அமாசியா கண்டம்-----அஹமது அலி----
அமாசியா கண்டம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முகில்கள் நகர்வதைக் கண்டு
வானம் நகர்வதாய்
மாயை கொண்டதுண்டு.....
கண்டங்கள் நகருமா
வியப்பின் விளிம்பில் நின்று
வீழ்கிறேனே இன்று.....!
நகரும் கண்டங்களால்
பூமி ஆகுமோ துண்டங்கள்..!
திசைக்கொரு கண்டம்
நகர்ந்து சென்றால்
திசையே அறியாமல்
பூமி சுற்றுமோ..?
பூமியின் மேலடுக்கு
நீரின் மேல் சருகைப் போல்
நகர்ந்து ஓடுமா-பின்
வந்து கூடுமா?
சனிப்பெயர்ச்சியில்
கண்டம் என்கிறது சோதிடம்
கண்டப் பெயர்ச்சியில்
என்னென்ன கண்டம்
காத்திருக்கிறதோ.....
சோதிடர் தப்புவாரா..?
கண்டங்கள் நகர்வதால்
கடல்கள் நகரும்
காலங்கள் நகரும்
உலகம் வெவ்வேறு வகையில்
இயற்கையை நுகரும்...!
ஐந்து கண்டங்கள்
ஐக்கியமாகி
அமாசியா கண்டம்
தோன்றக் கூடுமோ?
அந்த உலகம்
எப்படி இருக்குமோ...!?
-----------------------------------------------------------------
குறிப்பு: 20 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் கண்டங்கள் எவ்விதமாக அமைந்து இருக்கும்? மேலே உள்ள படம் அதைத்தான் காட்டுகிறது.உலகின் ஐந்து பெரிய கண்டங்கள் இப்படத்தில் ஒன்றோடு ஒன்று ஒட்டியபடி சூப்பர் கண்டமாகத் திகழ்கின்றன. என்றோ ஏற்படப் போகின்ற இந்த சூப்பர் கண்டத்துக்கு சூட்டப்பட்ட பெயர் தான் அமாசியா (Amasia).
இந்தியத் துணைக் கண்டம் வடகிழக்கு திசை நோக்கி ஓராண்டுக்கு ஐந்து செண்டி மீட்டர் நகர்ந்து கொண்டிருக்கிறது.வட அமெரிக்கக் கண்டம் மேற்கு நோக்கியும் ஆப்பிரிக்கா கிழக்கு நோக்கியும் இப்போது நகர்ந்து கொண்டிருக்கிறது!