அந்த இரவு
தென்னங்கீற்றுகள் - தன்
தேகம் தேயத் தேய
தெம்மாங்கு பாடின...
@
பாடலுக்கு ஆடுவதாய்
காற்று கைகோர்த்து
வளைந்து வளைந்து
வலம் வந்தது ....
@
கார் வண்ண முகில்
பால் வண்ண நிலவுக்கு
பாய்விரித்து படுத்திருந்தது ...
@
நட்சத்திரங்களும் - என்
நாயகியைப் போல்
பாதி தூங்கி
மீதி ஏங்கி
தனித்திருந்தன ...
@
மொட்டை மாடியில்
அந்த காதலர்கள்
என்ன நெருக்கம்
நத்தையும் கூட்டையும் போல...
@
அந்த தாய்
படுத்திருந்த நிலவைக்காட்டி
படுக்கவிருக்கும் குழந்தைக்கு
பாலூட்டினாள்...
@
பண்ணைத்தெருவில்
திண்ணைக்கு தான்
எத்தனை மகிழ்ச்சி
விளையாடும் சிறுவர்களும்
விழவிருக்கும் பெரியவரும்
"ஒரே கண்ணாமூச்சி ரே ரே"
@
பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சையோ
பன்னிரெண்டு மணி பரீட்சையோ-இன்னும்
பதட்டமாய் சில பருவநிலாக்கள் ...
@
என்னடா இது ...
இந்த விட்டில் பூச்சிக்கு தான்
எவ்வளவு காதல்
அந்த விளக்கின் மேல்
சுட்டாலும் சுற்றி சுற்றி வருகிறதே ...
@
எந்த பெண்
இந்த சாலையை
கடந்து சென்றாளோ
இன்னும் கண் சிமிட்டியபடியே
சில மின்விளக்குகள் .....
@
எந்த கோவலனுக்கோ
கையசைத்து காத்திருந்தது
கட்சிக் கொடி...
@
இரவில் சூரியனா ?
சினிமா படப்பிடிப்பா
என்றோ ...
பலரின் தூக்கம் வாங்க
சிலரின் தூக்கம் ஏலம் விடப்பட்டது ...
@
சாலையோரத்தில்
மங்கிய வெளிச்சத்தில்
மயங்கிய நிலா
மார்பில்.....
ஓ....வியாபாரமா
(பார்வைக்கு போர்வை தந்ததது புல்வெளிதான் )
@
முகிலும் துயிலை தழுவியாயிற்று,
நடுநிசியில் நானும் நிலவும்
என்றும் நீ என் காதலி
இன்று நான் உன் காதலன் .........
@@@