கும் ப்ராய்லர் கோழிகள் போல் , பள்ளிகளில் மாணவர்களை முட்டி மோதி பன்னிரெண்டாம் வகுப்பில் 1000 மதிப்பெண்களுக்கும் மேல் எடுக்கச் செய்கிறார்கள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பொறியியல் சேர்கிறார்கள் , சிலர் படித்து முடிக்க சிரமப்படுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மாணவர்களின் விருப்பமும் கனவும் தனிப்பட்ட முறையில் இருக்க வேண்டும் ; தனது நண்பர்கள் பொறியியல் என்று சேருபவர்கள் ஏராளம் , தன சொந்தத்தில் யாராவது பொறியியல் படித்தால் தீர்ந்தனர் பிள்ளைகள். பெற்றோர்கள் வீம்புக்கும் வறட்டு கௌரவதுக்கும் பிள்ளைகள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இவ்வாறு ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் உண்டு , ஆசிரியர்கள் மாணவர்களிடம் பதினோராம் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் போதே ஒரு நல்ல விழிப்புணர்வு அளிக்க வேண்டும். பொறியியல் அல்லாத பிற படிப்புகளின் தரம், வேலைவாய்ப்பு பற்றியும் ஒரு எதிர்கால முன்னோட்டம் தேவைப்படுகிறது. ஆசிரியர்களின் கடமை மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்றுக் கொடுப்பது மட்டுமல்ல, எந்தத் துறைக்கு எந்த மாதிரியான படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் , எவ்வாறான வேலைவைப்புகள் பொறியியல் மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு உண்டு என மாணவர்களிடம் உட்பர்வை காண்பிப்பது நல்லது, பொறியியல் மட்டுமே வழி என நினைக்கும் மாணவர்களுக்கு மற்ற துறையின் மகத்துவத்தை எடுத்து கூற வேண்டும். பள்ளி நிர்வாகங்களுக்கு எப்படியாவது பொதுத் தேர்வுகளில் 100 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் எனும் கட்டாயத்தில் ஆசிரியர்கள் அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள், இதனால் கல்வியின் நிலை வெவ்வேறு துறைகளுக்கான விழிப்புணர்வைப் பெறாமல் இருக்கிறது . மாணவர்களிடம் கல்வி , வேலைக்கான பார்வையை தெளிவுபடுத்துவது ஆசிரியர்களின் தார்மீக கடமை.

பொறியியலுக்கான மாணவர்கள் பெரிதளவில் விருப்பம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதன் முக்கிய பங்கு பெற்றோர்கள் தான், சமூக அழுத்தத்திற்காக பொறியியல் துறையில் தம் பிள்ளைகளைத் திணிக்கின்றனர் என்பது கசப்பான நிகழ்வு. இதனால் கல்லூரி எண்ணிக்கை அதிகரிக்கிறது , எந்தக் கல்லூரியில் வளாக நேர்காணல் அதிகம் கொடுக்கிறதோ , எந்தக் கல்லூரி அதிகம் தேர்ச்சி விகிதம் கொடுக்கிறதோ, அதுவே சிறந்த கல்லூரி என்பது பல பெற்றோர்களின் எண்ணம், இம்மாதிரியான கல்லூரியில் மொட்டுகளாக சேர்ந்து , மலராக பூத்து வெளியே வரும் மாணவர்களின் அனுபவத்தைக் கேட்டால் , ஒரு புறம் வியப்பும் வருதத்மும் மேலிடும்.எல்லாம் எதற்கு ? பொறியியல் பயின்றால் அதிக வருமானம் என்ற அடிப்படை எண்ணம் தானே . "பணம் மட்டும் தான் வாழ்க்கையா" என்ற சிந்தைனைக் கேள்வி எழும்.

கடந்த வருடங்களில் பொறியியல் சார்ந்த பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பெரும்பாலும் தாங்கள் பயின்ற துறையில் வேலை செய்வதில்லை, வளாக நேர்காணலில் தகவல் தொழில்நுட்பம் மட்டுமே அதிகபட்சமாக இருந்துள்ளது, BE (EEE, ECE,E&I, Mechanical, Automobile,chemical, Aeronautical.etc) இந்தத் தொழிற்கல்வியைச் சார்ந்தவர்களுக்கு கல்லூரிகள் ஏற்படுத்தும் வேலைவாய்ப்புகள் வெகு குறைவாக உள்ளன, மேலும் வளாக நேர்காணலில் தொழிற் சார்ந்த வேலைவாய்ப்புகள் கல்லூரிகள் முயற்சி செய்து கொண்டு வருவதில்லை இன்னும் சில தருணங்களில் வளாகமும் இல்லை வளாக நேர்காணலும் இல்லை. தொழிற் சார்ந்த கல்வி பயின்றவர்கள் தங்கள் வேலையை தகவல் தொழில்நுட்பத்தில் தேர்ந்தெடுக்கிறார்கள், ஏனென்றால் கல்லூரிகள் பத்துக்கும் மேற்பட்ட பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தான் வளாக நேர்காணலில் பங்கேற்கிறது.
வேலை கிடைத்தால் போதும் என நினைக்கும் மொட்டுகளைக் குறை கூற முடியாது. BE (CSE), B.Tech(IT) பிரத்யேகமாக படித்தவர்களுக்கும் வேலைக்கு போராடும் நிலைமை, இவர்கள் தொழிற் சார்ந்த பணிக்கு நுழைய முடியாது ஆனால் தொழிற் கல்வி பயின்றவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் நுழைய முடியும், ஆகவே வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது, ஒரு சாரார் மட்டுமே வளர்கிறது , இது பின்னிடைவைத் தான் கட்டுகிறது.கல்வி சமூதாயத்தை மேம்படச் செய்ய வேண்டும் , ஆனால் அனைத்து தரப்பினரும் வியாபாரமாகவும் பணம் பெருக்கும் பொறிகளாகவும் எண்ணுகின்றனர். தொழிற்கல்வி படித்தவர்கள் அதிலே வேலைப் பார்த்தால் நிச்சயமாக சம நிலையில் எல்லாத் துறையும் மேலோங்கும், கல்லூரி நிர்வாகத்தினர் விளம்பரத்துக்கு காட்டும் விருப்பம் தொழிற்கல்வி வேலை வாய்ப்பை உருவாக்குவதில் காட்ட வேண்டும் .பொறியியல் சேரும் மாணாக்கர்கள் தாம் படித்த படிப்பில் வேலைபார்த்தால் மிகவும் நன்றாக இருக்கும் . சமூகம் முன்னேறும் நாடு வளரும் , பொருளாதாரம் மேம்படும் .
சமீபகாலமாக பொறியியல் சார்ந்த படிப்பைப் படித்து விட்டு வங்கி வேலைக்கு முயற்சிப்போர்கள் அதிகம், அதே வேளையில் வங்கி வேலையில் இருக்கும் BE க்களும் அதிகம்.இவர்களது 4 ஆண்டு உழைப்பின் விலை திருமண பத்திரிககையில் இடும் மாப்பிள்ளை டிகிரி, இன்னும் சில மக்களுக்கு மாப்பிளை டிகிரி தான்.

மக்களுக்கு தொலை நோக்குப் பார்வை வேண்டும் , கல்வியை வணிகமாக பார்க்காமல் சமூகத்தின் விதையாக விதைக்க வேண்டும். அவன் சட்டை எனக்கு பத்தாது என நினைக்கும் மூளை , ஏன் அவன் எடுக்கும் படிப்பை நானும் தேர்ந்தெடுப்பேன் என்று சிந்திக்க வேண்டும் , எல்லாம் எதையோ பார்த்து சூடுபோட்டு கொள்ளும் ஒரு கதை தான் இது .சமூகத்திற்காக வேடம் போடுவதை முன்னிருத்தி தர்க்க சிந்தனைகளைத் தவற விடுகின்றனர் . பொறியியல் படிக்க நல்ல மதிப்பெண்ணும் , மனமும் இருந்தால் மட்டும் போதாது பணம் வேண்டும் என்று நடுதரவாசிகளுக்கும் , ஏழைகளுக்கும் ஒவ்வொரு வருடமும் பொறியியல் கல்லூரிகள் சொல்லாமல் சொல்கின்றன. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் விருப்பத்தை மதிக்க வேண்டும்.
கல்வி நிலையின் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் இந்த வகையில் விழிப்புணர்வு இல்லை என்றாலும் , கல்விச் சூழல் குறித்து கல்வியாளர்களைக் கேட்டு ஆலோசனை பெறலாமே ! வெறும் பணத்திற்காகவும் ,படோடாப வாழ்க்கைக்கும் தான் கல்வி என்ற மாயை அகல வேண்டும் , இதற்கு உரிய வழிகளை அறிஞர் பெருமக்களும் , கல்வியாளர்களும் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று நம்பிக்கை கொள்வோம் !!!

" தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்."

எழுதியவர் : Pavithran (27-Jun-14, 8:33 am)
சேர்த்தது : pavithran
பார்வை : 424

சிறந்த கட்டுரைகள்

மேலே