தளத்தின் போட்டி படைப்புகள்
மீண்டும் வானம்பாடி-யுவா
வானில் சுதந்திரமாய் சுற்றித் திரியும்
வண்ண பாவை வானம்பாடி நான்!
மேகமாய் கலைந்து மழைச்சாரல் தரும்
நீலக்குயில் கீதம் வானம்பாடி நான்!
புயலோடு போட்டிப் போட்டு கானம்
படைக்கும் செந்தாமரை வானம்பாடி நான்!
எட்டாத் தூரத்தையும் எட்டிப் பிடித்து
காற்றில் உலகைத் தழுவிச் செல்லும்
சிருங்கார சங்கீதம் வானம்பாடி நான்!
எல்லை இல்லா தமிழைப் போல்
எங்கெங்கும் இனிமைத் தரும் நல்
சொர்ண பண் வானம்பாடி நான்!
அலைகடலை கடந்து ஆகாயமாய் திரிய
வான்வெளியின் வட்டத் திட்டில் வண்டுபோல்
சுழலும் கானக்குயில் வானம்பாடி நான்!
மனச் சஞ்சலமில்லா மகிழ்வில் திளைத்து
மணிமகுடம் சூட்டி மங்கையாய் வாழும்
மாசில்லா கனிக்குயில் கவிதாயினி நான்!
மீண்டும் வானம்பாடி கூட்டம் நான்!
அன்புடன்
யுவா
---
மீண்டும் வானம்பாடி-மீமணி
பாடல் புனையு மவ் வானம்பாடி
வேடர் பயத்தினில் பாதை ஓடி
ஆடல் மயிலிடம் புகலிடம் நாடிப்
பாடல் மறந்தது நர்த்தனம் ஆடி !
நந்தி மணக்கும் நறுமலர்த் தோட்டம்
அந்தி விழிக்கும் மல்லிகைக் கூட்டம்
சிந்திச் சிரிக்கும் கருமுகி லோட்டம்
இந்தக் களிப்பில் இருந்திட நாட்டம் !
மெய்யை மாற்றுது நிமிடச் சலனம்
பொய்யைப் போக்கப் பிறந்தது ஞாலம்
உய்யும் உலகம், இருந்தால் "தானாய்"
பைய உணர்ந்து பார்த்தது மேலாய்
திறந்தது வானம் திசைகள் காட்டி
நிரந்தர பலத்தை சிறகில் பூட்டி
மறந்தது தன்னை மனதில் மீட்டிப்
பறந்தது மீண்டு மவ் வானம்பாடி.
மணிமீ மீண்டும்
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர.... -வேளாங்கண்ணி
தனியார் பள்ளிகள் குறைவாக இருந்த காலத்திலே அரசுப் பள்ளிகளில் மட்டும் பயின்று பல சாதனை புரிந்த அறிஞர்களை, விஞ்ஞானிகளை, மேதைகளை நாம் அறிவோம். இன்று தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் பெருகிவிட்ட இந்நாட்களில் நாம் எத்தனை சாதனையாளர்களை உருவாக்குவோம் என்பதை வரும்காலம் தான் நமக்கு எடுத்துரைக்கும்.
எந்த தொழிலிலும், 200 சதவீதம், 300 சதவீதம் லாபம் கிடையாது. பங்குச்சந்தையில் கூட குறியீடு அதிகரிக்கும் போதும் இவ்வளவு அதிக லாபம் கிடைக்காது. ஆனால் இந்திய அளவிலும், தமிழகத்திலும் பள்ளிக்கூடம் நடத்தினால், கல்வி நிறுவனங்கள் நடத்தினால் பலமடங்கு உத்திரவாத லாபம் பெறமுடியும். இந்த நிலையை என்று நாம் மாற்றுவோம்? முடியுமா? புதிய சட்டங்கள் போட்டு தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த முடியுமா? அரசுப் பள்ளிகள் இப்போது இருக்கும் பரிதாப நிலையிலிருந்து பீனிக்ஸ் பறவையாய் மீண்டுமொரு நல்ல நிலை பெற்று மாணவர் சேர்க்கையிலும், தரத்திலும் முன்னேற்றம் காண முடியுமா?
அரசின் சில நல்ல திட்டங்கள் நிறைவேற ஒவ்வொரு தனி மனிதனின் அர்ப்பணிப்பு உணர்வும், ஈடுபாடும், அக்கறையும் இன்றியமையாதது.
மாணவர் சேர்க்கை குறைய காரணம்:
மாணவர் சேர்க்கை அரசுப்பள்ளிகளில் குறையக் காரணம் என்ன என ஆரோய்ந்தோமானால் இவ்வாறாக வரிசைப்படுத்தலாம். தனியார் பள்ளிகளின் எழுச்சி, ஆங்கிலவழிக் கல்வியின் மேல் மக்கள் கொண்டுள்ள மோகம்,
தனியார் பள்ளிகளை கணக்கின்றி வளர்த்துவிட்ட அரசாங்கம்,
தம் பிள்ளைகளை எவ்வளவு பணம் கொடுத்தும் பெரிய பெரிய பள்ளிகளில் சேர்த்துவிடும் பெற்றோர்களின் வறட்டு கௌரவம், சிறிது சிறிதாக குறைந்து போன அரசு பள்ளிகளின் தரம்.
அரசுப்பள்ளிகளின் தரம் குறைய காரணம்:
பணி நேர்மை, பணி அர்ப்பணிப்பு குறைந்து போனது:
அரசுப்பள்ளி ஆசிரியர்களில் பலரும் வட்டிக்கடை உட்பட பல்வேறு உபதொழில்களைச் செய்பவர்களாக இருப்பதையும், இவற்றில் ஈடுபாடு காட்டும் அளவிற்கு தம் ஆசிரியப்பணியில் இவர்கள் ஈடுபாடு காட்டுவதில்லை என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.
திறமையிருந்தும் வெளிப்படுத்த தயங்கும் ஆசிரியர்கள்
சீரான கண்காணிப்பு இல்லாத அமைப்பு முறை என சிலவற்றை வரிசைப்படுத்தலாம்.
தரமும் மாணவர் சேர்க்கையும் உயர செய்ய வேண்டியவை:
முன்பருவக் கல்வியையும் உடன் கொண்டு வருதல், காலிப்பணியிடங்கள் இன்மை என்ற நிலை உருவாக்குவது,பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களின் பிள்ளைகளும் பயிலும் பள்ளிகளாக அரசுப்பள்ளிகள் உருவெடுக்க அனைத்து அரசு பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மாணவர்களின் உடை, சுகாதாரம், சுற்றுப்புறச் சூழல் போன்றவை மேம்படுத்தப்பட வேண்டும்.
அயல் நாடுகளில் உள்ளதைப்போல குறிப்பிட்ட பகுதியில் உள்ளோர் குறிப்பிட்ட பகுதியில் உள்ள பள்ளியில் தான் பயில வேண்டும் என்கின்ற அருகாமைப்பள்ளி திட்டம் சட்டமாக்கப்பட்டால் அரசுப்பள்ளிகளின் மீது கவனமும் அக்கறையும் கூடி அரசு பள்ளிகள் மேம்படும்.
தனியார் பள்ளிகளை நகலெடுக்க கூடாது:
புரிதல், ஆய்தல், பயன்படுத்துதல், புதிய சூழலில் செயல்படுதல், புதிய முயற்சி, புதிய கண்டுபிடிப்பு, கற்பனைத்திறன் மேம்படுத்துதல் போன்ற பன்முக ஆளுமைத்திறனுக்கு வாய்ப்பற்று சமூக நிர்ணயமான, எழுத்து வழித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் என்பதை மட்டுமே நோக்காக கொண்டு எப்போதும் தேர்வு, திருத்துதல், சில பாடவேளைகளில் எடுக்கப்பட்ட பாடத்திற்கு, பல பாடவேளை மனனத்திற்கு மட்டுமே பயிற்சி, என்பன பள்ளிகளில் பெரிதும் நடைபெறுவதால் அந்த இயந்திரத்தனத்தை அரசு பள்ளிகள் கண்டிப்பாக நகலெடுக்க கூடாது.
முதலில் தங்களது குழந்தைகளை ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், அரசியல்வாதிகளும் அரசுப்பள்ளிகளில் சேர்க்க முன்வருவார்களா என்பதைப் பார்க்க வேண்டும்.
தனியார் பள்ளிகளைப் போல அரசுப்பள்ளிகள் விளம்பரப்படுத்த முடியாது.
நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டும் வைத்துக்கொண்டு படிக்காத மாணவர்களை பள்ளியை விட்டே அனுப்ப முடியாது.
நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களை எல்லாம் பல சலுகைகள் அளிப்பதாக கூறி ஊர் ஊராகச் சென்று அள்ளி வர முடியாது.
தனியார் பள்ளிகளைப்போல ஆசிரியர்களையும், மாணவர்களையும் நினைத்த நேரமெல்லாம் பள்ளிக்கு வரவழைத்து, ஆசைப்பட்ட போதெல்லாம் பரிட்சை வைத்து அனைவரையும் கஷ்டப்படுத்த முடியாது.
இத்தனை முடியாதுகளை வைத்துக்கொண்டு பள்ளியின் தரத்தையும் மாணவர் சேர்க்கையையும் உயர்த்தமுடியும் என்று அரிதியிட்டும் சொல்லமுடியாது.
சிறிது சிறிதாக வேண்டுமானால் முயற்சிக்கலாம்.
தனியார் பள்ளிகள் மக்கள் மனதில் கொண்டுள்ள மாயையை சிறிது சிறிதாக மாற்ற முயற்சிக்க வேண்டும். இது ஒரே நாளில் நடந்துவிடாது.
இதற்கு முக்கியமாக அயராது உழைக்கும் பல நல்ல உள்ளங்கள் தேவை.
அவர்கள் மூலமாக முடிந்தவரையில் முயற்சி எடுத்தால் கண்டிப்பாக ஒரு நாள் நாம் விரும்பும் மாற்றம் நமக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
எனினும் இத்தனை தடைகளையும் தாண்டி, சூழல்கள் அற்ற சூழல்களிலும் சூழல்களை உருவாக்கி கல்வியின் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களால் தான் முடியும். இதற்கு அரசின் ஊக்குவிப்பும், சமூக ஒத்துழைப்பும் வெகு முக்கியம்.
"சரியோ தவறோ சூழல் மாற்றத்திற்குட்பட்டு தம்மை தக்கவைத்துக் கொள்ளாதது அழிந்து போகிறது", என்பது டார்வினின் கூற்று.
அரசுப்பள்ளிகள் என்றால், மோசமாகத்தான் இருக்கும், ஆசிரியர்கள் ஒழுங்காக சொல்லிக்கொடுக்க மாட்டார்கள், போதிய வசதிகள் இருக்காது என்பது போன்ற நம்பிக்கைகள் மக்களின் மனதில் இருந்து முற்றிலும் போக்கப்பட வேண்டும்.
முயன்றால் முடியாது ஒன்றுமில்லை..
முயற்சிப்போம் மாற்றிக் காட்டுவோம்...
--------------------------------------------------------------------------------------------
அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர- கவிஜி
"அரசுப் பள்ளியில் படித்தவர்களெல்லாம் கை தூக்குங்கள்"- என்று கல்லூரியில் முதலாம் வருடம் முதல் நாள் கேட்ட வார்த்தைகள், நிறைய பேரிடம் முகத்தை மாற்றி யோசிக்க வைத்தது. எனக்கு எவ்வித தயக்கமோ, தடுமாற்றமோ இல்லை. எவ்வித புரட்சிகரமான சிந்தனையையும், எனக்கு இருப்பதற்கான சூழலை அரசுப் பள்ளி விதைக்கவில்லையே தவிர, எந்த சூழலிலும் படித்த பள்ளி, அரசுப் பள்ளி என்பதற்காக அதை நிராகரிக்கும் மனப்பாங்கையும் விதைக்கவில்லை. எங்கும் எப்போதும் நான் அரசுப் பள்ளியில் படித்ததை பெருமையாகவே சொல்லிக் கொண்டிருக்கிறேன். கிணற்றில் தத்தளிக்கும் நிலையில், வந்து விழும் விழுதை கெட்டியாக பிடித்து முன்னேறி விடும் என்றே இன்றும் நம்புகிறேன். நிறைய அப்துல் கலாம்களை, நிறைய அண்ணா துரைகளை, இன்னும் நிறைய அதிகாரிகளை, அரசு அலுவலர்களை, அரசுப் பள்ளிகளே தந்திருக்கின்றன. இருந்த போதிலும், அரசுப் பள்ளிகளின் தரம் என்று யோசிக்கையில், பார்க்கையில், சற்று, பின்னோக்கி நின்று விடத்தான் தீர்மானிக்கிறது யோசனைக் கால்கள்.
எல்லாம் இருந்தும் ஏதோ இல்லாமல் போவதைப் போல, கரும்பலகை முன்னால் நிற்கும் ஆசிரியர்க்கும், கடைசி இருக்கையில், குறும்பு சிரிப்பில் பல் காட்டும், சேரி என்றழைக்கப்படும் இடத்திலிருந்து வரும் முதல் தலை முறை மாணவனுக்கும் இடையே, ரயில் பாதையாய் ஒரு இடைவெளி நீண்டு கிடப்பதாகவே, ஒரு தோற்றம் வகுப்பறையில் இல்லாத ஜன்னலைத் தேடுகிறது. தரம் என்ற சொல், கட்டிடங்களையும், கரும்பலகையையும் மட்டும் சார்ந்ததில்லை. நாளைய சரித்திரத்தில் சாதிக்க போகின்றவர்களின் ஆழ் மன விதைப்பிலும், சார்ந்ததே.....
புழுவை லாவகமாக பிடுங்கி போகும் மீன்களின் சாயலில் இன்றைய மாணவ சமூகம் இருக்கையில், கண்டிப்பாக அறிவு சார்ந்த தூண்டில் கொண்ட ஆசிரியர்களே தரமான வெளிப்பாடு. கண் காட்டும் ஆசிரியர்களும், தொடுதல், படுதல் ஆசிரியைகளும், ஆங்காங்கே இருப்பதும், பாலியல் கல்வியை மாற்றி யோசித்து கற்றுக் கொடுக்க முயற்சிப்பதும் தரம் தாழச் செய்யும் தரித்திர போக்கே....
ஊர் ரெண்டு பட்டாலே கூத்தாடிக்கு கொண்டாட்டம் தான். இங்கே நான்காய், பத்தாய், நூறாய் பிரிந்து கிடக்கும் ஊரில், கூத்தாடிகளின் கொண்டாட்டம், இண்டு இடுக்குகளில், சந்து பொந்துகளில், கையூட்டின் விஸ்வரூபமாக எல்லாரும் சேர்ந்து எல்லாமாய் செய்து உருவாக்கிய, சில நேரங்களில் பலி கூடமாகவும் உருமாறும் சக்தி வாய்ந்த, முகமூடிகளற்ற கொள்ளைக் கூட்டங்களின் பரிணாம மாற்றாய், தனியார் பள்ளிகலாய் வளர்ந்து நிற்கின்றன. சீட்டு நிறுவனம் நடத்தினார்கள். வேட்டு நிறுவனம் நடத்தினார்கள். இன்று பள்ளி நிறுவனம் நடத்துகிறார்கள். பின்னால் பிரைவேட் லிமிட்டட் மட்டுமே சேர்க்க வேண்டும். அதையும் தரம் என்ற பொருள் பட காலம் கூட்டிக் கொள்ளும்.
கழிப்பறை சரியில்லை, சரியாய் இருந்தால் தண்ணீர் இல்லை, இரண்டும் இருந்தால் சுத்தம் செய்யும் ஆளில்லை. சில பள்ளிகளில் கழிப்பறையே இல்லை, சில பள்ளிகளில் கழிப்பறையே வகுப்பறை. மைதானம் இல்லை, மரம் இல்லை, இருந்தாலும் பராமரிப்பு இல்லை, பரிதவித்து நிற்கும் சில வகுப்புகளில் ஓடுகள் இல்லை. என்ன செய்யும் மத்தியதர வர்க்கத்தின் மலையளவு ஆசை. தரமில்லை என்று குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடி, ஏதாவது ஒரு சந்து பொந்துக்குள், திட்டு வாங்கி, கைகட்டி, கூனி குறுகி அடைக்கலம் புகுந்து கொள்கிறது, இல்லையில் இருத்தல் முக்கியம் என்ற தத்துவத்தோடு....ஏழை மக்களுக்கு மட்டும் தான் அரசுப் பள்ளிகள் என்றொரு பழைய சித்தாந்தம் மட்டும் புதியதாகவே இன்றும் செருப்பில்லாமல் பள்ளி செல்கிறது.
தனியார் பள்ளிகளில் படித்து நூறு மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், அரசுப் பள்ளியில் படித்த எண்பது மதிப்பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும். ஆங்கிலத்தை அவசியத்துக்கு பேச கற்றுக் கொடுப்பதில் அரசுப் பள்ளிகள், முயற்சிகள் எடுக்க வேண்டும்...அரசும் இலவசங்களைத் தொலைக்காட்சி பெட்டியாக கொடுப்பதற்கு பதிலாக படிப்பாக தர வேண்டும். பண்பட்ட நூல்களை(பாடப் புத்தகங்கள் தவிர) படிக்க தர வேண்டும்... படித்தவற்றை விவாதிக்க கற்றுத் தர வேண்டும். கணினி அறிவை எளிய அறிவியலாய் விளக்க வேண்டும். சனி ஞாயிறு கண்டிப்பாக விடுமுறை தர வேண்டும். முக்கியமாக 12ம் வகுப்பை 11ம் வகுப்பிலேயே படிக்கும் முட்டாள்தனத்தை கை விட வேண்டும். கூவி கூவி கோழிக் குஞ்சு விற்பது போல பள்ளிகளை விற்கும் தனியார் பள்ளிகளின் கூட்டம், பன்றிக் கூட்டங்களாய் பெருகுவதை, எதையும் வாங்காமல் அரசு குறைக்க வேண்டும்....
அரசுப் பள்ளிகளை, நவநாகரீக கட்டிடங்களாய் மாற்ற வேண்டும். சீருடை வண்ணத்தை மாற்றலாம். எத்தனை தலைமுறைக்கு வெள்ளை சட்டையையே அணிவது...? வண்ண மாற்றம், என்ன மாற்றத்துக்கும் வழி கோரும். சரியான தரமான உடற்பயிற்சி கூடங்கள் இருப்பது உள்ளங்களை தூய்மையாக்கும் உந்து சக்தியை வளர்க்கும். சங்க இலக்கியத்தோடு நின்று விடாமல உலக இலக்கியத்தையும் காட்ட வேண்டும். செயல் முறைக் கல்வி மிகவும் அவசியம். வெறுமனே, படித்து, விழுங்கி, வாந்தியெடுக்கும் தனியார் பள்ளிகளின் தலையாய உத்திகளில் ஒன்றை தலை முழுக வேண்டும். மாணவி, மாணவனின் எந்தக் கேள்வியையும் தட்டாத ஆசிரியர் வேண்டும். பதில் தெரியாத ஆசிரியரை பக்குவமாய் எடுத்து சொல்லி வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
பெற்றோர்களும், தனியார் மய மாயங்களில் சிக்கிய காற்றுப் புழுதிகளாய் தங்களை நினைத்து, சந்தோஷம் காணும் அடிமைத் தன சுய வடிகாலில் இருந்து தங்களை வெளிக் கொணர வேண்டும். படிப்பது, அமெரிக்கா செல்ல அல்ல, பக்குவப்பட என்பதை உணர வேண்டும். தம் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்..."கொசுக்கடி..... ஆதலால் வீட்டைக் கொளுத்துகிறேன்" என்பது போன்றது, "தரம் இல்லை" என்று தனியார் பள்ளிகளுக்கு செல்வது.... இது நமது நாடு. நமக்கான நாடு. அரசுப் பள்ளியில் படிப்பதே கெளரவம். தரம் இல்லை என்றால் தட்டிக் கேளுங்கள். அதற்கு ஒற்றுமை என்ற படிப்பினை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும். தரமான பார்களை அரசால் உருவாக்க முடியும் என்றால் தரமான பள்ளிகளையும் உருவாக்க முடியும். முடியாது என்று நாமாகவே நமக்குள்ளாகவே தீர்மானித்து இக்கரைக்கு அக்கரை என்று தனியார் பள்ளிகளின் காலில் விழுவது, இன்னொரு அடிமை சமூகத்தை விதைப்பதற்கான இயந்திர வேளாண்மையாகும் ...
சரி, அதற்காக தனியார் பள்ளிகளே வேண்டாமா என்றொரு கேள்வி வரத்தான் செய்கிறது.... அட, ஆழ்ந்து யோசிக்கையில் சாராயக் கடைகளை அரசே எடுத்து ஒரு நிறுவனமாக நடத்த முடியுமானால், பள்ளிகளையும் முழுக்க முழுக்க அரசே நடத்த முடியும். மேல்தட்டு, கீழ்தட்டு, அந்தஸ்து வலியவன், வறியவன், என நாளைய சமூகம் இன்னும் மோசமாக பிரிந்து கிடக்காமல் இருக்க வேண்டும் எனில், எல்லாருக்கும் ஒரே கல்வி, தரமான கல்வி, இலவசக் கல்வி என்று அரசுப் பள்ளிகளின் கண்களில் திறக்கும் அறிவின் சுடரே அவற்றை முன்னெடுத்துச் செல்லும். அதன் பிறகு கூறுவோம்...."தகுதி உள்ளவைகள் தப்பிப் பிழைக்கும் என்று"
பள்ளிக் கூடம் அறிவைத் தர வேண்டுமே தவிர ஆணவத்தை அல்ல. அரசுப் பள்ளியில் படிப்பது தாழ்வு மனப்பான்மையை விதைக்கிறது என்ற கூற்றை உடைக்கும் அதே சமயம், தனியார் பள்ளியில் படிப்பதால் பல போது எழும் எல்லாம் தெரிந்த மேதாவித் தனம் போல் இருக்கும் பாவனையையும் உடைக்க வேண்டும் என்பதே சித்தாந்தம்...தத்துவங்கள் பசி போக்காத பொழுதுகளில், ஒரு காமராஜர் ஏதாவது ஒரு அரசுப் பள்ளியில் இருந்தே வெளி வருவார், தரமான அரசியலோடு.....
தரம் உயர உயர மாணவர் சேர்க்கை உயரும்... பின் எந்த விளம்பரங்களும் செல்லுபடியாகாது....
--------------------------------------------------------------------------------------------------------------------
அரசுப் பள்ளிகளில் தரம் மற்றும் சேர்க்கை அதிகரிக்க... mu.jeevaraj
முன்னுரை :-
“ ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது ”.
என்பதற்கிணங்க அரசுப் பள்ளிகளிலுள்ள பாடத்திட்டமானது கரையான்களால் அரிக்கப்பட்ட நிலையிலுள்ள ஏட்டுச் சுரைக்காயாகத்தான் உள்ளது.
ஆம். இன்றைய அரசுப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் கல்விமுறையானது கழைகள் களையாத நிலையிலுள்ள ஒரு பாரம்பரிய பொருளாக மட்டுமே உள்ளது. ஆகையால், அரசுப் பள்ளிகளில் நீக்க வேண்டிய கழைகளும் புகுத்த வேண்டிய புதுமைகளும் பல உள்ளன. அவைகளை இக்கட்டுரையில் காண்போம்.
களைய வேண்டிய கழைகள் :-
“ வாசத்தை மறுக்கின்ற மலரால் பலனில்லை
மழையை மறுக்கின்ற மேகத்தால் பலனில்லை
பாதையை மறுக்கின்ற சாலையால் பலனில்லை
அறிவை மறுக்கின்ற பாடத்தால் பலனில்லை ”
ஆம். இன்றைய அரசுப் பள்ளிகளில் அறிவை வளர்க்க இயலாத பாடத் திட்டங்கள் தான் நடைமுறையில் உள்ளது.
இன்றைய சூழலில் அரசுப்பள்ளி மாணவர்கள் திருக்குறள், நாலடியார்,பாரதியார் பாடல்கள் எல்லாம், ஒரு விதமான மரபுக் கவிதைகள் என்பது கூட அறியாமல், அவைகளை வெறும் மனப்பாடப்பகுதியாக மட்டுமே படிக்க கூடிய நிலை நீடிக்கிறது.
ஆங்கிலம் என்றொரு மொழி, மொழியாக அன்றி கடினமாக முயற்சி செய்து மதிப்பெண் பெறக் கூடிய பாடமாக மட்டுமே நடத்தப்படுகிறது. மேலும், தகுந்த ஆங்கில மொழித்திறன் அற்றவர்களாலேயே ஆங்கிலப்பாடம் கற்பிக்கவும் படுகிறது.
குடிமக்களாட்சி என்றால் என்ன? என்று, கேள்வி வடிவில் மட்டுமே இருக்கிறதே தவிர, உண்மையில் மாணவர்கள் நாட்டின் முதல்குடிமகன் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகிறார் என்று கூட தெரியாத நிலையில் தான் இருக்கின்றனர்.
திறமையை வெளிக்காட்டும் வாய்ப்புகள், போட்டிகள், பரிசுகள், பாராட்டுகள் போன்ற புத்துணர்ச்சி முகாம்கள் எல்லாம் மூடப்பட்ட சூழலில் தான் அரசுப்பள்ளிகள் இயங்குகின்றன.
மொத்தத்தில் அரசுப் பள்ளிகள் மாணவர்களுக்கு “ வேரில்லாத மரத்திற்க்கு தண்ணீர் ஊற்ற கற்றுத்தருகின்றன ” என்றே கூறிடலாம்.
புகுத்த வேண்டிய புதுமைகள் :-
“தினம் தோன்றும் புதுமைகள் தான்
வாழ்க்கையை அலங்கரிக்கும்
விழிகளைக் கவர்ந்திழுக்கும்”
அரசுப் பள்ளிகளில் என்னதான் குறைகள் இருந்தாலும் சாதித்த மனிதர்களில் பலர் மலர்ந்தது இங்கு தான்...! இருப்பினும், பூக்கத் தவறிய மலர்களும் இங்குதான் அதிகம்...! ஆகவே, அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் திறமையை திறம்பட வளர்ப்பதற்க்குப் பல புதுமைகள் அவசியம்.
“ முல்லைக்குத் தேர் கொடுத்தார் பாரி ” என்பதோடு மட்டும் விட்டுவிடாமல் அந்த முல்லைக் கொடி நீண்டு வளர்வதற்க்கு உதவும் தொழில்நுட்பத்தையும் பாடமாக்க வேண்டும்.
மதிப்பெண்களை நோக்கி ஓடவிடும் கல்விமுறையை மதிப்புஅற்று போக வைக்க வேண்டும்.
பள்ளிகளில் திறமையைக் கண்டறியும் விதமாகவும், திறமையை நோக்கிப் பயணிக்கும் விதமாகவும் கல்விமுறையை மாற்ற வேண்டும்.
பள்ளி நேரத்தில் பாதியை அடிப்படைக் கல்வி கற்பதற்கும் மீதியைத் திறமையை வளர்பதற்குமாய் வகுக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டம் எப்பொழுது உருவாக்கப்பட்டது? எப்படி உருவாக்கப்பட்டது? என்பதை விட அதன் இன்றைய நிலைமை எவ்வாறு உள்ளது என மாணவர்களிடையே விவாதிக்க வைக்க வேண்டும்.
தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளை எழுத்து வடிவில் மட்டும் வைத்திடாமல் செயல்முறை பாடத்திட்ட வடிவிற்கு மாற்ற வேண்டும்.
இவைகளையெல்லாம் திறம்பட செயலாக்கம் செய்வதற்கு ஆசிரியர்களுக்கு தகுந்த பயிற்சியளிக்க வேண்டும்.
இவைகளையெல்லாம் ஏற்படுத்திக் கொடுத்தால் நிச்சயம் அரசுப் பள்ளி மாணவர்களின் தரம் உயரும்.
சேர்க்கையை அதிகரிக்க :-
“ தேனிக்கள் தேடிவர
மணம்வீசும் மலர்களுக்கு விளம்பரம் தேவையில்லை ”
ஆம். அது போலத்தான், தரம் நிறைந்த கல்வியைக் கொடுத்தாலே, சேர்க்கை விகிதம் அதிகரித்திட பெரிய பாடொன்று தேவையில்லை. இருப்பினும் அரசின் சில துரித நடவடிக்கைகளும் தேவையே...
முதலில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்திய பிறகு “ அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கே அரசுக்கல்லூரிகளில் சேர்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டாலே போதும். அரசுப் பள்ளி சேர்க்கைக்கு தவம்கிடக்க துவங்கிடுவர்.
மேலும், தமிழில் பயின்று வெளிவரும் அனைத்து மாணவர்களும் தமிழ்நாட்டிலேயே பணி செய்யும் விதமாக “தலைமுடியைக் கத்தரிக்கும் கத்தரியிலிருந்து விண்ணில் வட்டமடிக்கும் செயற்கை கோள்கள் வரை “ தயாரிக்கும் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டிலேயே உருவாக்கிட வேண்டும். அவ்வாறு செய்தால் தான் தமிழைக் கற்க வேண்டுமென்ற அவசியமும் ஏற்படும். தமிழ்மொழிக்கும் மதிப்பு அதிகரிக்கும்.
முடிவுரை :-
அரசுப் பள்ளிகளை அரசியல் லாபத்திற்காக பந்தாடிடாமல் வருங்கால தமிழகத்தை அலங்கரிக்க போகும் பூந்தொடிகளாகப் பேணிக் காப்பதே சாலச் சிறந்தது.
------------------------------------------------------------------------------------------------------------
என்ன மாஸ்டர் அமைதியா உட்கார்ந்து இருக்கீங்க? ஏதாச்சும் பேசுங்க மாஸ்டர் என்று புவனா சொன்னதை மாஸ்டர் காதில் வாங்கிக் கொண்டு வாங்காததைப் போல அமர்ந்திருந்தார்.
மாஸ்டர் ஒருவர் தான் என்னை சரியாக புரிந்து வைத்திருக்கும் ஒரு மனிதர். அவருக்கும் புரியவில்லை எனில் அதுக்காக கவலைப்படும் ஜென்மமா என்ன இந்த புவனா? புவனா தனக்குள்ளேயே பேசிக் கொண்டாள்.
ஏம்மா புவனா என்னை நீ ஏன் மாஸ்டர்னு கூப்பிடுற உனக்கும் எனக்கும் 7 அல்லது எட்டு வயசு வித்தியாசம்தான இருக்கும்..! ஒரு வேளை பேர் சொல்லி கூப்பிட பிடிக்கலேன்னா அண்ணானு கூப்பிடலாம்ல....மாஸ்டர் கேட்டார்.
அடா அடா என்ன மாஸ்டர் இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க? நான் எதுக்கு உங்கள அண்ணானு கூப்பிடணும்...! அண்ணானு கூப்பிடலாம் மாஸ்டர் ஆனா எனக்கு பிடிக்கலை...! அப்டி உண்மையா கூப்பிட நினைக்கிறவங்கள கூப்பிடலாம் எனக்கு என்னமோ அப்டி தோணல... ஒரளவுக்கு நான் மதிக்கிற மனுசன் நீங்க எனக்கு வயசு 27 உங்களுக்கும் 34 அப்டீன்றதால அண்ணாவோ, சாரோ, மாமாவோன்னு முறை வச்சி கூப்பிட நான் எப்பவும் விரும்பியது இல்லை....
அப்போ, அப்போ ஏதோ நான் சொல்றதை புரிஞ்சுக்கிறீங்க எனக்கு சப்போர்ட் பண்றீங்க கத்தும் கொடுக்கிறீங்க, உறவே இல்லாத ஒரு உறவா இருக்கட்டும்னுதான் நான் உங்களை மாஸ்டர்னு கூப்பிடுறேன். நாளைக்கே நீங்க என்ன பாக்க வரலேன்னா கூட நான் கவலைப் படமாட்டேன் மாஸ்டர்...
வந்தா ஏதோ இலக்கிய நயமா பேசலாம், கவிதை சொல்லுவீங்க, வாழ்க்கை விளக்கங்கள் சொல்வீங்க, நானும் என்னோட பார்வைகள சொல்லுவேன்.. அவ்ளோதான் வரலேன்னா நான் பாட்டுக்கு இன்னும் ஜாலியா இந்த பீச்ல காத்து வாங்கிட்டு, ரெண்டு பொட்டலம் சுண்டலுக்கு காசு கொடுக்கறத ஒரு பொட்டலத்துக்கு கொடுத்தோம்டா, 5 ரூபாய் மிச்சம்னு ஏகாந்தத்தை அனுபவச்சுட்டு பஸ் பிடிச்சு வீட்டுக்கு போய்கிட்டே இருப்பேன்...
ஏன் புவனா அப்டீ சொல்ற உனக்கு சென்டிமென்டே கிடையாதா என்னா? ஒரு வேளை நாளைக்கு நான் செத்துப் போய்டுறேன்னு வச்சுக்க...அப்ப எப்டீ நீ ஃபீல் பண்ணுவ?
நீங்க செத்துட்டா....ம்ம்ம் ஐயம் சாரி மாஸ்டர் இந்த கேள்விக்கு உங்க வைஃப்தான் பயந்து அலறணும் அல்லது கண்ணீர் விடணும். ஒரு வேளை நானே உங்க வைப்ஃபா இருந்தா கொஞ்சம் திங்க் பண்ணுவேன் இப்டி ஒருத்தர் இருந்தாரேன்னு.... கொஞ்ச நேரத்துல வயிறு பசிக்க ஆரம்பிச்சுடும்...மாஸ்டர மறந்துட்டு பசிக்குது என்னடா சாப்பிடலாம்னு தேடி ஓட ஆரம்பிச்சுடுவேன்...ஹா ஹா ஹா!
எல்லாத்தையும் விட, எல்லோரையும் விட, மனுசனுக்கு தான் அப்டீன்றது தான் மெயின் மாஸ்டர். என்ன ஒண்ணு எப்பவுமே பிறருக்காக வாழ்ற மாதிரி நடிக்கிற ஒரு ஆட்டு மந்தைக் கூட்டத்துக்குள்ள எல்லோரும் சுத்திகிட்டு மே மே..ன்னு கத்திக்கிட்டு இருக்காங்க...
என்னையும் மே மேன்னு கத்த சொல்றீங்களா? பி பிராக்டிகல் மாஸ்டர்...!
அப்டி இல்லை புவனா பாசம்னு ஒண்ணு இருக்கும்ல? என்னைய விடு உன்னோட சொந்தக்காரங்களுக்கு ஏதாச்சு ஒண்ணு தப்பா நடந்தாக் கூட இப்டிதான் நடந்துக்குவியா?
மாஸ்டர் உண்மையான பாசம் பொய்யான பாசம்னு ஒண்ணுமே உலகத்துல கிடையாது. இன்னும் சொல்லப் போனா பாசம்ன்றது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கான தேவைன்னு சொல்லலாம். ரொம்ப சென்டிமென்ட்டா அம்மாவோட பாசம் பொய்யா? ன்னு கேள்வி எல்லாம் கேக்காதீங்க...
சுட்டுப் போட்டாலும் என்னால அறிவை விட்டு வெளியில நின்னு பேச முடியாது. அம்மாவாவே இருந்தாலும் அம்மாவுக்கு பிடிக்காம நடந்து கிட்டீங்கன்னா அவுங்களே உங்களுக்கு எதிரி ஆயிடுவாங்க...
இது எல்லாம் விட்டுத்தள்ளுங்க மாஸ்டர். நம்ம வாழ்க்கைல ஒரே ஒரு உன்னதமான விசயம் தொடர்புகள். இப்படியான தொடர்புகள் இல்லாம வாழ முடியாது. அந்த தொடர்புகள் என்ன தொடாத மாதிரி நான் தொடர்புகள வச்சுக்கிறேன். அவ்ளோதான்...
ஒருவேளை நான் சொல்றது உங்களுக்கும் இந்த உலகத்துக்கும் பிடிக்காம இருக்கலாம்...மே.. பீ நீங்க அப்டீ இருங்க ! தப்பு இல்லை. ஆனா என்னை ஏன் அப்படி நீ இல்லன்னு கேக்காதீங்க...!
நான் நானா இருக்கேன் மாஸ்டர்....!
சொல்லிவிட்டு மாஸ்டரை பார்த்தாள் புவனா.... காற்றில் கேசம் பறக்க எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தார். மாஸ்டர் அழகுதான் ஆனால் ரசிக்க கூடிய, வேண்டிய இடத்துல இருந்து எல்லோத்தையும் அவர் ரசிக்கிறதால அத்துமீறாத அந்த வசீகரம் எனக்குப் பிடிச்சு இருக்கு. இப்படி பிடிச்சு இருக்குன்னு சொல்றதுக்கே நிறைய பேர் பயப்படுவாங்க
கேட்டா... சமுதாயம் கட்டமைப்புன்னு நிறைய விறகு கட்டைகள எடுத்து நம்மள சுத்தி அடுக்கி வச்சு எப்படா எரிக்கலாம்னு பாத்துட்டு இருப்பாங்க..? எனக்கு பயம் இல்லை பிடிக்கும்னா பிடிக்கும்னு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பேன்....இதை மாஸ்டர்கிட்டயே நேரா சொல்லி இருக்கேன்...
ஒரு நாள்...இது காதலா இருக்குமா மாஸ்டர்னு கேட்டப்ப? மாஸ்டர் சொன்ன பதில்தான் அவர இன்னும் அறிவார்த்தமா பாக்க வச்சுது...
ஏன் புவனா? காதலா இருந்தா என்ன இல்லன்னா என்ன? ரசிக்கிற வரைக்கும் ரசனைகள் கண்ணியமானவைகளா இருக்கணும்னு அவ்ளோதான் ன்னு சொன்னாரு பாருங்க... அங்கதான் மாஸ்டரோட தெளிவு புரிஞ்சுது...! அவர் கல்யாணம் ஆனவர், அவருக்கு குழந்தை இருக்கு அப்டீன்றது எல்லாம் எனக்கு கூடுதல் விபரங்கள், ரசனையான மனுசன் அவருக்கே அவரோட வாழ்க்கையை ரசனையா வச்சுக்கத் தெரியும் , அப்டீன்றதால அது பத்தி ஏதாவது சொல்லி என் மூக்கை எப்பவும் நான் நுழைக்கிறது இல்லை...
இன்னும் சொல்லப்போனா அவர் ஒரு ஆண், நான் ஒரு பெண் இப்டி ஒரு கனக்ட்டிவிட்டில நாங்க பாக்குறதோ பேசுறதோ கிடையாது. அவர் என்னையும், நான் அவரையும் உணர்வுகளால சுவாரஸ்யப்படுத்துறதால... பழகுறோம்...
இந்த சுவாரஸ்யம்ன்ற விசயத்துல பெரும் பங்கா இருக்குறது என்ன பத்தி அவர் தேவையில்லாம அதிகம் தெரிஞ்சுக்கவோ அல்லது அறிவுறுத்தவோ அல்லது அவர் கூடவே நான் இருக்கணும்ன்ற பிடிவாதமோ இல்லைன்றதுதான். அதே மாதிரிதான் எனக்கும்....
சமயத்துல நானும் மாஸ்டரும் மாதக்கணக்கா கூட சந்திக்காம இருந்து இருக்கோம் சமயத்துல கேப்பே இல்லாம மணிக்கணக்கா கூட பேசி இருக்கோம்..இது ரெண்டுக்குமே காரணத்தை நாங்க தேடிகிட்டது இல்லை.
என்ன புவனா ரொம்ப யோசிச்சுட்டு இருக்க...புன்னகைத்தபடியே புவனாவின் மெளனத்தைக் கலைத்தார் மாஸ்டர்.
என்ன மாஸ்டர் புன்னகை...? புவனா கேட்டாள்...
இல்லை புவனா? பெரும்பாலும் பெண்கள் ஆணாதிக்க சமுதாயம்னு சொல்லிக்கிறாங்க, ஆனா ஒரு காலத்துல ஆண்கள் திட்டம் போட்டு நல்ல வசமாவே பெண்களை அடிமைப்படுத்தி தனக்கு கீழ வச்சுக்கணும்னு நினைச்சாங்க.. ! இப்பவும் சிலர் அப்டி இருக்காங்க...
இப்டி நான் சொல்லும் போதே இன்னொரு விசயத்தையும் உன்கிட்ட சொல்லணும், அதாவது பெண்கள்லயே இன்னும் நிறைய பேரு பெண் அப்டீன்னா என்னனு தெரியாமதான் ஆணாதிக்கத் திமிரை ஒடுக்குவோம்னு கோசம் போடுறாங்க?
ஒரு பெண் தான் விடுதலை பெற்றதா எதைச் சொல்றா தெரியுமா?
எதை மாஸ்டர்...? கேள்வியாய் பார்த்தாள் புவனா...
ஒரு ஆணைப் போல தான் நடந்துக் கொள்வதாலும், உடுத்துவதாலும், பேசுவதாலும் கால் மேல கால் போட்டு சபையில் உக்காருவதாலும் தான் சுதந்திரமாய் இருப்பதா நம்புறா? அப்டியும் இருக்கலாம்....
ஆனா,
ஒரு பெண் தன்னை பெண்ணா 100 சதவீதம் வெளிப்படுத்திக்க எல்லா விதமான சாத்தியக்கூறுகளையும் எடுத்துக்கிட்டு தானே தானாக தன்னை வெளிப்படுத்திக்கிற இடம்தான் உண்மையான புரிதல்னு நான் நினைக்கிறேன் புவனா.
அப்சலுயூட்லி கரெக்ட் மாஸ்டர்...! பாரதி திமிர்ந்த ஞானச் செறுக்கோட இருக்க சொன்னான்....ஆனால் ஞானத்தை விட்டுட்டு திமிரை மட்டும் வசதியா தலையில தூக்கிட்டு போறது நிறைய பேருக்கு ஈசியா இருக்கு மாஸ்டர்.. ஹா ஹா...ஹா....!
நான் ஒண்ணு சொல்லவா மாஸ்டர்...?
சொல்லு புவனா...... மாஸ்டர் அனுமதித்தார்...
போன வாரம் என்னை பொண்ணு பாக்க ஒருத்தர் வந்தார்...! ரொம்ப கேசுவலா பேசிட்டு இருந்தவர்.. ஒரு உண்மைய உன்கிட்ட சொல்லணும் புவனா.... அதை சொல்றது என் கடமைன்னு நான் நினைக்கிறேன்...னு சொன்னார். நான் சரி சொல்லுங்கன்னு சொன்னதும்..., அவர் சொன்னார்..
என்னோட பாஸ்ட் லைஃப்ல பல பெண்களோட எனக்கு உறவு இருந்துச்சு, அதுல ஒரு மூன்று நான்கு பெண்கள் கூட ரொம்ப நெருக்கமான உறவும் ஏற்பட்டுச்சு..., ஆனா இப்போ இல்லை புவனா.....நான் உன்கிட்ட உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன் அதான் சொல்லிட்டேன்.. ! நான் உன்கிட்ட மறைக்க விரும்பலை....உண்மையா இருக்க விரும்புறேன்னும் சொன்னார்....
நானும் பதிலுக்கு அட பரவாயில்லை மிஸ்டர் ரகு. எனக்கு அதுல எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்க சொல்றத நான் கேட்டுக்கிட்டேன் உங்க பெருந்தன்மையான பகிர்தலுக்கு எனது பாராட்டுக்கள்னு சொல்லிட்டு....
நான் ஒரு விசயம் சொல்லணும்..சொல்லலாமான்னு கேட்டேன்....! சரி புவனா...கோ எகெட்னு சொன்னார் அந்த எதார்த்தவாதி....
லுக் மிஸ்டர் ரகு....! எனக்கு கூட நிறைய பாய் பிரண்ட்ஸ் இருக்காங்க, அதுல ரென்டு மூணு பேர் கூட இல்லை ஒரே ஒருத்தர் கூட கொஞ்சம் நெருக்கமா நான் பழகி இருக்கேன்.. அதாவது நீங்க குறிப்பிட்ட அதே ரேஞ்ச்ல..
ஆனா இனிமே அது மாதிரி எல்லாம் நடக்காது... ! திருமணம்னு ஒண்ணு ஆன உடனே ஒரு கட்டுக்குள்ள உங்கள மாதிரியே நானும் வந்துடுவேன்ல .. நீங்க இதை கேசுவல எடுத்துக்கணும்னு சொன்னேன்....
ஹா ஹா ஹா இன்ட்ரஸ்டிங் புவனா? அதுக்கு என்ன சொன்னார் ரகு...?
புவனா தொடர்ந்தாள்...கல்யாணம் நின்னு போச்சு மாஸ்டர் அவ்ளோதான்... ஹா ஹா...! ஒரு பொண்ணு இப்டி இருக்கக் கூடாதாம்.....உலக சம்பிரதாய சட்டத்துல ஆண்களுக்கு மட்டும் இப்படி அதிகாரம் இருக்காம். அதை அவுங்க ஒத்துக்கிடும் போது அது பெருந்தன்மையாம்.. நாங்க கடவுளின் அவதாரமா அவரைப்பார்த்து எல்லோர்கிட்டயும் அவர் எவ்ளோ நல்ல மனசு உடையவர் தெரியுமான்னு கொண்டாடணுமாம்...
டாமிட்.... அவன் சொன்ன உண்மைய நான் ஏத்துக்கணும்.. ஆனா நான் சொன்ன பொய்யை அவனால ஏத்துக்க முடியாது.. இதைத் தான் நான் கன் வச்சு சூட் பண்ணனும்னு சொல்றேன் மாஸ்டர்...!
எனக்கு பிடிச்சு இருக்குன்னு வச்சுக்கோங்க ஒரு ஆணோட என்னால க்ளோசா இருக்க முடியும்.. அது எப்ப வேணா நான் செய்யலாம்....அதுக்கு கல்யாணம் கத்திரிக்கா ஒண்ணும் எப்பவுமே தடை கிடையாது மாஸ்டர்....
சரி எது? தப்பு எது? ன்னு முடிவு பண்ண வேண்டியது தனித் தனி மனுசங்க? எனக்கு என்னமோ நிறைய ஆம்பளைங்க கல்யாணம் பண்ணிகிட்டு செக்கியுரிட்டி ஆபிசர்ஸ் மாதிரி வைஃப்ங்கள சுத்தி சுத்தி வர்ற மாதிரிதான் தோணுது...
பொண்ணுங்களும் தாலிய எடுத்து கண்ணுல ஒத்திகிட்டு சாகுற வரைக்கும் நான் உனக்கு உண்மையா இருக்கண்டான்னு ஒவ்வொரு தடவையும் ப்ரூப் பண்ணிகிட்டே இருக்காங்க....
நான்சென்ஸ்...! இயல்பா வாழ முடியாதா மாஸ்டர்...?
புவனா பேசி முடிக்கவும் மாஸ்டர் கை தட்டினார்....! இப்டி இருக்கணும் புவனா.... இயல்பா ஆணும் பெண்ணும் இல்லாம இருக்கறதுக்கு நிறைய காரணம் இருக்கு...அதைப் பத்தி அடுத்து நாம மீட் பண்றப்ப பேசலாம்...
ஆனா நீ பேசுறத எல்லாம் பாத்துட்டு உனக்கு திமிர் ஜாஸ்தின்னு இந்த உலகத்துல 99% சொல்லுவாங்க...ஆனா இப்டி இருக்கறதுதான் இயல்புன்னு நான் சொல்வேன்...
ஒரு வேளை நான் பொண்ணா இருந்தா உன்ன மாதிரி இருந்திருப்பேனான்றதும் டவுட்.. அதனாலேயே உன்னை உன் செயலை ரசிக்க முடியுது என்னால..
ம்ம்ம்.... டைம் ஆச்சு மாஸ்டர், ஒரே ஒரு விசயம் சொல்லிட்டு கிளம்புறேன்...என்னோட கொலிக் ஒருத்தன் என்ன பாத்து கேட்டான்...ஏண்டி இவ்ளோ திமிரா இருக்கியே... ஆம்பளைங்க நாங்க சட்டைய கழட்டிப் போட்டுட்டு....ரோட்ல நடப்போம் உன்னால முடியுமாடி? ன்னு...
நான் சொன்னேன்...இல்லடா என்னால முடியாது சத்தியமா முடியாது ஒத்துக்குறேன்.
ஆனா நீ ஆம்பளைதானே..... உன்னால எல்லாமே முடியும்ல..... ஒரு மாசம் டெய்லி புடவை ஜாக்கெட் போட்டுகிட்டு, வளையல் போட்டுகிட்டு , அல்லது சுடிதார் போட்டுகிட்டு உன்னாலே ஆபிஸ்க்கு வர முடியுமாடா?ன்னு கேட்டுட்டு
என்னால பேண்ட் சர்ட் போட்டுகிட்டு ஆயுசு பூரா வரமுடியும்னும் சொன்னேன்.....
ஹி ஹி ஹின்னு சிரிச்சுட்டு போய்ட்டான் மாஸ்டர்...!
செய்ய முடியுமான்னு கேட்டா? அது மாதிரி ஆயிரம் நாமளும் திருப்பி கேக்கலாம்ல மாஸ்டர்.
ஆணாதிக்கம் மட்டும் இருக்குன்னு நான் சொல்ல வரலை மாஸ்டர், பெண்களுக்கும் பெண்ணா இருக்கறதுன்னா என்னனு முழுசா தெரியலை...! இப்டியே பேசிட்டு இரு, தனியா போகும் போது நாலு பேரு சேந்து உன்னை நாசம் பண்ணப் போறாங்கன்னு எங்கம்மா சொல்றதுக்கு பின்னாடி கடைஞ்செடுத்த பொது புத்திதான் இருக்கு மாஸ்டர்...
ஏன்னா.....நாலு பேரு ஒண்ணா சேந்தா ஒரு ஆம்பளைய கூடத்தான் என்ன வேணா பண்ணலாம்....ஹா ஹா ஹா! புவனா சப்தமாய் சிரித்தாள்.
மாஸ்டர் இருட்டிடுச்சு மணி 8 ஆகப் போகுது எனக்குப் பிரச்சினை இல்லை.....உங்க வைஃப் உங்களத் திட்டப் போறாங்க கிளம்பலாம் மாஸ்டர்..!
சரி புவனா கிளம்பலாம் பாத்து போ... கேட்ச் யூ வென் எவர் இட்ஸ் பாஸிபிள்....
மாஸ்டர் பை...சொன்னார்....!
கவலைப்படாதீங்க மாஸ்டர்.. சின்ன சைஸ் கத்தி, பிளேடு எல்லாம் ஹேண்ட் பேக்ல இருக்கு.... சீக்கிரமே கைத்துப்பாக்கி ஒண்ணு வாங்கி வச்சுக்கலாம்னு இருக்கேன்.... ஹா ஹா ஹா!
தூரத்தில் கடல் வானில் இருந்த நட்சத்திரங்களைப் பார்த்து ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.
" உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்..."
....பாரதியின் ஆன்மா மீசை முறுக்கிப் பாடிக் கொண்டிருந்தது...
அவர்கள் இருவேறு திசையில் நடந்து கொண்டிருந்தார்கள்..!
தேவா சுப்பையா...
----------------------------------------------------------------
அவள் அப்படித்தான்-கிருத்திகா தாஸ்
"ஏய் , நீ திருந்தவே மாட்டியாடி..?"
"எல்லாம் நாளைக்குத் திருந்திக்கிறேன்...இப்போப் போயி சூடா காம்ப்ளான் போட்டு எடுத்துட்டு வாங்க மம்மி.."
"பல்லையாவது விளக்குடி.."
"அதெல்லாம் நேத்தே விளக்கியாச்சு...போம்மா போம்மா..."
"கழுதை வயசாகுது...இன்னும் எங்க போறோம் எந்தத் தெருவுல இருக்கோமுன்னு கூடத் தெரியாம காணாமப் போறே...ஒவ்வொரு முறையும் தேடித் தேடிக் கண்டு புடிக்க வேண்டியிருக்கு...எங்கயாவது தொலைஞ்சு போயிட்டு , போன் பண்ணி 'அம்மா எங்க இருக்கேன்னு எனக்கேத் தெரியலம்மா , வந்து கூட்டிட்டுப் போம்மா'ங்கறது...இதே வேலையாப் போய்டுச்சுடி உனக்கு..."
".............."
"ஆனா எனக்கு சலிச்சுப் போய்டுச்சு உன்னைத் தேடித் தேடி அலைஞ்சு.. இன்னொரு முறை தொலைஞ்சு போனீன்னா அப்படியே விட்டுருவேன், தேடிட்டு வர மாட்டேன்..சொல்லிட்டேன்..எந்தத் தெருவுல போயிட்டு இருக்கோமுன்னு கூட அடையாளம் வெச்சுக்க மாட்டியாடி...பச்சைக் குழந்தையாடி நீ...இப்படியாடி தொலைஞ்சு போவே..?"
"அதான் வந்துட்டேன் இல்ல..காணாமப் போயித் திரும்பி வந்த புள்ளையப் பாத்துப் பேசுற பேச்சா இது..."
"ம்கும் , இது முதல் தடவைன்னா , கட்டிப் புடிச்சுக் கொஞ்சலாம்...238 ஆவது முறையாக் காணாமப் போறதுக்கெல்லாம் தூக்கி வெச்சுத் தாலாட்டிட்டு இருக்க முடியாதுடி..."
"ஓ , எண்ணி வேற வெச்சு இருக்கியா.."
"காணாமப் போறே சரி , போற பக்கமெல்லாம் ஏதாவது வம்பு வளத்துட்டு வர்றியே , எத்தனை வழக்கைத் தாண்டி நானும் சமாளிக்கிறது...அன்னைக்கு அப்படித்தான் , தெருவுல எவனோ ஒருத்தன் ஏதோ ஒரு புள்ளையைக் கிண்டல் பண்ணினான்னு அவனைத் தெருத் தெருவா ஓட விட்டுத் துரத்தித் துரத்தி அடிச்சு இருக்கே...எதுக்குடி,,எதுக்குடி உனக்கிந்த ஊர் வம்பெல்லாம்..போனமா ஒழுங்கா வீடு வந்து சேர்ந்தமான்னு வரவே மாட்டியாடி நீ..?"
"ம்ம்ம்...அப்படி எல்லாம் லேசுல விட முடியாது..சமுதாயப் பிரச்சனை....ஏன் போன மாசம் ஒருத்தன் தெருவுல அடிபட்டுக் கிடந்தான்னு அவனை ஆஸ்பத்திரி வரைக்கும் கூட்டிட்டுப் போயிட்டு , அவன் வீடு வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு , அவன் கிட்டயே நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு வழி கேட்டு ஒழுங்கா வீடு வந்து சேர்ந்தேன் இல்ல...அதை எல்லாம் பாராட்ட மாட்டியே நீ..."
"ஆமா போ...அவன் தெருவுல கவுந்தடிச்சு விழுந்ததே நீ எவனோ ஒருத்தனைத் துரத்திட்டுத் தப தபன்னு நடுத்தெருவுல ஓடினதுனால தானேடி..."
"சரி சரி விடுங்க...இப்போ காம்ப்ளான் குடுக்க முடியுமா முடியாதா...?"
"இதுக்கெல்லாம் குறைச்சல் இல்ல...உங்க கராத்தே மாஸ்டர் இப்போத்தான் போன் பண்ணினார்...ஏதோ முக்கியமான வேலையா வெளியூர் போறாராமா...ரெண்டு நாளைக்கு வர வேண்டாமுன்னு சொல்லச் சொன்னார்..."
"அந்தாளுக்கு வேற வேலை இல்ல...மாச மாசம் காசை மட்டும் கணக்கா வாங்கிட்டு எப்போப் பாரு லீவு விட்டுருவான்..."
"ஏய் , நீ யாரையுமே மதிக்க மாட்டியாடி..?"
"எல்லாம் மதிக்கலாம் மதிக்கலாம்....சௌமியாவோட அம்மாவுக்கு உடம்பு சரி இல்லையாமா..போய் ஒரு எட்டுப் பாத்துட்டு வந்துடுறேன்..."
"போச்சுடா...கடவுளே...எனக்கு இப்போவே லேசா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்குதே..."
"ஹார்ட் அட்டாக் வர்றதுக்குள்ள வந்துடுறேன் மா...சௌமியா வீட்டுக்கு எத்தனை முறை போய் இருக்கேன்..? அவ வீட்டுக்குப் போற வழி எனக்கு நினைவு இருக்குது மா...ஒழுங்காப் போயிட்டு , பத்திரமா வந்துடுறேன்..."
"சரி சரி ஒரு மணி நேரத்துல வந்துரு...புரிஞ்சுதா..."
"ம்ம்..பாக்கலாம் பாக்கலாம்..."
அவளது வகுப்புத் தோழியான சௌம்யா வீட்டுக்குச் செல்வதற்காகத் தயாராகி , அம்மாவிடம் சொல்லிக் கொண்டு , தெருவில் இறங்கி நடந்தாள் அவள்...
யோசனைகள் எல்லாம் ரொம்ப பலமாக இருந்தது..
'ஏன் நம்மளை அம்மா இந்தத் திட்டு திட்டுது'
'அப்படி என்ன தப்புப் பண்ணிட்டோம்'
'நிஜமாவே ஏதாவது பண்ணி இருப்போமோ'
'ம்ம்..அப்படி ஒண்ணும் பெரிசா செஞ்ச மாதிரி தெரியலையே..'
'அப்புறம் எதுக்கு அம்மா தினமும் தவறாமத் திட்டுது'
'எதுவுமே புரியலையே..'
'ம்ம்...அதைக் கண்டுபுடிச்சே தீருவேன்..'
யோசித்துக் கொண்டே 20 நிமிடம் நடந்து இருப்பாள்...இன்னும் 10 நிமிஷம் நடக்கணும் சௌம்யா வீட்டுக்கு...
ஆனால் , விதி தான் அவ்வளவு எளிதில் இவளை விடாதே...
எப்பவுமே சதி செய்து விளையாடும் விதி , இன்றோ அவள் அந்த இடத்திற்கு வரும் முன்னமே அங்கு வந்து அவளுக்காகக் காத்திருந்தது..
ஆம்...அதேதான்...
நீங்கள் நினைத்தது சரிதான்...
நடக்கப் போகிறது..
நடக்கவே போகிறது அந்தச் சம்பவம்...
இவளுக்காகவென்றே காத்திருந்த அந்தச் சம்பவம்...
சௌம்யா வீட்டை அடைய இன்னும் 4 தெருக்களே இருந்த நிலையில் , எங்கிருந்தோ எவனோ ஒருத்தன் இவள் பின்னாலிருந்து தட தடவென்று ஓடி வந்து இவள் மேல் மோதித் தள்ளி விட்டு , இவளைக் கடந்து இவளுக்கு முன்னால் ஓடினான்..
"அடிங்க...எவண்டா அவன்.." , அவன் முட்டித் தள்ளி ஓடியதில் நிலை தடுமாறிக் கோபமுற்றாள் இவள்...
இவள் உணரும் முன்னமே , இவளுக்குக் கொஞ்சம் தள்ளிக் கைக்குழந்தையோடு நடந்து சென்று கொண்டிருந்த ஒரு அக்காவின் குழந்தையோட கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடினான் அவன்...
அந்த அக்கா அலறத் தொடங்கியது , "ஐயோ திருடன் திருடன் செயினை அத்துக்கிட்டு ஓடுறான் ,யாராவது வாங்களேன் , ஐயோ யாராவது அவனைப் புடிங்களேன்..அடப்பாவி ஓடுறானே...ஐயோ கடவுளே.." , தலையில் அடித்துக் கொண்டு அலறியது...
யாருமே இல்லாத அந்தத் தெருவில் யார் வருவார் அந்தக்காவைக் காப்பாற்ற , நம்மவளைத் தவிர...
எப்போதும் விழிப்பு நிலையிலேயே அவளுக்குள் இருக்கும் மிருகம் , இப்போது பயங்கரமாய் சீறிக் கொண்டு விட்டது...
"அக்கா , இருங்க இருங்க அலறாதிங்க..."
சொல்லியவாறே , அந்தத் திருடனைப் பிடிக்கத் தயாராகி , அவனைத் துரத்திக் கொண்டு மின்னலாய் ஓட்டமெடுத்தாள் அவள்...ஆனால் அவனோ நீண்ட தூரம் ஓடியிருந்தான்...
இவள் விடுவதாய் இல்லை...சளைக்காமல் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடினாள்... இவளது மொத்த கவனமும் கண் இமைக்காமல் அவனது மீதே இருந்தது...சாலையைக் கடந்த அவன் இடது புறமாய் இருந்த ஒரு தெருவுக்குள் புகுந்து ஓடினான்...
இவள் துரத்திக் கொண்டு வருவதை திரும்பிப் பார்த்த அந்தத் திருடன் , "ஏய் வாடி வா..முடிஞ்சா புடிடி புடி.." , என்று ஏளனமாய்க் கத்திக் கொண்டே ஓடினான்...
அதைக் கேட்ட இவளுக்குக் கோவம் தலைகேறிக் கண்கள் சிவந்தது...கால்கள் அவளையும் மீறி இன்னும் அதிக வேகமெடுத்தன...
அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கினாள் இவள்...
இவள் இவ்வளவு வேகமாக வெறித்தனமாய் ஓடி வருவதைப் பார்த்த அவன் மிரண்டு தான் விட்டான்...ஒரு கட்டத்தில் அவனது ஓட்டம் சற்று தடுமாறத் தொடங்கியது...
'இது என்ன புள்ளையா இல்ல பேயா , இப்படி ஓடுது' என்று நினைத்துக் கொண்டு இவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடியதில் , ஒரு தந்திக் கம்பத்தில் சளேரென்று மோதிக் கீழே விழுந்தான்...
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய அவள் , அப்படியே பாய்ந்து சென்று , மல்லாக்க விழுந்து கிடந்த அவனது நெஞ்சில் முழங்காலை வைத்து ஊன்றி , ஓங்கி அவனது மூஞ்சியில் ஒரு குத்து விட்டாள்...
"எடுடா செயினை.."
ஆத்திரம் தாங்காத அவன் ஒளித்து வைத்திருந்த பிளேடை டக்கென்று எடுத்து இவளது இடது கையில் கூட்டல் குறி ஒன்று போட்டு விட்டான்...
" ஒ சட் ..."
வலியால் அவள் துடித்த நேரத்தில் எழுந்து தப்பித்து ஓடினான் அவன்...
ஆனால் , இவள் சளைக்கவில்லை...கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாரித்துக் கொண்டு மீண்டும் எழுந்து ஓடினாள்...
கண்ணுக்கெட்டும் தூரத்தில் தான் அவன் ஓடிக்கொண்டு இருந்தான்..நொடியில் சுற்றும் முற்றும் அவளது கண்கள் ஆராய்ந்தன...அங்கே தெருவோரத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த செங்கற்களில் ஒன்றை எடுத்து நேராகக் குறி பார்த்து வீசினாள்..அது பட்டென்று அவனது கணுக்கால்களில் பட்டு அவன் நிலைதடுமாறிக் கீழே விழுந்தான்...
கீழே விழுந்து கிடந்தவனுக்கு அருகில் போய் நின்று அவனை முறைத்துப் பார்த்தவள் , இருந்த கோவத்தை எல்லாம் சேர்த்து வைத்து , அவனது முழங்காலில் ஓங்கி ஒரு மிதி மிதித்தாள்...உள்ளே ஏதோ நொறுங்கும் சத்தம் கேட்டது...
"ஏண்டா டேய் , உடைஞ்சு போன விளக்கமாத்துக் குச்சி மாதிரி இருந்துக்கிட்டுத் தங்கச் சங்கிலி கேக்குதாடா உனக்கு..எடுடா அதை..."
ஒரு கட்டத்தில் வெறுத்தே போன அவன் , அந்தத் தங்கச் சங்கிலியை அவளது முகத்தில் விசிறி அடித்து விட்டு , எழுந்து சிரமப்பட்டு நொண்டிக் கொண்டே ஓடினான்..
போனவன் சற்று தூரம் சென்று திரும்பிப் பார்த்துச் சொன்னான் , "ஏய் பத்ரகாளி , நீயெல்லாம் விளங்கவே மாட்டேடி.."
"டேய் போடா , எனக்கே தெரியுண்டா அது.."
அதற்குள் அந்தத் தங்கச் சங்கிலிக்குச் சொந்தக்கார அக்கா அங்கு வந்து விட்டிருந்தது...ஓடும்போது தெறித்து விழுந்த இவளது கைப்பையையும் பத்திரமாகக் கொண்டு வந்து இருந்தது அந்த அக்கா....
"அச்சச்சோ என்னம்மா கையெல்லாம் ரத்தம்...?"
"பரவா இல்ல விடுங்கக்கா...இந்தாங்கக்கா செயின்.."
"அப்பாடா ..ரொம்ப நன்றிம்மா..என் குழந்தைக்குன்னு முதல் முதலா செஞ்ச நகைம்மா இது...பறி போயிடுச்சேன்னு மனசு ஒரு நிமிஷம் பதறிப் போய்டுச்சு மா...எங்கிருந்தோ தெய்வமாட்ட வந்து காப்பாத்திக் குடுத்தே மா..நீ நல்லா இருப்பே...ரொம்ப நன்றிம்மா...நான் வர்றேன் மா." , என்று சொல்லி விட்டு சந்தோசமாகக் கிளம்பியது அந்த அக்கா...
அந்த அக்கா சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் அவள்...
'நம்ம அம்மாவைத் தவிர மத்த எல்லாரும் நம்மளைப் பாராட்டுறாங்களே...ம்ம்..'
யோசித்துக் கொண்டே நின்றிருந்தாள்..
தூரத்தில் சென்ற அந்த அக்கா , திரும்பி நின்று , "அம்மாடி , பாத்துப் போம்மா ..பத்திரம்..." , என்று சொல்லிவிட்டுச் சாலை வளைவில் மறைந்து விட்டது...
என்னது 'பாத்துப் போம்மா'வா
'பாத்துப் போம்மா'
'பாத்துப் போம்மா'
'பாத்துப் போம்மா'
ஒரு 34 முறை எதிரொலித்து அடங்கியது இந்த வார்த்தைகள் அவளது காதுகளில்...அப்போத்தான் அவளுக்கு உறைத்தது...
'அடக் கடவுளே ..ரொம்ப தூரம் ஓடி வந்துட்டேனா...எந்த ஊரு இது ..நாம எங்க நிக்கிறோம்...ஒண்ணுமே புரியலையே...இப்போ என்ன பண்றது..வழி கேக்கக் கூட ஒருத்தனையும் காணோமே இந்தத் தெருவில்..என்னடா ஏரியா இது..' என்று தனக்குத் தானே நொந்து கொண்டவள் , கைப்பையைத் திறந்து பணத்தை எடுத்துக் கொண்டு அருகில் பிசிஒ எங்க இருக்கு என்று தேடினாள் அவளது அம்மாவுக்குப் போன் பண்ண...
சுஜா...
அவள் திருந்த மாட்டாள்...அவளால் திருந்தவும் முடியாது...எதுக்காகத் திருந்த வேண்டும்...திருந்தியே ஆகணுங்கற அளவுக்கு அவள் எந்தத் தப்பும் செய்து விடவில்லையே...
யார் கண்டா ,,, வருங்காலத்துல , ஊரையே கூடக் காப்பாத்தலாம் இவள் ஒரு நாள்...ஆனா அப்பவும் , இப்படித்தான் வீட்டுக்குப் போக வழி தெரியாமத் திணறிக்கிட்டு அவங்க அம்மாவுக்குப் போன் பண்ணுவா...
இப்ப மட்டும் இல்லைங்க , சுஜா எப்பவுமே இப்படித்தான்....!!!!!
-----------------------------------------------------------------------------------------
அவள்அப்படித்தான் -ரம்யா சரசுவதி
****************************************
வீடெங்கும் ஒரே பரபரப்புடன் சுற்றிக்கொண்டு இருந்தாள் முத்துலெட்சுமி…. தன் மகள் நிரல்யாவின் முதல் பெண்பார்க்கும்படலம் என்பதால்…. ஏங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிளம்பிட்டாங்களா?????? எப்பவராங்க?? எதாவது அலைப்பேசி-ல தொடர்புகொண்டீங்களா????.....
ஒரு வித எரிச்சலுடன் அவள் கணவன் பழனி இன்னும் இல்லை……அவுங்க சாயங்காலம் 4-மணிக்கு தான் வருவாங்க-னு நேத்தே சொன்னாங்கள அப்புறம் எதுக்கு சும்மா சும்மா அலைப்பேசி-ல அவுங்கள தொந்தரவு செய்யனும்…கிளம்பும் போது அவுங்களே பண்ணுவாங்க…
அந்நேரம் அங்கு வந்த நிரல்யா சரியா சொன்னீங்க அப்பா…இந்த அம்மா காலை-ல இருந்து வீடே இரண்டு பண்ணிட்டு இருக்காங்க…..என்னமோ இன்னைக்கே கல்யாணம் நடக்க போறமாறி…
அதைக்கேட்ட முத்துலெட்சுமி ஆவேசத்துடன் அப்பாவும்,பொண்ணும் சேந்துட்டீங்களா…. இனி நா சொல்லுறத எங்க கேட்க போறீங்க…. என்னமோ செய்யுங்க…..
அம்மா நா என் தோழி வீட்டுக்கு போய்ட்டு மதியம் தான் வருவேன்….
என்ன விளையாடுறீயா?? இன்னைக்கு எங்கையும் போககூடாது…. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க…. அத மனசுல வச்சுக்கோ….
பாருங்க அப்பா அவுங்க சாயங்காலம் தான வராங்க… இப்ப காலை தானே…. மதியம் வந்துடுவேன்…. அம்மாக்கு எடுத்து சொல்லுங்க அப்பா….
சரி விடு முத்துலெட்சுமி கொஞ்சநேரம் போய்ட்டு வரட்டும்… நிரல்யா அப்படியே உன் தோழி நிலாவை கூட்டிட்டு வா மா…. சாயங்காலம் உனக்கு ஒத்தாசையா இருக்கும்…. அப்பானா அப்பாதான்… சரிஅப்பா… கண்டிப்பா கூட்டிட்டுவரேன்….தன்னுடைய வாகனத்தை வேகமாக எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள்…..
நேரம் நெருங்கிக் கொண்டே இருந்தது நிரல்யா வரவே இல்லை…கடிகாரத்தின் பெரிய மற்றும் சின்ன முள் 4-ல் சரியாக நின்றவுடன் மணி டங் ட ங் டங் என்று ஒலித்தது…… அந்த ஒலியின் அதிர்வு முத்துலெட்சுமியை மேலும் பதட்டம் ஆக்கியது…அவளின் இதயத்தில் யாரோ அடிப்பது போல் உணர்ந்தாள்…. என்னங்க இன்னும் நம்ம பொண்ணக்காணோம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வேற வந்துடுவாங்க… இதுக்குதான் சொன்னேன் அவள அனுப்பாதிங்க-னு சொன்னா கேட்டீங்களா….. அவளுக்கு இதுல கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல….அதான் இப்படி பண்ணுறா….
இப்ப எதுக்கு கவலைப்படுற…. அதெல்லாம் நம்ம பொண்ணு சொன்னா சொன்னமாறி வந்துடுவா…. இரு நான் அலைப்பேசி-ல பேசுறேன்… எங்க இருக்கானு தெரிஞ்சுடும்…. பழனி அலைப்பேசியை எடுத்து நிரல்யாவை அழைக்கும் போது….வெளியில் இருந்து ஒரு குரல்….அப்பா அப்பா…….
என்னங்க நம்ம பொண்ணு வந்துட்டானு நினைக்குறேன் என்று முத்துலெட்சுமி வேகமாய் வெளியே ஒடினாள்….. வா மா நிலா நிரல்யா எங்க…. இவ்வளவு நேரம் எங்க போனீங்க…. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா…. எங்கஅவ?????
என்னமா நான் கேட்க வேண்டிய கேள்வி நீங்க கேக்குறீங்க….நிரல்யா எங்க????….எங்க வீட்டுக்கு காலை-ல வரேனு சொன்னா இன்னும் வரலயே என்ன ஆச்சுனு பாத்துட்டுபோலாம்-னு வந்தேன்…..
அப்படியே தலையில் இடி இறங்கியதுப் போல் இருந்தது முத்துலெட்சுமிக்கும்,பழனிக்கும்….. அந்த ஒருநொடியில் அவர்களது எண்ணங்கள் அலைப்பாயத்தொடங்கியது….. தன் மகளுக்கு என்ன நடந்ததோ?? எங்கு இருக்கிறாளோ என்று…. அப்பொழுது அங்கு ஒரு கார் வந்து நின்றது….
மேலும் ஒரு இடி தன் தலையில் இறங்கியதைப்போல் உணர்ந்தால் முத்துலெட்சுமி… வந்திருக்கும் மாப்பிள்ளை வீட்டார்க்கு என்னபதில் சொல்வது என்று தெரியாமல் பேய் முழி விழிக்க சற்று சுதாரித்தவளாய் அவர்களை வரவேற்றாள்
வாங்க வாங்க….என்று நிரல்யாவின் பெற்றோர்கள் அவர்களை வரவேற்றனர்….
அந்த பதட்டத்திலும் அவர்களுக்கு சுடசுட குடுவையில் தேநீர் உடன் பலகாரங்களைப் பறிமாறினாள்….. அப்போது அங்கு வந்த நிரல்யாவின் தந்தை தங்கள் குடும்பத்தைப்பற்றியும் நிரல்யாவைப்பற்றியும் அறிமுகம் கொடுத்துக்கொண்டு இருந்தார்… மாப்பிள்ளைவீட்டாரும் அவர்களைப்பற்றி அறிமுகம் கொடுத்துக்கொண்டு இருக்கையில் அப்பொழுது யாரோ வாசலில் வந்து நின்று வீட்டில் உள்ள அழைப்புமணியை ஒலித்தனர்….
முத்துலெட்சுமி வேகமாய் ஒடிச்சென்று தன் மகளோ என்று பார்க்கையில் சற்று ஏமாந்தவளாக யாரு தம்பி நீ?? என்ன வேணும்……
என் பேரு நிரஞ்சன் …நா தான் மாப்பிள்ளை என்றான்… அப்படியே பேய்முழி முழித்தாள் முத்துலெட்சுமி செய்வதறியாது….
என்ன உள்ள கூப்பிடமாட்டிங்களா என்று நக்கல்செய்தான் நிரஞ்சன்…. சற்று சுதாரித்தவளாய் அப்படிலாம் இல்ல மாப்பிள்ள உள்ள ஒரு பையன் உட்கார்ந்து இருக்காங்க…அவர்தான் மாப்பிள்ளையோ-னு நினைச்சேன்… திடீர்-னு நீங்க வந்து சொன்ன உடனே எனக்கும் ஒன்னும் புரியல … அதான்…. மன்னிச்சுக்கோங்க….
பரவால அத்தை… இதுல என்ன இருக்கு…..நீங்க என் அம்மா மாதிரி உங்கள போய் தப்பா நினைப்பேனா??? அவள் மனம் ஆனந்தத்தில் கூத்தாடியது…. ஒருபக்கம் தன்மகள் இன்னும் வரவில்லையே என்று மனம் குமுறியது… மாப்பிள்ளைக்கு தேநீர் குடுத்து அமரச்செய்தாள்…. பொண்ண கூட்டிட்டுவாங்க –னு மாப்பிள்ளை அம்மா கேட்டவுடன் ஒருவித பதற்றத்துடன் முத்துலெட்சுமி அது வந்து வந்து என்று தயங்கினாள்…
அப்பொழுது இதோ பொண்ணுவந்துட்டாளே என்று மாப்பிள்ளை அப்பா சொல்ல முத்துலெட்சுமி திரும்பிபார்த்தாள்…. அவள் கண்ணை அவளாளே நம்ப முடியவில்லை… நிரல்யா அலங்காரத்துடன் வந்துநின்றாள்…. முத்துலெட்சுமிக்கு இப்பொழுதுதான் உயிர் வந்ததுப்போல் இருந்தது….
அவள் காதருகே வந்த நிரல்யா எப்படி நேரத்துக்கு வந்துட்டேனா இப்பாவது சிரி அம்மா… எப்பபாரு தேவை இல்லாம கவலைப்படுற… முத்துலெட்சுமியின் கண்ணில் ஆச்சிரியத்துடன் அவள் ஆயிரம் கேள்விக்கணைகளுடன் நிரல்யாவை நோக்கினாள்……. நிரல்யாவும் அவளை அமைதிபடுத்தும் விதமாக கண்ணில் சைகை காட்டினாள்…..
பெண்பார்க்கும்படலம் முடிந்தபிறகு அவர்கள் அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்… .நாங்க நாளைக்கு பதில் சொல்லுறோம் என்று….
அவர்கள் சென்றகணமே அமைதி பொறுக்காதவளாய் எண்ணெய்யில் போட்ட கடுகைப்போல் அவள் கோபக்கணல்களை நிரல்யாவின் மீது வீசினாள்…. நிரல்யா மெளனம் காத்தவளாய் தன் அறைக்குள் நுழைந்து கதவை சாற்றினாள்…. அப்பொழுது மாப்பிள்ளைவீட்டாரிடம் இருந்து அலைப்பேசி ஒலித்தது… ஒருவித பதட்டத்துடன் அதை உயிர்பித்தாள் முத்துலெட்சுமி…சொல்லுங்க என்னவிஷயம்… மறுமுனையில் மாப்பிள்ளையின் அம்மா நாளைக்கே உறுதி பண்ணிடுவோம் எங்களுக்கு பொண்ண ரொம்பபிடிச்சு போச்சு.. இப்படிப்பட்ட நல்ல பொண்ணதான் நாங்க எதிர்பார்த்தோம்… எங்க பையன் உங்க பொண்ணபத்தி இப்ப தான் என்கிட்ட சொன்னான்…அதான் உடனே பேசிட்டேன்…என் மருமகள்-ட குடுங்க நா அவள்-ட பேசனும்…. ஒன்றும் புரியாதவளாய் குழப்பத்துடன் நிரல்யாவின் அறையில் நுழைந்து அலைப்பேசியை அவளிடம் கொடுக்கிறாள்… அவள் பேசி முடித்து அலைப்பேசி தொடர்பை துண்டித்துவிட்ட மறுநொடி தன் தாயின் குழப்பத்தை புரிந்துக்கொண்ட நிரல்யா பேச தொடங்கினாள்.....
அம்மா நா காலை-ல வண்டி-ல போகும் போது சாலை-ல ஒரு வயசான தாத்தா அடிப்பட்டுக்கிடந்தார்… அப்ப அவர யாரும் காப்பாத்தாம அமைதியா வேடிக்க பாத்துட்டு இருந்தாங்க…. என் மனசு பொறுக்கல…. அவர அவசரமா நான் அரசு மருத்துவமனை-ல போய் சேத்தேன்… ஆனா அங்க போய் ரொம்ப நேரம் ஆகியும் யாரும் அவருக்கு முதலுதவி கூட குடுக்கல…. நேரா ஒரு டாக்டர் அறைக்கு போய் செம்மையா திட்டிவிட்டேன்… அப்புறம் அவர் தான் அவரகாப்பத்துனார்…. அதான் இவ்வளவுநேரம் ஆகிடுச்சு அம்மா..அது சரி மாப்பிள்ளை அம்மா ஏதோ சொன்னாங்க அது என்ன எனக்கு புரியல…. அதுவா அது ஒன்றும் இல்ல அந்த டாக்டர் வேற யாரும் இல்ல இன்னைக்கு என்ன பொண்ணுபாக்க வந்த மாப்பிள்ளைதான்….
அப்படியா!!!!!!!!!! நீ வேற திட்டிஇருக்க மாப்பிள்ளை தப்பா நினைக்க போறாரு…. உனக்கு எதுக்கு இந்த ஊரு வம்புலாம்…. ஆமா நீ எப்படி வந்த வீட்டுக்கு …..
அதுவா பின்னாடி சுவர் ஏறி குதிச்சு வந்தேன் அம்மா…. சற்றே கோபத்துடன் முத்துலெட்சுமி நிரல்யாவைப்பார்த்து என்னைக்குதான் இந்த சேட்டை எல்லாம் மூட்டகட்டி வைக்க போற நீ…..
அப்போது அங்கிருந்த நிரல்யாவின் அப்பா……சற்றே புன்னையுடன்….இவ எப்பவுமே இப்படித்தான் மா …எப்பபாரு எதாவது நினைச்சு பயப்படுவா இல்ல கவலைபடுவா இல்ல திட்டுவா….. நீ கண்டுக்காத நிரல்யா…. என் குழந்தை எவ்வளவு பெரிய நல்ல காரியம் பண்ணி இருக்கா பாராட்டாமா சும்மா குத்தம் சொல்லிட்டே இருப்பா…
அப்பாவும்,பொண்ணும் சேந்துட்டீங்களா…. இனி நா சொல்லுறத எங்க கேட்கபோறீங்க…. என்னமோ செய்யுங்க….. என்று சமையல் அறைக்குள் நுழைந்தாள் முத்துலெட்சுமி…..
இதை அனைத்தும் பார்த்த நிலா நிரல்யாவிடம் அம்மா ஏன் இப்படி எப்பபாத்தாலும் கவலைப்படுறாங்க…. அவுங்க உடம்புக்கும் இது நல்லது இல்ல…. நீயும் கொஞ்சம் பொறுப்பா இரு…. ஒரு அலைப்பேசில நீ சொல்லி இருந்தா அம்மா இவ்வளவு கவலைப்பட்டு இருக்கமாட்டாங்கள……
நிலாவைப் பார்த்துக்கொண்டே நிரல்யாவும்,அவள் அப்பாவும் நக்கலாக “அவள்அப்படித்தான் “ என்று ஒருவருக்கு ஒருவர் கூரிக்கொண்டே சிரித்தனர்….அது தான் நிலா எங்க அம்மா இயல்பு…. நான் அலைப்பேசி-ல பேசி இருந்தா மட்டும் கவலைப்படாம இருப்பாங்க-னு நினைக்குறீயா??? எங்கமேல இருக்குற அன்பால இப்படி இருக்காங்க…. அத மாத்தவும் முடியாது… அதுதான் என் அம்மாவோட தனித்துவம்…. அதுவும் ஒரு அழகு….ஒரு குழந்தை மாறி….
------------------------------------------------------------------------------------------முற்றும்---------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------
அவள் அப்படித்தான்-பொள்ளாச்சி அபி
“ஒரு பொம்பளையா இருந்துகிட்டு,எத்தனை உசுரைக் கொன்னுருப்பா.., இவளுக்கெல்லாம் இந்த கெதி வராம...?”
“ஆண்டவன் ஏதோ பரிதாபப்பட்டு இதோட வுட்டானேன்னு..,பொழச்சா சந்தோசப் பட்டுக்கட்டும்..!”
நினைவு தப்பிய நிலையில்,மூன்று நாட்களாக அரசு மருத்துவமனையில்,அவசர சிகிச்சைப் பிரிவில் படுத்திருக்கும் காமாட்சியைப் பார்த்து விட்டு,வெளியேறிய பெண்கள்,பேசிக்கொண்டே கடந்ததைக் கேட்ட,கோபாலுக்கு அவர்கள் மீது ஆத்திரமாய் வந்தது.
சாலையைக் கடக்க முயன்ற காமாட்சியின் மீது,இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராமல் லேசாய் மோத,மல்லாந்து விழுந்ததில்,பின் மண்டையில் பலத்த அடி.காமாட்சிக்கு நினைவு தப்பிப் போயிற்று. இதுவரை கண்களை திறக்கவே இல்லை.‘அறுபது வயசுக்காரியான காமாட்சி ஆத்தாவுக்கு..இந்த நெலமை வந்திருக்க வேண்டாந்தான்..விதி..யாரை வுட்டது.?’ கோபாலின் மனசுக்குள் விரக்தி நிறைந்தது.
‘இவங்களுக்கு ஏன் இப்படியெல்லாம் தோணுச்சு.? இவங்க சொல்லிட்டுப் போற மாதிரியா ஆத்தா நடந்துகிச்சு..?’ ஆத்தாவின் நடவடிக்கைகள் குறித்து அவ்வப் போது கோபாலுக்கும் சந்தேகம் வரத்தான் செய்யும்.அதனை அப்போதே கேட்டு விடுவான்.ஆத்தா சொல்லும் பதிலில்,அவனது சந்தேகம் தீர்ந்து விடும். ஆனால், ஊருக்கெல்லாம் போய் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா என்ன..?
அவனிடம் முதன்முதலாக,காமாட்சி மனம்விட்டுப் பேசிய தினம் அவனுக்குள் மீண்டும் சித்திரமாக வந்தது.
“கோபாலு அந்த செவலைக் கிடாயை,முதல்லே கட்டு.மத்த ரெண்டையும் விடிஞ்சப்புறம் பாத்துக்கலாம்..” காமாட்சி ஆத்தா சொன்னவுடன்,துண்டுக் கயிறுகளுடன் தயாராக இருந்த கோபாலு,அந்த ஆட்டின் முன்பாக உட்கார்ந்து, அதன் முன்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கட்டினான். வழக்கமாய் மனிதனின் கையில் கயிற்றைக் கண்டால்,தனது கழுத்தை நீட்டி நிற்கப் பழகியிருந்த அந்த ஆடு,தனது முன்னங்கால்களை அவன் கட்டுவதைக் கண்டு, பரிதாபமாய் விழித்தது.காரணம் கேட்பதுபோல,தனது தலையை அவனது கன்னத்தோடு மேலும்,கீழுமாக உரசியது.நேற்று இரவுகூட பசுந்தழையும்,கழுநீரும் கொடுத்தவன் இப்போது எதற்கு கால்களைக் கட்டுகிறான் என்று நினைத்து பதறியதோ என்னவோ..? மே..மே..என்று வழக்கத்தைவிட பெருங்குரலெடுத்துக் கத்தியது. அதனைப் பொருட்படுத்தாத கோபாலு,பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கட்டி, தரையில் அதனைத் தள்ளிவிட்டு முடிச்சை இறுக்கினான்.
‘தொப்’பென்று விழுந்ததில், ‘ஏதோ விபரீதம்..’ஆட்டிற்கும் புரிந்திருக்க வேண்டும். இடைவிடாத அதன் அலறலில்,அருகாமையில் கட்டிவைக்கப் பட்டிருந்த மற்ற இரண்டு ஆடுகளும் கத்தின.பயம் துல்லியமாய்த் தெரிந்தது. “ஆத்தா..கட்டியாச்சு..!”
தனது உடலின் முன்புறம் முழுவதுமாக மறைக்கும் வகையில், காக்கித் துணி ஒன்றைக் கட்டிக் கொண்டிருந்த காமாட்சி, “இதா வந்துட்டேன்..”வந்தவள் கையில், சாலை விளக்கொளியில் பளபளவென்று ஒரு பகுதியில் மின்னிய கறி வெட்டும் கத்தி இருந்தது.
தரையில் கிடந்த ஆட்டின் உடம்பை,அது திமிற முடியாதபடி,வழக்கம்போல அமுக்கிப் பிடித்துக் கொண்டான் கோபாலு.ஆட்டின் தலைப்புறம் வந்து நின்ற காமாட்சி,கிழக்கு நோக்கி நின்று, கையில் கத்தியுடன் கை குவித்து,ஏதோ முணு முணுத்தாள்.பின்னர் குத்துக் காலிட்டு அமர்ந்தவள்,ஆட்டின் தலையை இடது கையால் அமுக்கிப்பிடித்துக் கொண்டு,அதன் குரல்வளையின் அடிப்புறத்தில் கத்தியை வைத்ததுதான் தெரியும். வலியால் துடித்த ஆட்டின் கடைசிநேர அலறல்.. “க்ளக்..” என்ற சப்தத்துடன் முடிந்தது.ஆத்தாவின் செயலில்,கொஞ்சம்கூட இரக்கமோ,தயக்கமோ,கைநடுக்கமோ இல்லை.காரியத்திலேயே கண்ணாக இருந்தாள்.
ரத்தம் கொப்பளித்து தெறித்த நான்கு விநாடிகளுக்குள்,தலையை தனியே அறுத்து எடுத்த காமாட்சி,அதனை அருகிலிருந்த கல்மேடையில் வைத்துவிட்டு,துள்ளிக் கொண்டிருந்த ஆட்டின் உடலுக்கு கைலாகு கொடுத்தபடியே..உம்..தூக்குடா..” எனச் சொல்ல,அதற்காகவே காத்திருந்த கோபாலும்,சடக்கென்று தூக்கி,தொங்கிக் கொண்டிருந்த கொக்கியில் தலைகீழாக மாட்டினார்கள்.தொங்க விடப்பட்ட ஆடு ஊசலாடாதவாறு, காமாட்சி பிடித்துக் கொள்ள,அதன் கழுத்திலிருந்து ஒழுகும் இரத்தத்தைப் பிடிக்க வாகாக,ஒரு வாளியை எடுத்து வைத்தான் கோபாலு.ரத்தம் முழுதாய் வடிந்தவுடன்தான் தோலை உரிக்கவேண்டும்.
கிழக்கு வெளுப்பதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.இன்று ஞாயிற்றுக்கிழமை.கறி வாங்குவதற்கு வழக்கத்தைவிட நேரத்திலேயே வாடிக்கையாளர்கள் வந்துவிடுவர்.
ரத்தம் முழுதாக வடிந்திருந்தது.தொங்கவிடப்பட்ட ஆட்டின் முன்வந்து நின்ற காமாட்சி,அதன் கழுத்தில் கத்தியை வைத்து,மெதுவாய் நெஞ்சு,வயிறு,கால்கள்.. என கத்தியை இறக்கிக்கொண்டே வந்தாள்.ரத்தமும்,கொழுப்பும் கசியக்கசிய, எங்கேயும் சிறு பிசிறுகூட இல்லாமல்,தோலை முழுதாய் உறித்தெடுத்ததில், அவளது செறிவான அனுபவம் தெரிந்தது.
ஆத்தாவின் கை லாவகத்தை எப்போதும் போல வைத்த கண் விலகாமல் பார்த்துக் கொண்டிருந்த கோபாலு ஆத்தாவின் கையிலிருந்து தோலை வாங்கி, கல்மேடையில் பரத்திப் போட்டான்.ஆட்டின் குடல்,ஈரல்,இதயம்,என தனித்
தனியாக சிந்தாமல் சிதறாமல் அறுத்தெடுத்து ஆத்தா சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள்.
பொதுவாக இரக்கம் மிகுந்தவர்களாயிருக்கும் பெண்கள்,இது போன்று உயிர்களைக் கொல்வார்களா..?அதையும் ஒரு தொழிலாகவே செய்வார்களா..?’அவனுக்கு ஆச்சரியமும், கேள்விகளும் தோன்றத்தான் செய்தன. அதனை வாய்விட்டு, ஆத்தாவிடமே கேட்டுவிட்டான்.
“அடப் போடா..எங்கப்பனும்,என்வீட்டுக்காரரும் சாகுறவரை செஞ்ச தொழிலுதான். இத வெச்சுத்தான் எம் பையனைப் படிக்க வெச்சோம்.கவருமென்ட்டு வேலை வாங்கிக் கொடுத்தோம். அவனுக்கு கல்யாணமும் செஞ்சு வெச்சோம்.
மருமகளுக்கும்,எனக்கும் ஒத்துவர்லே.மாசாமாசம் செலவுக்கு பணம் கொடுக்குறேன் ஆத்தா..ன்னு சொல்லிட்டு,தனிக் குடித்தனம் போன எம்மகன், கொஞ்ச நாள்லே, சோத்துக்கே திண்டாட வெச்சுட்டான்..” சொல்லிக் கொண்டே வந்தவளின் குரலில் திடீரென கோபம் கொப்பளித்தது. “எங்கிட்டேயிருந்து அவனுக்கு மன்னிப்பே கிடையாது.நான் செத்துட்டா,எனக்கு கொள்ளி வெக்கக் கூட,அவன் வரக் கூடாதுன்னு இப்பவும் ஆத்திரமா இருக்குடா கோபாலு.!”ஆத்தா ரொம்பப் பழியுணர்ச்சியோட பேசுற மாதிரி தெரிஞ்சது.
சில விநாடிகள் கழித்து,“காக்கா வளத்துவுட்ட குஞ்சு பெரிசா வளந்த பின்னாடி, எந்தக் காக்கா போயி,எனக்கும் சேத்து தீனி பொறுக்கிட்டு வா..ன்னு சொல்லுது. அதான்..நா பாட்டுக்கு கையிலே சத்தியிருக்கிற வரையிலே கத்தியைப் பிடிக்கலாம்னு இறங்கிட்டேன்.இப்பப் பாரு..எவந் தயவுமில்லாமே என்னாலே பொழைக்கமுடியுது..!” ஆத்தாவின் குரலில்,தன்னைத் தோற்கடிக்க முயன்றவர் களை, தனியாகவே எதிர்த்து நின்று போராடி வெற்றி பெற்ற பெருமிதம்.
“ஏண்டா..இந்தத் தொழிலு உனக்கு பாவமாத் தெரியுதா..? நெனச்சாலும் நெனச்சுக்கோ.. புண்ணியத்தை எப்பிடி சேக்குறதுண்ணு எனக்கும் தெரியும்..” சிரித்துக்கொண்டே சொன்ன ஆத்தாவின் கண்கள் பிரகாசமாக மின்னியது.
அது என்னவோ அப்படித்தான்.பனிரெண்டு வயதுவரை,அநாதையாக சுற்றித்திரிந்த தனக்கும் சேர்த்தல்லவா,இந்த நான்கு வருடங்களாக ஆத்தா சோறு போடுகிறாள். இன்னும் நாலுபேருக்கு உதவி செய்யவும் ஆத்தாவிடம்,இப்போதும் உழைப்பும், சக்தியும் இருக்கிறது.அதற்குப் பிறகு,ஆத்தாவிடம்,அது குறித்து அவன் ஒன்றும் கேட்கவில்லை.
முதல் வாடிக்கையாளர் வந்துவிட்டார்.“பை கொண்டு வந்திருக்கீங்கல்லே.,” ஆத்தாவிடம் இறைச்சி வாங்குபவர்கள் நிச்சயம் பை கொண்டு வரவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.
சதையும்,எலும்புமாக அவர் கேட்டபடி வெட்டியெடுத்து,எடைபோட்ட ஆத்தாவின் கையிலிருந்த தராசின் முள்,கறியிருக்கும் தட்டுப் பக்கம் சாய்ந்து இருக்கும்படி பார்த்துக் கொண்டாள்.வந்தவருக்கு பரம திருப்தி.தாமரை இலையில்,இறைச்சித் துண்டுகளை வைத்து,ஒரு காகிதத்தில் பொதிந்தவள், பொட்டலமாய்க் கட்டுமுன்பு, அதனை அப்படியே கறிமுட்டியில் வைத்து விட்டு, தொங்கிக் கொண்டிருந்த ஈரலிலிருந்து கொஞ்சமாய் வெட்டி,பொட்டலத்தில் போட்டுக் கட்டிக் கொடுத்தாள். “கொழந்தைகளுக்கு ஆத்தா குடுத்துச்சுன்னு,உங்க பொம்பளைகிட்டே சொல்லுங்க..!” அதனை வாங்குவதற்காக தன்னிடம் இருந்த துணிப்பையை விரித்துப் பிடித்துக் கொண்டிருந்தவரின் முகம் முழுக்க சிரிப்பு.ஆத்தாவின் இந்தப்போக்கு யுக்தியா, இயல்பா..என கோபாலுக்கு சரியாகப் புரியவில்லை.
‘ஆத்தா வெட்டி விக்குற கறியிலே,அது மீதி,இது மீதின்னு எதுவுமே மிச்சமாகாது. அப்படியே சிலப்போ எப்பவாவது மிச்சமானா,அது பக்கத்துவீடுகளுக்கு சரிபங்காப் பிரிச்சு,இலவசமாப் போயிடும்.இதுலே நட்டமாகுதுன்னு கணக்கு பாக்காத ஆத்தா, வெளியிடங்களில் இப்படியில்லை.!
அன்றைக்கொரு நாள்,மீதி ஒரு ரூபாய் சில்லறையை,“அப்புறம் தாரேன்..”என்று சொல்லி டபாய்க்கப் பார்த்த,பிரைவேட் பஸ்கண்டக்டரை,கண்டபடி ஆத்தா திட்டியதில், கண்டக்டரின் பரம்பரையே சின்னப்பட்டது.மொத்த ஜனமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க.“சாகப்போற வயசுலே கெழவிக்கு பேச்சைப் பாரு..” யாரோ ஒரு ஆண்,கூட்டத்தில் குரல் கொடுக்க, “யாருய்யா அது,ஆயிரம் வருசத்துக்கு இங்கியே இருக்கறவனா பேசுறது..?”ஆத்தாவின் கேள்விக்கு, நிசப்தம்தான் பதில்.
அதே போலத்தான்,காய்கறிக்காரன் ஒருநாள் சிக்கினான்.“தராசை சரியாப் புடிக்கலை.. குடுக்குற காசுக்கு மரியாதையா பொருள் குடுக்குறதுன்னா குடு.. இல்லேன்னா உன் யாவாரமே வேண்டாம்..”என்று குதித்தாள்.
‘ஆத்தா இப்படியெல்லாம் கணக்குப் பாத்து அங்கலாப்பு படுதே..பணம் சேக்கணும்னு இப்ப ஆசை வந்திருச்சோ..’என்று நினைத்தவனின் எண்ணத்தையும்,ஆத்தா அன்று தவிடு பொடியாக்கினாள். கோபாலுக்கு புதிய சட்டையும்,லுங்கியும் வாங்கித் தருவதற்காக,பொள்ளாச்சியிலேயே பெரிதாயிருந்த துணிக்கடையில்,நல்ல துணி, பொருத்தமான விலை..என்று தேடித்தேடி வாங்கிய ஆத்தா,கல்லாவில் பணத்தைக் கொடுத்துவிட்டு,திரும்ப வாங்கிய மீதிப்பணத்தில் ஒரு நூறுரூபாய் நோட்டு அதிகமிருக்க, அதனைத் திருப்பிக் கொடுத்துவிட்டு,“தம்பி,உங்க அப்புச்சி கஷ்டப்பட்டு சேத்த மொதலை, நீ சீக்கிரம் கரைச்சுருவே போலிருக்கே..”என்று சொன்னதில்,அந்த வாலிபன் வெட்கப்பட்டு குறுகிப்போனான்.
வெளியே வந்தபின் ஆச்சரியம் தாளாத கோபாலு, “ஏன் ஆத்தா,ஒத்த ரூபாய்க்கு சண்டை போடுற நீ,சுளுவா வந்த நூறு ரூவாயை வுட்டுப்புட்டியே..?”
வெடுக்கென்று திரும்பிப் பார்த்த காமாட்சி, “ஏண்டா உம்புத்தி இப்புடிப் போகுது.., உன்னைச் சொல்லி குத்தமில்லே,எப்பவும் சரியா இருக்கோணும்னு நெனக்கிற வங்களைத்தான் இந்த ஒலகம் தப்பானவங்கன்னு சொல்லுது..,ஆனா கோபாலு.., எங்கிட்டே திருட்டுபெரட்டு ஏதும் பண்ணுனேன்னு தெரிஞ்சது. கை,காலு நொண்டீனு கூட பாக்கமாட்டேன்..ஈவு இரக்கமில்லாமே தொரத்திருவேன்” வெட்டுக்கத்தியின் கூர்மை மின்னும் கண்களில் ரௌத்திரம் பொங்க,காளியாத்தா மாதிரி கர்ஜித்தாள்.
“மன்னிச்சுரு ஆத்தா..அநாதியா வந்த எனக்கு,நாலு வருஷமா ஆதரவா இருக்குற உங்கிட்டேப்போய் நான் அப்படியெல்லாம் பண்ணுவேனா ஆத்தா.. சத்தியமா அப்பிடியொரு நெனப்புகூட எனக்கு வராது ஆத்தா..” எப்பவுமே இப்படித்தான், ஒவ்வொருத்தருகிட்டேயும் ஒவ்வொரு மாதிரி நடந்துக்கிற ஆத்தா நல்லவளா, கெட்டவளான்னு முடிவுக்கே வரமுடியலை..விடுகதை மாதிரி மாறிப் போயிட்டாளே..!’
‘இவகிட்டே அடைக்கலம் தேடிவந்தப்போ..தனியாளா இருந்த ஆத்தா முகத்துலே எப்பவும் ஒரு சோகக் களை இருந்துட்டேயிருக்கும்.ஆனா..இப்ப கொஞ்சநாளா, எப்பவும் சுறுசுறுப்போட, ஏதோவொன்னை சாதிச்சுட்ட மாதிரி மொகத்துலே பெருமை தெரியுதே.. என்னவா இருக்கும்..?’ தனக்கேற்பட்ட சந்தேகத்தை நிதானமாக கேட்க வேண்டும் என்று நினைத்திருந்த போதுதான்,ஆத்தா விபத்தில் சிக்கி,இங்கே வந்து படுத்துக்கொண்டிருக்கிறாள்.ஆத்தா சீக்கிரம் கண்விழிக்க வேண்டும். காமாட்சி படுத்திருந்த கட்டிலின் ஓரமாக அமர்ந்திருந்தான் கோபாலு.
“ஏம்ப்பா..கோபாலுங்கிறது நீதானா..?” வார்டுக்குள் வந்த நர்ஸ்,அவனைப் பார்த்துக் கேட்க,ஆமாம் என்று அவன் தலையாட்ட,“உன்னை பெரிய டாக்டரு கூப்பிடுறாரு..” என்றபடியே அவள் கடந்து சென்றாள்.
டாக்டரின் அறைக்கு முன்சென்று அவன் தயங்கி நிற்க, “யாரு..கோபாலா..?”
“ஆமாங்கய்யா..”
“நீ காமாட்சியோட மகன்தானே..?”
“இல்லைங்கய்யா..ஆனா,மகன் மாதிரி ஆத்தா என்னையப் பாத்துகிச்சு.!”டாக்டர் எதையோ புரிந்து கொண்டவராக,“அந்தம்மாவோட மகனோ,மகளோ இருந்தா வரச்சொல்லுப்பா..!”
“சரீங்கய்யா..”என்று சொல்லிவிட்டுத் திரும்பியவனுக்கு,‘சண்முகத்தை கூப்பிட்டுச் சொன்னா அவன் வருவானா..? ஆத்தா கண்ணு முழிச்சபின்னாடி,அவனை ஏண்டா கூப்பிட்டேன்னு திட்டுமா..? பெரிய டாக்டரு சொல்லும்போது,முடியாதுன்னு எப்படி சொல்றது..? என்னவோ போ..,நடக்கறது நடக்கட்டும்.’ சண்முகத்துக்கு போன் செய்துவிட்டு,ஆத்தா முக்கியமான சொந்தக்காரருன்னு குறித்து வைத்திருந்த இன்னொரு எண்ணுக்கும் தகவலைச் சொல்லிவிட்டு வந்தான்.
அரைமணி நேரத்திற்குள் சண்முகமும்,மற்றொருவரும் தனித்தனியே வந்து விட்டனர்.இருவரும் டாக்டரின் அறைக்குள் சென்று அரை மணிக்கும் மேலாகப் பேசிக் கொண்டிருந்தனர்.டாக்டர் ஏதேதோ பேப்பர்களைக் காட்டி,காட்டிப் பேசிக் கொண்டிருந்தார்.சண்முகம்,அவ்வப்போது அழுகையை கட்டுப்படுத்துவதும், சமாளிப்பதும் தெரியவந்தது. ஏதாவது பெரிய ஆபரேசனா இருக்குமோ..?
வெளியே வந்த இருவரும்,தங்களுக்குள் கொஞ்சநேரம் பேசிக் கொண்டே, கோபாலை நோக்கி அருகில் வந்தனர்.“வக்கீல் சார்,பையன்கிட்டே நீங்களே விவரத்தை சொல்லுங்க..”என்றபடியே,சற்று தள்ளி நின்று கொண்டான் சண்முகம்.
“தம்பி..ஆத்தா இருக்குற வீட்டையும்,பேங்க்லே இருக்கற ரெண்டு லட்ச ரூபாயை யும் உம்பேர்லே ஆத்தா எழுதி வெச்சிருக்கு..!”
“அதெல்லாம் எனக்கெதுக்கு சார்.? ஆத்தாவுக்கு ஏதாவது ஆபரேசன் பண்ணனுமின்னா எடுத்து செலவு பண்ணுங்க..!”
“அது இப்ப முடியாது தம்பி.ஆத்தாவுக்கு இதுக்கு முன்னாடியே ஒருதடவ நெஞ்சு வலி வந்தப்போ, இங்கதான் வந்து பாத்துட்டுப் போயிருக்கு.அப்பவே,தனக்கு ஏதாவது ஒடம்பு முடியாம செத்துப் போயிட்டா..தன்னோட ஒடம்புலேயிருந்து, கண்ணு,கிட்னி,இதயம்,கல்லீரலுன்னு என்னென்ன உறுப்பெல்லாம் எடுக்க முடியுமோ,அதை எல்லாத்தையும் எடுத்து, மத்தவங்களுக்கு பொறுத்திடுங்கன்னு.. எழுதிக் கொடுத்திருக்கு.மிச்ச ஒடம்பையும் கவருமென்ட் ஆசுபத்திரிக்கு தானமா கொடுக்கச் சொல்லிருக்கு தம்பி..!”
“அதெல்லாம் செத்தப்புறம்தானே செய்யணுமின்னு சொல்லீருக்கு.அதுக்கு இப்ப என்ன..?”
“ஆத்தா செத்துப் போச்சு..! மூளைச்சாவுன்னு சொல்லுவாங்க..!”
புரியாதவர்களுக்கு புதிராய் இருந்த ஆத்தா,புரிந்தவர்களுக்கு புனிதமாகியிருந்தாள். எப்போதும் அவள் அப்படித்தான்..!
-----------பொள்ளாச்சி அபி ------------
------ ------------ ---------- ----------------
----------------------------------------------------------------------------
அவள் அப்படித்தான் -சாந்தி .சொ
அலுவலகம் முடித்து அவரவர் வீடு திரும்பும் நேரம் மாலை ஆறு மணி சொச்சம். பேருந்து நிறுத்தத்தில் ஒரே கூட்டம் அலை மோதி நின்றது. தான் ஏறி செல்ல போகும் பேருந்து வருகிறதா என்று தொலை நோக்கில் தலையை சற்றே உயர்த்தி பார்க்கும் கூட்டத்தில் மாலினியும் ஒருத்தி. அவள் இல்லம் செல்வதற்கான பேருந்து வருவதைக் கண்டு சற்றே நகர அவளை இடித்துக் கொண்டு பேருந்தைப் பிடிக்க முன்னேறியவனை
"எரும மாடே கண்ணு தெரியலையா உனக்கு" எரிச்சலுடன் கத்தினாள் மாலினி
மாலினியின் கூச்சலை சட்டை செய்யாதவனாய் பேருந்தில் ஏறி தன்னை திணித்துக் கொண்டான். அவன் இடித்துச் சென்ற தோள் பட்டையில் வலி ஏற்பட்டு தேய்த்துவிட்டுக் கொண்டே பேருந்தினில் ஏறி பெண்கள் இருக்கையின் பக்கம் ஒரு ஓரமாக நின்று கொண்டாள். அருகில் ஒருவன் கையை தூக்கிப் பிடித்த திசையிலிருந்து அருவருக்கத் தக்க கெட்ட வாடை வீசிக் கொண்டிருந்தது.
உவ்வே... உமட்டி எடுக்க முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள். எங்கிருந்து ஏறியதோ அவ்வளவு கும்பல் அந்த பேருந்தில். அவளை நெருக்கி நெருக்கி அவள் நடக்காமலேயே முன்னோக்கி நகர்த்தப் பட்டாள். பின் கழுத்துப் பகுதியில் அருவருப்பான உரசல். சவரம் செய்யப் படாத முகத்தை கொண்டு ஒருவன் அவள் கழுத்தினில் பஸ் ஓட்டத்தில் தெரியாமல் பட்டது போல் வேண்டுமென்றே உரசி குளிர் காய்ந்து கொண்டிருந்தான். இதை உணர்ந்தவளாய் கோபத்துடன் வேகமாக திரும்ப எத்தனிக்கையில் அவள் தலை அவனுடைய மோவாய் பிரதேசத்தை தாக்கி இருக்க வேண்டும்.
"அ..ம்..ம்..மா…" முணகியபடியே அவன் மோவாயைத் தடவிக் கொண்டான்.
தடி மாடே. அரிப்பெடுத்தா எங்காவது சுவர் இருந்தா உன் முகத்த அதுல வெச்சி தேச்சுக்கறது தானே. பொம்பளைங்க முதுகும் கழுத்தும் தான் கெடச்சுதா உனக்கு??" . கத்திக் கொண்டே தன் கைப்பைக்குள் துழாவி ப்ரஷ் ஒன்றை எடுத்தாள் மாலினி. மெல்லிய நார் போன்ற கம்பிகளால் ஆனது. கழிவறையை சுத்தம் செய்யும் ப்ரஷ் சிறிய வடிவில் இருந்தது.
"இந்தா... அரிப்பு போக நல்லா தேய்த்துக் கொள். பஸ்ஸை விட்டு இறங்கும் முன் வாங்கிக் கொள்கிறேன்.” ரகளை செய்பவர்களுக்கென்றே இப்படியான சில பல ஆயுதங்களை எப்போதும் அவள் கைப் பைக்குள் வைத்துக் கொள்வதுண்டு..
"என்ன ரொம்ப ஓவரா பேசறே. தெரியாமத்தான் பட்டுடிச்சி. நான் வேணுமின்னே செய்யல." வேறு எதுவும் சொல்லத் தெரியாதவனாய் செய்த தவறு வெட்ட வெளிச்சம் ஆனதில் அவமானம் பிடுங்கித் தின்ன ஆண்கள் இருக்கைகள் பக்கம் நகர்ந்து கொண்டான்.
"விடாதீங்க இன்னும் நல்லா கேளுங்க. இது மாதிரி நடந்துக்கரவங்கள சும்மா விடக்கூடாது" இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த ஒரு பெண்மணி இப்படி கூறவும் மாலினிக்கு இன்னும் கொதிப்பேறியது.
"ஓ……." மத்தவங்களுக்கு ஒண்ணுன்னா நீங்க கேக்க மாட்டீங்களோ?. உங்களுக்குன்னு பிரச்சினை வந்தாத்தான் கேட்பீங்களோ?? இதுனாலதான் கேவலமான ஜென்மங்கள் பெண்கள உரசறதும் கேலி செய்யறதும் கற்பை சூறை ஆடுறதும் நாட்டுல பெருத்துப் போச்சு. மத்தவங்களுக்கு நடக்கும்போது நமக்கென்ன வம்புன்னு பாத்துக்கிட்டு கெடந்தா நாளைக்கு உங்களுக்கும் இது போலதான் நடக்கும். அப்ப யாரும் உங்களுக்காக பேச வர மாட்டாங்க. அந்த இடத்துல நான் இருந்தா என்னைத் தவிர.”
மாலினி இப்படி கோபத்துடன் கத்தவும் அங்கிருந்த பெண்களுக்கு அப்போதுதான் உரைத்தது. "அந்த ஆள நாலு சாத்து சாத்தறேன் பாரு. மானம் கெட்டவன். இருக்கையிலிருந்து எழுவதும் உட்காருவதுமாய் அவனை அடிக்க திமிருபவள் போல் எகிறிக் கொண்டிருந்தாள் ஒருத்தி.
"இவ்வளவு பேசறோம் சூடு சொறன இல்லாம இன்னும் நிக்குது பாரு இதுவும் ஒரு ஜென்மம்னு" நின்று கொண்டிருந்தவர்களில் ஒருத்தி இப்படி கத்தவும், இதற்கு மேலும் பிரயாணிப்பது உசிதமில்லை. இப்படியே தொடர்ந்தால் அடி கூட விழும் என்ற பயம் வந்துவிட அடர்ந்த அந்த கும்பலை கடந்து அடுத்து வந்த பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொண்டான் அந்த உரசல் மன்னன்.
"என்னம்மா அங்க ஒரே சத்தம்" கண்டக்டர் கேட்டுக் கொண்டே வர---- “வாங்க.. கண்டக்டர் சார். கிளைமாக்ஸ் காட்சிக்கு சரியா வந்துட்டீங்க.”
அட நீயாம்மா. இன்னிக்கி எவன் மாட்டுனான் உன்கிட்ட. போன வாரம்தான் ஒருத்தன ஹேர் பின்னால குத்தி ஓட வெச்சே. கண்டக்டர் இப்படிக் கூறவும் "ஏன் அப்படி செஞ்சேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும் இல்லையா"?? நான் என்ன வேணும்னா அப்பிடி செஞ்சேன்?? சொல்லுங்க...."
கோபக் குழைவோடு அதே சமயத்தில் சற்று தணிந்த குரலில் மாலினி இப்படிக் கேட்கவும்,
" நீ செஞ்சது தப்பில்லேம்மா. தப்பே... இல்ல.... உன்ன மாதிரி இப்படி தைரியமா இருந்துட்டா பஸ்ல தடிப் பசங்க செய்யற ரகள கொஞ்சமாவது குறையும். நான் உன்ன ஒன்னும் கேட்க மாட்டேன். நடத்து... நடத்து... கையை ஆட்டிக் கொண்டே தன் இருக்கையில் கண்டக்டர் அமரவும் மாலினி இறங்க வேண்டிய இடம் வரவும் இறங்கிக் கொண்டாள்.
இறங்கியவள் அங்கே சாலையோரம் நின்றிருந்தவன் அருகில் சென்று அவ்வளவு பேர் முன்னிலையில் அந்த இளைஞனின் கைகளை இறுகப் பற்றிக் கொள்ளவும் அவளோடு அதுவரையில் பயணித்து அவள் பின்னால் நடந்து வந்துகொண்டிருந்த ஒருவனுக்கு அவளது செய்கை கடுபேற்றியது.
"என்னடா இவ. பஸ்ல கழுத்துல முகம் பட்டத்துக்கு அவன அந்த காட்டு காட்டுனா.. இப்ப என்னடான்னா இவ்ளோ பேர் இருக்க எடத்துல அப்படி என்ன அவன் கைய புடிச்சிக்கிறா?? என்ன பொண்ணுடா இவ. புரிஞ்சிக்க முடியலே". மாலினியை தொடர்ந்து வந்தவன் கடுப்புடன் அவன் நண்பன் கார்த்தியிடம் கூறும் நேரத்தில், அந்த கண் தெரியாதவனை பேருந்து நெரிசலான சாலையை கடக்க மாலினி உதவிக்கொண்டிருந்தாள்.
"நீ புரிந்து கொண்டது அவ்வளவுதான்" அவள எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும்.
"உனக்கு ரொம்ம்ம்ம்பப் புரியுமோ" இப்படி விஷமமாய் அவன் கேட்கவும், "ம்ம்ம்ம்ம்". என்ற வார்த்தையுடன் கார்த்தியின் இதழ்களில் குறு நகையோடியது. அந்த குறு நகையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது.
------------------------------------------------------------------------
அவள் அப்படித்தான்-சியாமளா ராஜசேகர்
கார்மேகம் திரண்டிருந்தது வானத்தில் ! சில்லென்று குளிர்காற்று வீசியது . சடசடவென தூர
ஆரம்பித்து சற்று நேரத்தில் ஜோராக கொட்டியது மழை . பவானியும் அவள் அம்மா சாரதாவும் ஜன்னலைத் திறந்து வைத்து மழையை ரசித்துக் கொண்டிருந்தனர் . பவானி கைகளை வெளியே நீட்டி மழை நீரில் விளையாடிக் கொண்டிருந்தாள் .
"என்னடி இது ! சின்னப் பிள்ளையாட்டம் ....?" செல்லமாக மகளின் கன்னத்தைத் திருகினாள்
சாரதா .இவர்கள் இருவரையும் எதிர்புறமிருந்து ஒருபெண் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் .
"அம்மா ! அது யாரும்மா ....நம்மளையே பாத்திட்டிருக்கிறது ?"
" அதுவா ...? அந்த பொண்ணு கொஞ்சம் மென்டல் போல ....வட நாட்டுக்கார பொண்ணு மாதிரி தெரியுது ....பேசினா ஒன்னும் பேசமாட்டேங்குது ....!"
"நான் ஒரு நாளும் இந்த பொண்ண பாத்ததில்லையேம்மா ....?"
நன்றாக உற்று கவனித்தாள் . நல்ல உயரம் . சிவந்த நிறம் . ஆண்களுக்குப் போல் தலையில்; கொஞ்சம் முடி . அதில் உச்சிக்குடுமி போட்டிருந்தாள் .பார்க்கவே வேடிக்கையாய் இருந்தது . பாவாடை கட்டி அதன் மேல் ஷர்ட் போட்டு துப்பட்டாவை பக்கவாட்டில் முடிச்சு போட்டு வைத்திருந்தாள் .தோளில் ஒரு ஜோல்னா பை .
"இந்த பொண்ணு வீடு எங்கம்மா ? மழைக்கு ஒதுங்கி நிக்குதா ?"
"ஒண்ணும் தெரியலடி ... நீ வேலைக்கு காலையில கேப்ல போனா நைட் தான் வர்ற .... ரெண்டு வாரமா இந்த பொண்ணு இங்கதான் இருக்கு . பாபா கோயில் -ல பிரசாதம் வாங்கி சாப்பிட்டுட்டு ....அங்க வாசல் திண்ணையிலயே படுத்துக்குது ...! பேர் கேட்டாக்கூட சொல்லல ...யார் வம்புக்கும் போகாது ....அமைதியா இருக்கும் .....!!"
பவானி அந்த பெண்ணைப் பார்த்து மெல்ல புன்னகைத்தாள் .அந்தப்பெண் மெதுவாக தலையைத் திருப்பி வேறு பக்கம் பார்ப்பதுபோல் பாவனை செய்தாள் .
"அம்மா ....அது தலைல குடுமியப் பாருங்களேன்...... கொழந்தையாட்டம் .....அத பேபி ன்னு கூப்பிடலாம்மா ....!! என்னம்மா இப்படி லிப்ஸ்டிக் அப்பி வச்சிருக்கு ....அதுவும் மிட்டாய் ரோஸ்
கலர்ல ...காமெடியா இருக்கும்மா ...! என் சுடிதார் எத்தன இருக்கு ....எடுத்து கொடுக்கறதுதானம்மா ....?"
" நான் குடுத்தேண்டி .... பாட்டம் மட்டும் போட்டு அதுமேல ஷர்ட் போட்டு சைட்ல துப்பட்டாவக் கட்டிக்கிட்டா .....சிரிப்பு வந்தாலும் பாவமா இருந்துச்சு ! அவ அப்படித்தான்டி ! நம்ம தெருல எல்லாரும் சொல்லியாச்சு ...கேக்கல...யார் சாப்பிடக் கொடுத்தாலும் வாங்கமாட்டா ...அதோ மாட்டிருக்காளே !
அந்த ஜோல்னா பை ....அது அவ தோள்ல இருந்து கீழ எறங்கவே எறங்காது ....அப்படி கனமா என்னதான் வச்சிருப்பாளோ தெரியல ....!!"
தினமும் ஆஃபிஸ்க்கு போகும்போதும் வரும் போதும் பவானியின் விழிகள் பேபியை தேடும் .
பார்த்துவிட்டால் டாட்டா காட்டுவாள் . அன்று சனிக்கிழமை .ஆஃபிஸ் லீவு !
" அம்மா எனக்கு இந்த டாப்ஸ் வேண்டாம்மா .... ரொம்ப பெருசா இருக்கு ...இத பேபிக்கு கொடுத்திடவா ? "ஏய் ! இது புத்தம் புதுசுடி....வேற எதாச்சும் கொடு ....! " இது அவளுக்குதான்ம்மா ...!" " சரி ...போ...!"
பால்கனியில் நின்று எட்டிப் பார்த்தாள் பவானி . தெரு முனையில் அவள் நிற்பது தெரிந்தது.
மேலிருந்தே பவானி கையை வேகமாகத் தட்ட மெல்ல மேலே பார்த்தாள் பேபி.
" இங்க வா !" கையை ஆட்டிக் கூப்பிட்டாள் பவானி .கனமான ஜோல்னா பையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தாள் .... மிரண்ட குழந்தை வருவது போல் பைய பைய நடந்து வந்தாள்.
அதே குடுமி ! லிப்ஸ்டிக் ...! அதே டிரஸ் !
"பவானி !நீ என்ன கொடுத்தாலும் அவ போடுறபடிதான் போட்டுப்பா ..... உன்னால மாத்த முடியாது .... அவ ...அப்படிதான் !!"
"என்னம்மா நீங்க ....அவ அப்படித்தான் ....அவ அப்படிதான்னு சினிமா டைட்டில் மாதிரி சொல்லிட்டிருக்கீங்க ....பக்குவமா சொன்னா கேட்டுப்பா பாருங்க ...!! என் வயசுதான் இருக்கும் ....பாவம் இப்படி தெருல அனாதையா திரியுறா..... இவளுக்கு ஏதாவது பிராப்ளம் வந்ததுன்னா ....?"
பவானிக்கு மனம் வலித்தது .
"பேபி ! கிட்ட வா .... இந்தா இந்த டிரஸ் போட்டுக்கோ நல்லாருக்கும் !" தலையை ஆட்டி மறுத்தாள். சாப்பிட்றியா ...? தலையை ஆட்டினாள். ஏன் இப்படி குடுமி போட்டிருக்க ? அப்படியே சீவிவிட்டா நல்லாருக்கும் ...... பலமாக தலையாட்டினாள் .
" ஏய் ! அவ அப்படித்தான் ....நம்ம பிளாட்ஸ்ல எல்லாரும் எப்படி எப்படியோ சொல்லிப் பாத்தாச்சு ....விட்டுடுடி ....அவள தொந்தரவு பண்ணாத ...!!"
"சரி.... சரி ... போயிட்டு வா ....! டாட்டா காட்டினாள் பவானி . இதழோரம் புன்னகை எட்டிப் பார்த்தாலும் உம்மென்று மெல்ல நடந்து சென்று விட்டாள் ."
"இந்த வயசுல இந்த பொண்ணு இப்படி தனியா அலையுதே ... துஷ்டங்க கண்ல பட்டா என்ன ஆகும் .... பாபா ...! நீங்கதான் துணையா இருக்கணும்....!!" வேண்டிக் கொண்டாள் .
அன்று ஆபீஸ் செகண்ட் ஷிப்ட் முடிந்து கேப்- ல் வரவே நள்ளிரவு ஒரு மணியாகிவிட்டது .
மெயின் ரோடிலிருந்து பள்ளம் தோண்டியிருந்ததால் டிரைவர் அங்கேயே வண்டியை நிறுத்தினார் . "வாம்மா வீட்டு வரைக்கும் கொண்டு வந்து விட்டுடறேன்....!!"
"வேண்டாம்ணா .... நல்ல வெளிச்சமாதானே இருக்கு ...நானே போயிடறேன் ....நீங்க கெளம்புங்க !"
ஆள் அரவமே இல்லை .சிறிது தூரம் தான் நடந்திருப்பாள் .குடித்துவிட்டு வந்த நான்கு பேர்
அவளை சூழ்ந்து கொண்டு , ஒருவன் வாயைப் பொத்த ... மற்றவர்கள் காலைப் பிடித்து தூக்கி இருட்டுக்குள் சென்றனர் .கைகால்களை திமிறி எட்டி உதைத்தாலும் பவானியால் ஒன்றும் பண்ண முடியவில்லை . பீதியில் உறைந்தாள் .பாபா ....பாபா.... அவள் மனம் அழுதது . அவளை குண்டுக்கட்டாய் தூக்கிக்கொண்டுபோய் கோயிலுக்குப் பின்னால் புதருக்கருகில் போட்டு நாலு பேரும் சேர்ந்து அவளைக் கெடுக்க முயல ..... எங்கிருந்தோ வேகமாக வந்த பேபி தன் ஜோல்னா பையை வீசி சுழற்ற .... நான்கு பேர் மீதும் அந்த அடி இடிபோல் இறங்கியது . ஏற்கனவே போதையில் இருந்த ஆசாமிகளுக்கு அந்த திடீர் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை .வெறி பிடித்தவள் போல் சுழற்றி சுழற்றி அவர்கள் முகங்களை குறி வைத்து தாக்கினாள் . டங் டங் ...என்று சத்தம் ... பவானி சுதாரித்து எழுந்து கொண்டாள் . வாங்கிய அடியில் தாக்கு பிடிக்க முடியாமல் ஓட்டம்பிடித்தனர் நால்வரும் !
பவானி .....பேபியைக் கட்டிக் கொண்டாள் .பேபி பவானியை கைபிடித்து வீட்டிற்கு அழைத்து
வந்தாள் .செல்போனில் அம்மாவிடம் விவரம் சொல்ல ....அதற்குள் சாரதா வெளியே இறங்கி வந்து விட்டாள் . பேபியை கட்டிப்பிடித்து முத்தமிட்டாள். வாம்மா உள்ள வா.! ம்ஹூம் ....மறுத்தாள் பேபி .பவானி அவள் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாய் வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள் . பேபி கைகளில் பல கீறல்கள் .... அடிக்கும் போது அவள் முகத்திலும் பட்டு காயம் ...!
ஓவென்று அழுதாள் பவானி . "அம்மா இந்த பொண்ணை பத்திதான் நான் கவலை பட்டேன் ....தனியா இருக்கே என்ன ஆகுமோன்னு ..... ! ஆனா நான் நெனச்சது எனக்கு நடந்து இந்த பொண்ணு என் மானத்த காப்பாத்திருக்கு .....அம்மா ....இந்த பொண்ணுக்கு பைத்தியம் இல்லம்மா
டிரீட்மெண்ட் கொடுத்தா சரியாயிடும் .... எனக்கு களங்கம் வராம காப்பத்துன இவளுக்கு காணிக்கையா நான் செய்வேம்மா ......"
பேபி முகத்திலிருந்த ரத்தக் கோடுகளை கழுவி துடைத்துவிட்டு நீபாசல்ஃப் பவுடர் போட்டு
வற்புறுத்தி வேற டிரஸ் போட்டு பெட்டில் படுக்க வைத்தார்கள் .படுத்த சற்று நேரத்துக்கெல்லாம் தூங்கிவிட்டாள் பேபி .அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அருகில் ஒரு சேரில் பவானி ! அவள் டைட்டாக ரப்பர்பேண்ட் போட்ட குடுமியை மெல்ல உருவி தலைமுடியைக் கோதிவிட்டாள் . " இவ மட்டும் வரலைன்னா .....இந்நேரம் நசுங்கி, செதஞ்சி ,சின்னாபின்னமாயிருப்பேன் .... உயிரோட இருந்திருப்பேனாங்றதே சந்தேகம்தான் ....... " மனதுள் ஆயிரம் எண்ணங்கள் ஓட ..... அப்படியே தூங்கிவிட்டாள் சேரில் அமர்ந்தபடி ....!!
திடீரென்று முழிப்பு தட்ட கட்டிலில் பேபியைக் காணவில்லை . அம்மாவைத் தட்டி எழுப்பி
பேபி எங்கம்மா ....? ......
தலையில் உச்சிக்குடுமி ,மிட்டாய் ரோஸ் கலரில் லிப்ஸ்டிக் அப்பி, ஜோல்னா பையை மாட்டியபடி ...... அப்பிராணியாய் நின்றவளைப் பார்த்ததும் ..... எல்லாவற்றையும் மறந்து சிரித்தாள் பவானி . சாரதா பவானியை பார்க்க, அம்மா ! " அவள் அப்படித்தான் ! " இருந்திட்டுப் போகட்டும் .... ஆனா என் கல்யாணத்துக்கு இன்னும் மூணு மாசம் இருக்கு .... அதுக்குள்ள இந்த பொண்ணுக்கு நல்ல
டிரீட்மெண்ட் கொடுத்து ....உங்களுக்கு துணையா வச்சிட்டுதான் நான் சிங்கப்பூர் போவேன் என் மாப்பிள்ளைகூட .....பேபி இனிமே என் தங்கச்சிம்மா ...!!
இதெல்லாம் ஒன்றும் கண்டுகொள்ளாமல் வெளியே போவதிலே குறியாய் இருந்தாள் பேபி ....!!
-------------------------------------------------------------------------
அவள் அப்படித்தான்-உமர் செரிப்
"சின்ன வயசுல இருந்தே அவ அப்படித்தான்....தெரியாதா உங்களுக்கு...?"
"இப்படி சொல்லி சொல்லி என் வாய அடைச்சிடு....ம்ம்....தாயும் மகளும் சேர்ந்து என்னமோ செய்யுங்க.....!"
"நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க....நான் பாத்துக்கிறேன்.....எல்லாம் நல்லபடியா நடக்கும்....."
"சரி...சரி...அந்தப் பையனை புதன்கிழமை வந்து என்னைய பார்க்கச் சொல்லு...அப்புறம்.... ராத்திரி நான் வர்றதுக்கு நேரமாகும்.....என்னைய எதிர்பார்த்துக்கிட்டு இருக்காத....சாப்பிட்டுட்டு படு.."
"சரிங்க.....!"
(அப்பா வெளியில் போனதை மறைந்திருந்து பார்த்துவிட்டு....ஓடி வந்து பின்புறமாக அம்மாவை கட்டிப் பிடித்து.....முத்தமிட்டு )
"ம்மா.....அம்மான்னா அம்மாதான்....."
"கீதா.....அதெல்லாம் இருக்கட்டும்....வர்ற புதன்கிழமை அரவிந்த்..அப்பாகிட்ட பேசி சம்மதிக்க வக்கிறதுலதான் இருக்கு கீதா.....!"
"நீ ஒண்ணும் கவலைப்படாதேம்மா....நான் பாத்துக்கிறேன்.....எல்லாம் நல்லபடியா நடக்கும்.....!"
"ஏண்டி....நான் சொன்னது எனக்கேவா.....?"
"உன் மகள் உன்னைய போலதானம்மா இருப்பேன்....ஹா..ஹா.."
********************************************************
(நான்கு மாதங்களுக்குப் பின்....)
"என்னமா...மாப்பிள என்ன சொல்றாரு.....?"
"அது ஒண்ணுமில்லப்பா....எல்லையில சண்டைவர்றா மாதிரி இருக்குறதுனால உடனே வரச் சொல்லி ராணுவத்துல இருந்து அழைப்பு வந்திருக்குப்பா...."
"ஆமா மாமா.....நான் உடனே போயாகனும்.....!"
"ம்ம்....அம்மா கீதா....இதுக்குதான் நான் அன்னைக்கே சொன்னேன்.... ராணுவத்துல இருக்குற மாப்பிள்ளை வேண்டாம்மான்னு......"
"அப்பா.....என்னப்பா பேசுறீங்க...?நாட்டுல இருக்குற கோடானு கோடி மக்களையும் எதிரிங்ககிட்ட இருந்து பாதுகாக்கிறது எவ்வளவு பெரிய உழைப்பு,தியாகம்,பெருமை....அதப் புரிஞ்சுக்காம......"
"நான் சொன்னா நீ கேட்கவா போற...அதுக்கு மேல உன் இஷ்டம்!!"
********************************************************
(ஒரு மாதத்திற்குப் பின்....)
"அகில இந்திய வானொலி நிலையம்..செய்திகள் வாசிப்பவர் கண்ணன்.முக்கிய செய்திகள் மத்தியில் புதிய அரசு இன்று ஆட்சி அமைக்கிறது.இந்திய எல்லையில் நடைபெற்ற போரில் மூன்று இந்திய வீரர்கள் உயிர் நீத்தனர்.ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்............ உயிர் நீத்த வீரர்கள் விவரம்:நெல்லையை சேர்ந்த ரவிகிருஷ்ணன்...திருச்சியை சேர்ந்த அரவிந்த்..........."
"அய்யய்யோ...போச்சு...எல்லாம் போச்சு.....அம்மா கீதா..."
(அந்த அலறலின் நாடித்துடிப்பு குறைய ஆறு மாதங்களாகியது.)
********************************************************
"மன்னிச்சுகிடுங்க....தாயோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு...எங்களால பிள்ளையை மட்டுந்தான் காப்பாத்த முடிஞ்சது...நாங்க முடிஞ்சத செஞ்சுட்டோம்...அதுக்கு மேல ஆண்டவன்தான் காப்பாற்றனும்....போய் பாருங்க "
"கீதா...கீதா....அம்மா...கீதா....கண்ண திறந்து பாரும்மா...மாப்பிள அரவிந்தே பிறந்து வந்தது போல இருக்கும்மா...பாரும்மா...கீதா...."
(மெதுவாக கண்ணை திறந்து தன் குழந்தையை பார்த்த கீதா...அப்பாவை நோக்கி...)
"அப்பா.."
"சொல்லுமா...!"
"இவனை ஒரு சிறந்த ராணுவ வீரனா ஆக்கி..என் கணவரைப் போல கடைசி மூச்சு வரைக்கும் நாட்டுக்காக போராடக் கூடிய ஒருவனாக இவனையும் ஆக்கனும்பா...செய்வீங்களாப்பா ....?"
"என்னமா இது....?"
(மனைவியின் பக்கம் பரிதாபமாய் பார்த்தார் கீதாவின் அப்பா....அவளோ அழுதுக் கொண்டே... )
"சரின்னு சொல்லுங்க...உங்களுக்கு தெரியாததா... சின்ன வயசுல இருந்தே அவள் அப்படித்தான்...பிடிவாதக்காரி..."
"சரிம்மா....."
(எல்லையில் சென்று சண்டையிடா விட்டாலும்...நாட்டுக்காக மகனை கொடுத்த திருப்தியுடன் வீர இறப்பெய்தினாள்.. கீதா.....அவள் அப்படித்தான்... )
-------------------------------------------------------
அவள் அப்படித்தான்- கவிஜி
இரவு தன் கண்களை நன்றாக திறந்திருந்தது, தன் சிறகுகளைத் திறந்திருந்தது போலவே. சாலையெங்கும் பகலின் சாயல், தன்னை ஒரு இளைப்பாரலாய் அணத்திக் கொண்டிருந்தது. இரவு, எதையோ தேடுவதாகப் படுகிறது. அமரந்தா, தன் இருசக்கர வாகனத்தில், இலைமறை காயாய், விசும்பலைப் பார்வையாக்கி வெறித்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தாள். இரவின் தேடலுக்குள் தொலைவது, அவளின் தேடலாக இருக்க வேண்டிய சூழலாய் ஒரு புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது அவளின் ஆழ் மனம். உடல் முழுக்க பூத்திருந்த வியர்வைத் துளிகளில் நள்ளிரவைத் தொடும் வெளிர் காற்று, ஒத்தடம் தந்து பறித்துக் கொண்டிருந்தது அவளின் பகலின் இயந்திரத்தை.....
அவள், வண்டியை இன்னும் வேகமாக்கினாள். காற்றோடு குழல் சொல்லும் குதியாட்டத்தில் நாலரை மணிக்கு எழுந்து விடும், தொண்டையடைக்கும் து(தூ)க்கம், தப்பியோடிக் கொண்டிருந்தது. நீண்டு, பின் சரிந்து, பின் சரியாகி, பின் வளைந்து நெளியும் சாலையில், வெறி கொண்ட சர்ப்பமென, விழி மூடா கோபங்களைத் துப்பிக் கொண்டே சென்றாள்.. சாலையோரக் கடைகளின் தூக்கம் கதவடைத்து மூச்சு விட்டுக் கொண்டிருந்தன.
பெருமூச்சு விட்டாலும் தேநீர் போட்டு, இட்லி அவித்து, மதியத்திற்கு சாதம் வடித்து, அதற்கு தேவையான சட்னி, சாம்பார், குழம்பு, பொறியல் என டிபன், டிபனாய் அடுக்கி பெரியவனை எழுப்பி, சின்னவளை அதட்டி குளிக்க வைத்து, குளித்து, இஸ்திரி செய்து, கணவனை அனுப்பி விட்டு, மாமனார், மாமியாரை சாப்பிட வைத்து, குழந்தைகள் இருவரையும் பள்ளிக்கு சரியான நேரத்தில் பேருந்தில் ஏற்றி விட்டு, பின் அரக்க பறக்க இரண்டு இட்லிகளை நின்று கொண்டே வயிற்றுக்குள் போட்டு (சிலபோது தேநீரோடு காலைக் கதை முடியும்) வண்டியில் விரைந்து, பின்னால் முன்னால் சரி செய்து கொண்டே அலுவலக வாசலில் வண்டியை நிறுத்தும் போது, பத்து நிமிடம் தாமதமாகி இருக்கும். அதற்கென்றே பிரத்யேக சிரிப்பொன்றை வளர்த்துக் கொண்டே மேலாளரின் அறை திறக்கச் செய்யும் அன்றைய வேலை அப்போது தான் தன் பீரங்கி கதவைத் திறக்கும்.
உறக்கத்தின் உச்சியில் சாலையோர வாசிகள், கொசு கடித்தாலும், தூங்கி விடும் வரம் பெற்ற புண்ணியவான்கள். கண்கள் நிறைய கண்டு கொண்டே இன்னும் வேகமாய் வண்டியை ஓட்டினாள் அமரந்தா.....
ஆசுவாசப் படாத அத்தனை உணர்வுகளும் கலங்கிய கண்களை, காட்சியோடு பிழையாக்கி கடக்கச் செய்து கொண்டிருந்தன. ஏனோ அழுகை மட்டும் வரவில்லை. அழுது விடக் கூடாது என்பதிலும் தீவிர சிந்தனையை தேடலாக்கினாள்.. வண்டியின் காதோரங்களில், தன்னை பின்னோக்கி நீட்டிக் கொண்டே, ஒரு பகலின் தீவிரத்தை விழுங்கிய மழைப் பாம்பாய், மெர்க்குரி விளக்கின் வெளிச்சத்தில் சுருண்டு கொண்டிருந்தது சாலை. ஆங்காங்கே தப்பித்து வாழும் சில மரங்கள் "போகாதே, போகாதே" என்பது போல தலையாட்டி, உடல் ஆட்டி, உயிராட்டிக் கொண்டிருந்தன. இனம் புரியாத பயத்தை, இடம் பொருள் அறியாமல் தன் மீது யாரோ விதைப்பதாக ஒரு உறுமல், அவளை தப்பிக்கச் சொல்வதாக இருந்தது அமரந்தாவின் வேகம்....
வேகம், வேகம், வேகம்..... அந்த போன், இந்த போன், அந்த பில், இந்த பில்,......
"ஓ ....அந்த விஷயமா..... அது அமரந்தாவுக்கு தெரியும்... "
"அமர், சார் கூப்பிடறார் ... "
"அமரந்தா மேடம் நீங்க தான?"
வைத்த தேநீர், பாலாடை பூத்து, பட்டுப் போன பின், எடுத்து ஒரே மடக்கில் குடித்து விட்டு, நேரம் காலம் தெரியாமல் வழிய, வலிய, வலிய, வழிய, வந்து நிற்கும் சக ஊழியனிடம் ஜாடை காட்டி, கொஞ்சம் இளைப்பாற ஓய்வு அறை செல்கையில், அவனின் நமட்டுச் சிரிப்பு, அவனுக்கு எதுவுமே வராது என்பது போல இருக்கும். அமரந்தாவுக்கு என்னவோ போல் இருக்கும்.
அடித்து பிடித்து வீடு வந்து சேர்கையில் மணி இரவு ஏழை நெருங்க நெருங்க......
நெருங்கி வந்து "ஹே......... ஹே........." என்று கத்திப் போகும் இருசக்கர வாகன இளைஞர்களைப் பார்த்து அவளும் "ஹே......" வெனக் கத்தினாள். அவர்களை இன்னும் வேகமாய் விரட்டினாள். அவளின் இதயத் துடிப்பின் வேகம், இன்னும் இன்னும் வேகமாய் பாய்ந்து கொண்டிருந்த குருதியின் நிறத்தில் கரப்பான் பூச்சியின் குருதியை கொட்டி விட்டது போல் சிறகு முளைக்கத் தொடங்கி கோபங்களின் எண்ணமாய் சாலை கடந்தது....
எண்ணம் செயலானாலும், "அது சரியில்லை, இது சரியில்லை" என்று புலம்பும் மாமியார், "இந்த காலத்துக்கு புள்ளைங்க மதிக்கறதே இல்ல" என்று புலம்பும் மாமனார். குழந்தைகளின் வீட்டுப் பாடம், இரவுச் சோறு, அவர்கள் சண்டை இவர்கள் சண்டை, நாத்தனாரின் நகைப் பிரச்சினை, அடுத்த மாத தவணைப் பிரச்சினை என்று யோசித்து ஒரு வழியாக சமாளிப்பதற்கான முடிவெடுத்து பின், பாத்திரம் கழுவி, துணி துவைத்து, அடுக்களை சுத்தம் செய்து, படுக்கையில் வந்து விழும் போது, கை வந்து விழும் கணவன் என்ற கொம்பனாய். ஈடுபாடு இல்லை என்ற முகச் சுளிப்போடு முகம் திருப்பும் கணவனை சமாதானம் செய்யக் கூட வழியின்றி, வலிமையின்றி கண் மூடுகையில் மணி 11 தாண்டியிருக்கும்.
"ஏன் 11 மணிக்கு பொம்பள வெளிய வரக் கூடாது?"-
கேள்விக்கு இடமே இல்லை இங்கு. எல்லாமே பதில்தான். புரிந்தும் புரியாதது போல் புரிந்து கொள்ளும் பதில். அசைவற்ற முகத்தில் அத்து மீறும் கனத்தோடு நின்றாள் அமரந்தா...
"என்ன வழக்கம் போல... கோபமா?"- வேர்த்து பூத்து, வாசல் வந்த ஜீவா.... பிரிந்து கிடந்த தலை முடியை வளைத்து நெளித்து கொண்டை போட்டபடியே கேட்டாள். சிரிக்கவே முடியாத உதடு கன்னிக் கிடந்தது. அவள் உடல் மீது சாராய வாடை..
"வர்றவனுங்க எல்லாருமே குடிச்சிட்டு தான் வர்றானுங்க"- அமரந்தாவின் வெற்றுப் பார்வைக்கு, பொட்டு வைத்து பூ சூடியது ஜீவாவின் விளக்கம்.
"என்ன செய்ய... இது பத்தாவது ஆள். அம்மா கீழ விழுந்து கால உடைச்சுகிச்சு.... காலைல ஒரு ரெண்டாயிரமாவது அனுப்பனும் அதான்" என்றாள் ஜீவா.. அவளின் கண்கள் சிரித்தது, குரூரமாய். அவளின் கண்களில் கண்ணீர் பழைய கதையை பழையதாகவே வடித்துக் கொண்டிருந்தது குரூர சிரிப்பின் மறு அசைவாய்...
11வது ஆள் வீட்டுக்குள் போக, ஜீவாவைத் தடுத்தாள் அமரந்தா....
ஜீவாவின் கேள்விப் பார்வைக்கு அமரந்தாவின் பதில் இப்படி இருந்தது....
"ஜீவா இருடா..... நான் போறேன்"
------------------------------------------------------------------------------------------
அவள் அப்படித்தான் - சிறுகதைப் போட்டி
-by Joseph Julius
அவள் அப்படித்தான் - சிறுகதைப் போட்டி
அவள் அப்படித்தான்.
காந்தா மிக மிக நல்லவள். அழகியும் கூட. பெற்றோர் இல்லாத குறையை தாய் மாமன் தீர்த்து வைத்து விட்டதால், பருவம் பொங்கும் குமரியாகி, பட்டப் படிப்பும் முடித்து, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையும் செய்து வருகிறாள். அவளோடு சேர்ந்து வேளை செய்வதோடு மட்டும் அல்லாமல் அவளது அறையை அவளுடன் பங்கு போட்டுக் கொள்பவள் காவியா.
காவியா, அதீத அழகி. அவள் இதுவரை எவரையும் காதலிக்கவில்லை எனினும் அவளை
சுமார் இருபது பேராவது காதலித்து இருப்பர். ஆயினும் அவள் எனக்கேற்ற ஆண்மகன் எங்கோ பிறந்து இருக்கிறான். ஆனால், அவன் எவன் எனத் தெரியவில்லை என எல்லோரிடமும் நட்புடன் பழகுவதாய் சகலமும் பழகி வந்தாள். அவளது இந்த எல்லாப் பழக்கமும் அவளுக்கு மட்டுமே ரகசியம். அவளது அறைத் தோழிக்குக் கூட அது தெரியாது.
காந்தா முன்னார் வேலை பார்த்த கம்பெனியின் மேலாளராய் இருந்த கண்ணன் அவளிடம் சாடை மாடையாய் சொல்லியும் பின் காந்தாவுக்கு லவ் லெட்டெர் கொடுத்தும் கூட அவன் மீது ஒரு ’இது’ இருந்தும் காந்தா அவனுக்கு பிடி கொடுத்துப் பேசாமல் இருந்து விட்டாள்… வேலை மாறி வந்த பின்னர் அவனைப் பார்க்காமல் இருக்கும்போதுதான் அவளுக்கு அவன் மீது இருந்த ஈர்ப்பு புரிந்தது. ஒரு ஞாயிற்றுக் கிழமை அவர்கள் எதேச்சையாக ஒரு திரை அரங்கில் சந்தித்துக் கொண்டபோது அது மீண்டும் துளிர்த்து வேர் விட ஆரம்பித்து விட்டது.
கண்ணன், தனக்கு ஏற்கெனவெ திருமணமாகி மனைவி இறந்து விட்டாள் என்றும், பிள்ளைகள் ஏதும் இல்லை எனவும் உண்மையைக் கூறியபொழுது அவனது நேர்மை அவளுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. மாலை நேரத்தில் இருவரும் தவறாமல் சந்தித்து வந்தது போக சனி ஞாயிறு விடுமுறைகளில் நாள் முழுவதும் சேர்ந்து இருக்க ஆரம்பித்து கடைசியில் காவியாவின் அறைக்கே வந்து அவர்களோடு சமையல் செய்து சாப்பிட்டு விட்டுச் செல்லும் அளவுக்கு அவர்கள் காதல் வளர்ந்து விட்டது.
கண்ணன் காந்தாவை திருமணம் செய்ய இருப்பதை தனது அறைத்தோழி ஆகிய காவியாவிற்கு ஏற்கெனவே கூறி இருப்பினும், அவர்கள் அறையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே காவியா அதிகாலையில் அறையை விட்டுச் சென்று விடுவாள். எங்கு செல்வாள், என்ன செய்வாள் என்றெல்லாம் காந்தா அதிகம் கவலைப்பட மாட்டாள்.
ஒரு சனிக்கிழமை காந்தாவை அழைத்துக் கொண்டு திருத்தணி செல்ல இருந்த கண்ணன் முதன் முறை காவியாவை சந்தித்தான். ஆயினும் அவளைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட காந்தாவிடம் அவன் கூறவே இல்லை. ஆயினும் காந்தாவின் திருமணத்திற்கென அவளுக்கு நல்ல புடவை வாங்கிட, காஸ்மெடிக்ஸ் வாங்கிட காவியா அதிகமாய் உதவி செய்துவந்தாள்.
தனது முதல் மனைவியின் தாலி கூட தன்னிடம் தயாராய் இருப்பதால் ’எப்ப கலியானம்’ என அவளை தினந்தோறும் நச்சரிக்க ஆரம்பித்து விட்டான்.
அடுத்த வாரம், காந்தாவின் அழைப்பின் பேரில் அவர்களது அறைக்கு வந்த கண்ணன் விருந்து உண்பதற்கு என கே எஃப் சி. சிக்கன், பரோட்டா என பலவித பலவித அயிட்டங்களை வாங்கி வந்து வைத்து இருக்க, தன் பங்குக்கு, காவியா எங்கிருந்தோ மீன் குழம்பு, மீன் வறுவல் எனப் பிடித்து வந்து ஏகப்பட்ட அமர்க்களப்படுத்தி விருந்து அளித்தனர்.
அடுத்த மாதம் பதினாறாம் தேதி திருமணம் என ஏற்பாடுகள் செய்ய இருவரும் இணங்கி சென்றபோது, கண்ணன் அன்று மாலை தனக்கு தன் வீட்டில் வேறொரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்து விட்டனர் என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான். ’பாவம்’ என அவனுக்காக காவியா பரிந்து பேசியது காந்தாவுக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.
“புண் பட்ட மனதை கொஞ்சம் புகை விட்டு ஆற்று என காவியா தனது கைப்பையில் இருந்த மெந்தால் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்ததோடு நில்லாமல், எவருக்கோ போன் செய்து ரெண்டு பீர் பாட்டில்களும் கொண்டு வரச் செய்தாள். இதெல்லாம் ஆண்கள் சர்வ சாதாரணமாகச் செய்யும்போது பெண்கள் ஆகிய நாம் சோடை போய் விடக் கூடாது என அவளை சமாதானப் படுத்தி அதில் ஒன்றும் பாவம் இல்லை என குற்ற உணர்வினைப் போக்கினாள். வாரம் ஒருமுறை சோகம் போக்கும் மருந்து என இருந்தது தினந்தோறும் என ஆகி விட்டது. இத்தனைக்கும் ஆகும் செலவுகள் அனைத்தும் காவியா மட்டுமே செய்தாள். பின் ஒரு நாள் ஒரு சனிக் கிழமை இரவில் ’பப்’ போகலாம் என கூட்டிச் சென்று குடித்து விட்டு வேறொரு நண்பர் வீட்டில் பார்டி என கூட்டிச் சென்று அவளை அடுத்த ஆடவருடன் கை கோர்த்து ஆடவும் வைத்தாள். கூல் டிரிங்கில் கலந்து இருந்த மாத்திரை அவளை சொர்க்கத்திற்கு கூட்டிச் சென்றதால், அதற்கெல்லாம் வழிவகுத்த காவியாவிற்கு அவள் நெஞ்சார நன்றி கூறினாள்.
திடீரென்று ஒரு நாள், காவியா அவளது அறையைக் காலி செய்து விட்டு அலுவலகம் பக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கப் போவதாகக் கூறிச் சென்று விட்டாள். தனிமரம் ஆன காந்தா, தன் தீய பழக்கங்களை நாளடைவில் குறைத்துக் கொள்ளலாம் என தீர்மாணித்து அலுவலகத்திற்கு லீவ் போட்டு விட்டு தாய் மாமன் வீட்டிற்குச் சென்றாள்.
தன்னைப் பற்றி அவர்கட்கு எதுவும் தெரியாது என நினைத்து இருந்த காந்தாவுக்கு அத்தை அவளை முறைத்த முறைப்பிலும் அவளிடம் தன் பிள்ளைகளை அண்ட விடாமல் செய்த அவசரத்திலும் கொஞ்சம் புரிந்ததாயினும் முற்றும் புரியவில்லை. மாலை வேலை முடிந்து வந்த மாமா “அப்ப எப்ப கலியாணம்” எனக் கேட்டபொழுதுதான், தன் காதல் கதை அவருக்கும் தெரியும் எனப் புரிந்தது. தன் நிலைமையை எடுத்துக் கூறிய காந்தாவை ஆறுதல்படுத்திய மாமா,
”கவலைப் படாதே, அந்தக் கண்ணனை உனக்கு மணம் முடித்து விட்டுத்தான் மறுவேலை” எனக் கூறியது நிம்மதியைத் தந்தது.
மாமா எடுத்த முயற்சியால், நிச்சயித்த திருமணம் நின்று போய் விட்டது என்றும் அவன் அவளை மணக்கத் தயார் என்றும் அன்று அவள் வீட்டிற்கு வருவதாய் கண்ணன் கூறி இருந்தான்.
காந்தாவிற்கு நிலை கொள்ளவில்லை. அவசரம் அவசரமாய் சாதம் வடித்து, சிக்கன் பொறித்து, பீர் பாட்டிலும் வாங்கி வைத்து காத்து இருந்தபோது காவியா அங்கு வந்து விட்டாள்.
”என்னாடி ஒரே தடபுடலா சமையல் செய்து இருக்கெ”
இன்னைக்கி கண்ணன் வரப் போறார்.
“அப்படிச் சொல்லு”
இந்தா, ஒரு நிமிடம், இங்கு வந்து உட்காரு”.
அவளை ஒரு நாற்காலியில் அமரச் செய்தவள், அவளுக்கு ஃபேசியல் செய்தாள், பெடிக்யூர் செய்தாள், முகத்தை நன்கு அலம்பி விட்டு துவாலையால் துடைத்து விட்டு, ஏதோ புதிய க்ரீம் எனப் பூசி, மாநி.றமாக இருந்த காந்தாவை பொன்னிறமாகி விட்டு விட்டாள். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்த காந்தாவுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.
”இந்த அழுக்கு கலர் புடவை எல்லாம் வேண்டாம். பேசாமல் இந்த புது நைட்டியப் போடு”
என புதிதாக ஒரு பாக்கெட்டைத் திறந்து கொடுத்தாள். அதனை அணிந்து வந்த காந்தா தன் மீது தானே மோகம் கொண்டாள்.
‘ஏ இப்ப ஒன்னப் பாத்தா எனக்கே ஆசை வருதுடீ.. பாவம்டீ கண்ணன். நான் வேணும்னா
போய் விடட்டுமா” எனக் கேட்டாள்.
’சனியனே, சீக்கிரம் போகாமல் ஏன் இப்படி அவர் வரும் நேரத்தில் இவள் என் உயிரை எடுக்கிறாள்’ என நினைத்தவள், அதற்குள் ஸ்கூட்டர் வரும் சத்தம் கேட்டு,
“அவர் வந்து விட்டார்” என்றாள்.
வீட்டிற்கு வந்த கண்ணன், காந்தாவைப் பார்த்து,
குட் மார்னிங்”
என்றான். காவியாவிடம்,
”மேம், இந்த ரெண்டு வைர வளையல் என் மறைந்த மனைவியின் வளையல்கள். நல்ல இருக்கா பாருங்க”
எனக் கூறி நீட்டினான்.
”ஆஹா, அற்புதம்” எனக் கூறிய காவியா அவற்றை வாங்கி தன் கையில் போட்டுக் கொண்டாள். அதனைக் கண்ட காந்தாவுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.
”ஏய், என்ன செய்ற? என அதிகாரமாய் கேட்டவளைப் பார்த்து, அமைதியாக,
”என் கைக்கென செய்தது போல் இருக்கிறது” எனக் கூறி,
”கொஞ்சம் இருங்கள்” எனக் கூறிவிட்டு விடு விடு என வெளியே சென்று விட்டாள்.
”மேம், மேம்”, என அவள் பின்னால் சென்ற கண்ணன் மீளத் திரும்பவே இல்லை. காந்தா செல்போனில் கூப்பிட்ட போதும் பதிலே அளிக்கவில்லை.
அடுத்த நாள் காந்தா அலுவலகம் வந்தபோது காவியா இருவார லீவில் சென்று விட்டாள் என்ற செய்தி இடியாய் இறங்கியது. அலுவலக ப்யூன், நீங்கள் வந்தால் கொடுக்கச் சொன்னார்கள் என கொடுத்த கவரில் ஒரு திருமணப் பத்திரிகையும் ஒரு அரைக்கடுதாசியும் இருந்தன.
திருமண அழைப்பிதழில், திருத்தணியில், காவியாவுக்கும் கண்ணனுக்கும் அன்று கலியாணமென்ற செய்தி அவளை நிலை குலையச் செய்தது. கொஞ்ச நேரம் கழித்து, சுதாரித்துக் கொண்ட அவள், அந்த கவருடன் கொடுக்கப்பட்ட பேப்பரில் என்ன இருக்கிறது என ஆர்வம் மேலிடப் பார்க்க வேண்டும் என அவசரமாகப் பிரித்தாள்.
காவியா தந்த அந்த சிறு தாளில் கவிதை போல ஏதோ எழுதி இருந்தது.
’அந்த காவ்யா மட்டும் என கைக்கு கிடைக்கட்டும் அப்போது பார்த்துக் கொள்கிறேன்’ என மனதிற்குள் கறுவிய காந்தா அந்த பேப்பரில் அப்படி என்னதான் எழுதி இருக்கிறது எனப் பிரித்துப் படிக்கலானாள்.
”உன்னை செயித்தேன் யான் ஒட்டாரம் செய்மதனா
என்னிடத்தில் முக்கண் ஈசன் இருக்கையினால்”
என ஏதொ கவிதை போல் எழுதி இருந்தது. என்னை செயித்தாயா, அடிப்பாவி, கடவுள் உன் பக்கமா? அப்படி என்றால் எல்லாம் திட்டமிட்ட நாடகமா எனக் கோபம் தலைக்கேறியவள் அந்த பேப்பரை கசக்கு கசக்கு எனக் கசக்கி உருண்டையாக்கி தூர விசிறி எறிந்தாள். அவளால் ஒன்றும் செய்ய முடியாதபடி காவியாவும் கண்னனும் தங்கள் தேன் நிலவுக்கென
கொடைக்கானலுக்கு காரில் பறந்து கொண்டு இருந்தனர்.
----------------------------------------------------------------------------------------------------------
அவள் அப்படி தான்-கெளதமி தமிழரசன்
'' 35 வயதில் இந்த அளவுக்கு வக்கீல் தொழிலில் புகழ் வாங்கினவர்கள் யாருமே இல்லை.அதுவும் ஒரு பெண்ணா இருந்து கிட்ட இந்த அம்மாவோட தைரியம் இருக்கே, அது யாருக்கும் வராது.பொய் எல்லாம் இந்த அம்மா முன்னாடி பொசுங்கி போயிடும்.சொன்ன சொல்லுக்கு நிப்பாங்க''
யாரோ இருவர் வக்கீல் திவ்யாவின் அலுவலக அறை முன்பாக பேசிக்கொண்டு இருந்தனர்.
மேடம் இருக்காங்களா?அலுவலக பையனிடம் கேட்டார்
அரசாங்க அதிகாரி சொக்கலிங்கம்.
உள்ள போங்க சார் .கொஞ்சம் பாத்து பேசுங்க என்று அவரிடம் வளிந்து கொண்டே சொன்னான் பையன்.
வணக்கம் அம்மா .நல்ல இருக்கீங்களா?வீட்டுல எல்லாரும் நலமா?கேட்டார் சொக்கலிங்கம்.
'அது இருக்கட்டும் .நான் முதலிலே உங்க கிட்ட சொன்னது தான் .எந்த தப்புக்கும் துணை போறவ இல்லை நான் .நான் விசாரிச்ச வரைக்கும் உங்க மேல ,நீங்க சரியா இருப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை வரல........சொல்ல போனா உங்க மேல பதிவாகி இருக்கிற குற்றச்சாட்டுகள் குறைவு தான் .
நீங்க நிக்க வேண்டிய இடம் இது இல்லை .முதலில் வெளிய போ .இல்லையென்றால் மரியாதை கெட்டிடும்' கோபத்தில் வார்த்தைகள் தெரிந்தன திவ்யாவிற்கு.
அரசாங்க அலுவலகத்தில லஞ்சம் வாங்கிறதும் ,கொடுக்கிறதும் சகஜம் தானே.அதுக்கு எதுக்குமா இந்த கத்து கத்துற ?இந்த பொட்டச்சிக படிச்சாலே இப்படி தான் .கண்ணு முண்ணு தெரியாது.ஏதோ பெரிய வக்கீல்னு தேடி வந்தா ரெம்ப தான் .இப்ப போறேன் .ஆனா' உன் திமிர எப்படி அடக்குறேன் பாரு' கர்ஜித்து கொண்டே வெளியே சென்றார் சொக்கலிங்கம்.
காலை 8 மணி ...வக்கீல் திவ்யாவின் வீடு
அம்மா ஆய் வருதுமா ,கொண்டு விடும்மா சொன்னான் திவ்யாவின் 3 வயது மகன்.நீ இரும்மா, அம்மா கழுவி விட வர்றேன் என்றாள் பாத்திரம் கழுவிக்கொண்டே............
திவ்யா ஆபீஸ்க்கு லேட்டாச்சி ..............டிபன் எடுத்து வை .என் சாக்ஸ் எங்கே?கேட்டார் திவ்யாவின் கணவர்.
'ஒரு நிமிஷம் பா' இப்ப வந்துடுவேன் என்றாள் திவ்யா
இந்த சனியனுக்கு எத்தின தடவ சொன்னாலும் நம்ம அவசரம் புரியாது ......திட்டினாலும் உரைக்காது ....எரும மாட்டு ஜென்மம்
முணுமுணுத்தார் திவ்யாவின் கணவர்.
தீடிரென ஒரு ஒட்டடை தூசி அவர் மேல வந்து விழுந்தது...
'ஏய் இங்க வாடி .வீட்ட பெருக்கினா மட்டும் போதாது .அப்ப அப்ப ஒட்டடையும் கீளின் பண்ணனும் .'
ஒழுங்கா ,பாத்து நடந்துக்க .............மிரட்டி விட்டு சென்றார்.திவ்யாவின் கணவர்.
ஒட்டடை கம்பு எங்க போச்சி தேடினாள்...............................திவ்யா
-----------------------------------------------------------------------
அவள் அப்படித்தான் -by Punitha velangkanni
"தேவகி! தேவகி! ஏண்டி நேத்து ரேஷன்லருந்து கோதுமை வாங்கி வந்தியே... ஒரே குப்பையா இருக்கு ஒரு வேலை கூட ஒழுங்கா செய்யரதே இல்லை... கண்ண என்ன பின்னாடியா வச்சிருந்த... பாத்து வாங்குரது இல்லை", என்று பங்கஜம் மாமி கத்த, வாய் பேசாமல் மவுனமாக இருந்து விட்டு வந்துவிட்டாள் தேவகி.
கொஞ்ச நேரத்தில் மாமியே வந்து, "ஏண்டி! அந்த கோதுமையை பொடச்சி வச்சிருக்கேன். கொஞ்சம் மிஷின்ல போய் அரைச்சிட்டு வந்து குடு", என்றாள்.
"சரி மாமி! சாயந்திரமா வரேன். நீங்க போங்க", என்றாள்.
"இல்லடி, செத்த இப்படி திண்ணையில படுத்து இருந்துட்டு அப்புறமா போறேன்", என்று மாமி சொல்லி படுத்து விட்டாள்.
தேவகியின் நினைவு பின்னோக்கி சென்றது.
கணவர் இருந்தவரை வீட்டைவிட்டு வெளிஉலகம் தெரியாமல் இருந்தவள், ஒரு ராணியாக வாழ்ந்தவள், கணவர் இறந்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கையில் இந்த மாமிதான் அடைக்கலம் கொடுத்தாள்.
அவள் வீட்டிலே பத்துதேய்த்து, பக்கத்தில் இருக்கும் கோவிலிலும் முறைவாசல் செய்து, பிள்ளைகளை படிக்க வைத்து, இன்றுவரை உட்காராமல் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறாள்.
ஒரு சிறு இடம் வாங்கி, அதில் ஒரு மனையும் கட்டி 'அப்பாடா' என்று இருக்கிறாள்.
இப்போது கோவிலை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். மாமியின் பிள்ளைகளும் தேவகியை ஒரு வேலையாள் போல் பார்த்தது கிடையாது.
இன்று அவர்கள் படித்து நல்ல வேலையில் இருந்தாலும் தேவகியிடம்
அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள்.
சொல்லப்போனால் அவர்கள் இருக்கும் இடத்துக்கு மாமியை அவர்கள்
பிள்ளைகள் அழைத்தும் போகவில்லை. இருக்கும் இடத்திலேயே கடைசிகாலம்
வரை இருக்கிறேன் என்று சொல்லி விட்டாள்.
தேவகி தினமும் ஒருமுறை மாமி வீட்டுக்கு சென்று அவரை பார்த்துவருவாள். மாமி அப்படித்தான் ரேஷனில் இருந்து எந்த பொருள் வாங்கி வந்தாலும் சத்தம் போடுவாள். அப்புறம் சமாதானம் ஆகி விடுவாள். அவள் அப்படித்தான்.
அவள் அன்று இல்லை என்றாள் நான் இன்னைக்கி எப்படி இருப்பேன்னு
தெரியல. மாமி என்ன இன்னைக்கிவரைக்கும் ஒரு வேலைக்காரியா பார்த்தது
இல்ல. இந்த ஊருலயே பெரிய வீடு மாமியோடது. கொஞ்ச நேரம் இங்க வந்து
இந்த திண்னையில படுத்து தூங்கிட்டு போனாதான் மாமி மனசுக்கு நிம்மதியா
இருக்குன்னு சொல்லுவா. அவள் அப்படித்தான். இந்த இடமே அவள் வாங்கி
கொடுத்ததுதான். ஒரு அம்மாவா தான் நான் அவளைப் பார்க்குறேன்.
அவளும், "என்னமோ தெரியலடி தேவகி! வயசாயிட்டாலே கோவம் ஜாஸ்தியா வருது. நான் யார்கிட்ட கோவத்த காட்ட", என்று ஆதங்கப்படுவாள்.
"அவள் அப்படித்தான்"
-----------------------------------------------------------------------------------------------------------------
"அவள் அப்படித்தான்"
-by Velangkkanni .A
மீனாட்சியைக் கண்டால் எல்லாருக்குமே பயம். சிரிக்கிற குழந்தையும் பார்த்தவுடனே அழுதிடும். அழுகிற குழந்தையும் பார்த்தவுடனே அழுகையை நிறுத்திடும். யாரு மாட்டினாலும் வாயால போட்டு வெளுக்கறது மட்டுமில்லாம, கையிலையும் அடிக்க ஆரம்பிச்சா, யாரா இருந்தாலும் அம்புட்டுதான்..
இப்ப.. நான் இத உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கும் போது, மீனாட்சி யாருன்னு கேக்காதீங்க... அவங்க என்னோட அம்மா..!!
நான் ராஜு.. ஆறாம் வகுப்பு படிக்கிறேன்... இப்ப இதெல்லாம் நான் உங்ககிட்ட சொல்லிக்கிட்டு இருக்கும் போது , என் கை, காலெல்லாம் நடுங்கிகிட்டு இருக்கு...
ஏன்னா...? காலைலே நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்.. அப்ப பயத்துல ஓடி வந்தவன் தான். எங்கெல்லாமோ சுத்திட்டு இப்பத்தான் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்.
அப்படி என்ன தப்புனு கேக்கறீங்களா...?!!!
எங்க அப்பா.. வெளியூர்ல வேலை பார்க்கறார்.. வீட்ல நான், எங்க அம்மா.. அப்புறம் என்னோட குட்டி தங்கச்சி ரோகிணி மூணு பேரும் தான் இருப்போம்..
தங்கச்சிக்கு இப்பத்தான் தத்தி தத்தி நடக்கற வயசு..
அம்மா.. என்னைய, ரோகிணிய பாத்துக்கோணு சொல்லீட்டு கடைக்கு போயிட்டாங்க..
நானும் ஒழுங்கா பாத்துக்கிட்டு தான் இருந்தேன். கொஞ்சம் நேரம் கழிச்சு தெருவோரத்துல பயங்கரமான சத்தம்.. என்னானு எட்டிப்பார்த்தா.. ஆட்டோக்காரங்க எல்லாம் திடீர்னு அடிச்சுக்கிட்டு இருக்காங்க...
ரோகிணி கட்டில் மேல ஏறி விளையாடிக்கிட்டு இருந்தா.. என்ன நினைச்சேனோ தெரியல... வேகமா நான் வேடிக்கை பார்க்க கெளம்பிட்டேன்...
அங்க போனா, பயங்கரமான அடிதடி சண்டை நடந்துக்கிட்டு இருக்கு..
அக்கம்பக்கத்துல நிக்கறவங்களை எல்லாம் கவனிக்காம கண்ணா பின்னானு அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க... எனக்கும் சுளீர் சுளீர்னு ரெண்டு மூணு அடி பயங்கரமா விழுந்து கை, காலெல்லாம் ரத்தம் கட்டின மாதிரி வீங்கிப்போயிருச்சு...
எப்படியோ கஷ்டப்பட்டு வீட்டுக்கு வந்தா.. வீட்டச்சுத்தி ஒரே கூட்டம்...
கூட்டத்த பாத்தவுடனே ஒரு பயம் வந்துடுச்சு...
காதுல விழுந்தத வச்சுப்பார்த்தா.. ரோகிணி கட்டில்ல இருந்து கீழ விழுந்து நல்லா அடிபட்டு மயக்கம் ஆயிட்டாளாம்.. அப்ப சரியா வந்த அம்மா.. பயங்கரமா கத்தி..ஒரு களேபரமே பண்ணி, வேக வேகமா ஆட்டோ பிடிச்சு, உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டாங்களாம்...
கேக்கும்போதே பகீர்னு இருந்துச்சு...
எப்படியும் அம்மா கைல மாட்டினேனா.. பிச்சு பீஸ் பீஸா ஆக்கிறுவாங்க.. திடீர்னு அப்படி ஒரு பயம் நெஞ்ச அடைக்க.. கை, கால் வலியையையும் பொறுத்துக்கிட்டு அங்கேயிருந்து நழுவினவன்.. இப்பத்தான் மனசு பூரா பயத்தோட, நொண்டி நொண்டி வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்...
பயந்துக்கிட்டே போயி கதவைத்தட்ட கதவு மேல கைய வச்சேன்.. கதவு தானா திறந்துக்கிச்சு.. சுவத்து ஓரத்துல அம்மா உட்காந்து அழுதுக்கிட்டு இருந்தாங்க...
என்னைப் பார்த்தவுடனே எந்திரிச்சு வேகமா ஓடி வந்தாங்க.. போச்சு.. இன்னைக்கு பிண்ணு பிண்ணுனு பிண்ணப்போறாங்கனு நெனச்சுக்கிட்டு இருக்கும்போதே என்னை அப்படியே கட்டிக்கிட்டாங்க...
"எங்கடா செல்லம்.. எங்க போனே.. உன்ன எங்கெல்லாம் தேடருது.. இப்படி என்னை தவிக்கவச்சுட்டியே"ன்னு சொல்லி என்னை கொஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க.. என் கை, காலில இருந்த காயத்தை பார்த்தவங்க.. நல்லா துடைச்சுவிட்டு மருந்தும் போட்டு விட்டாங்க...
கட்டில்ல ரோகிணிப்பாப்பா தலைல கட்டோட தூங்கிட்டு இருந்தா.. பார்க்கவே பாவமா இருந்துச்சு... எல்லாமே என்னாலே தானே...
நான் 'மன்னிச்சுக்கோமா'னு சொல்லணும்னு நெனைச்சேன்..
ஆனா கோவக்கார மீனாட்சி அம்மா, எனக்கு அதுக்கு வாய்ப்பே தரலை..
நான் பண்ண தப்ப சொல்லிக்கூட காட்டாம, என் மேல காட்டின பாசத்தாலே.. இனிமே என்னை சொல்பேச்சு மீறாத பையனா மாத்தீட்டாங்கனு நெனைக்கிறேன்..
என் அம்மானா அம்மா தான்...
தப்பு பண்ணா அடிச்சும் திருத்துவாங்க.. பாசத்தாலேயும் திருத்துவாங்க...
அம்மானாலே அப்படித்தானோ.... அவள் அப்படித்தான்
-------------------------------------------------------------------------------------------------------
அவள் அப்படித்தான் –mu.jeevaraj
(இந்த கதையும் கதாபாத்திரங்களும் கற்பனையே தவிர யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டது கிடையாது. )
(சுபாஷ், ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் எழுதிய நாவல்களில் பல புகழ் பெற்றவைகளாய் அமைந்திருந்தன.
சுபாஷ் ஒரு நாள் “அவள் அப்படித்தான்” என்றொரு நாவலை, கடற்கரை அருகே அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். ஆழ்ந்த சிந்தனையுடன் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது, தனக்கு பின்னால் நின்று யாரோ தன் தோளினைத் தட்டுவது போல் உணர்ந்ததும், திரும்பி பார்க்கையில், சுபாஷின் தோழியான “ஹாசினி” நின்று கொண்டிருந்தாள்.)
“ஹாசினி! நீ என்ன இங்க?”
“இல்லப்பா, வாரக் கடைசி, அதான் கடற்கரைப் பக்கமா கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு போலாம்னு வந்தேன். அதுசரி, நீ இங்க என்ன செஞ்சுக்கிட்டு இருக்க?”
“நான் ஒரு நாவல் எழுதிக்கிட்டு இருக்கிறேன்பா”
“நாவலா? என்ன நாவல்ன்னு கொஞ்சம் சொல்றியா!!?”
“ம்... இந்த நாவல் ஒரு உண்மைக் கதையைத் தழுவி எழுதப்படக்கூடியது. “கனகம்” என்றொரு பெண் எப்படியெல்லாம் தன் வாழ்க்கையைத் தன்னைச் சூழ்ந்துள்ள உறவுகளுக்காக அர்ப்பணித்து வாழ்ந்திருக்கிறாள், என்பது தான் இந்த நாவல்.”
“கதை ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் போலயே? எனக்கு கொஞ்சம் அந்த கதையைச் சொல்லேன்!”
“அதெல்லாம்...முடியாது...! புத்தகம் வெளியிடும்பொழுது படிச்சுத் தெரிஞ்சுக்கோ!”
“ஏய் தயவுசெய்து சொல்லுப்பா! என்னால அதுவரைக்கெல்லாம் காத்துக்கிட்டு இருக்க முடியாது.”
“சரி!சரி!, அதுக்கு ஏன் தயவுசெய்துன்னு எல்லாம் சொல்லுற?”
(கதையைக் கேட்க ஆர்வமானால் ஹாசினி)
“மதுரையில் நீலகண்டன், ஜோதியம்மாள் தம்பதியர்க்கு மகளாய் பிறந்தவள் கனகம். சிவந்தமேனி, அம்சமானமுகம் எனப் பார்ப்பவரைப் பொறாமைக் கொள்ளும் விதமாக ஒரு அழகிய தேவதையாக வாழ்ந்து வந்தாள். கனகத்திற்கு உடன்பிறந்தவர்கள், மூன்று தமையன்களும் ஒரு தங்கையும். அவள் குடும்பத்தின் பிரதான தொழில் நெசவுத்தொழில். பள்ளியில் நன்றாகப் படித்து வந்த போதும், குடும்ப சூழலால் தன் கல்வியை ஐந்தாம் வகுப்புடன் நிறுத்திக் கொண்டாள் கனகம். பிறகு தந்தையின் விருப்பத்திற்கிணங்க நெசவுத்தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள் கனகம். இதுதான் அவள் தன் வாழ்வில் பிறருக்காக ஏற்றுக்கொண்ட முதல் மாற்றம்.
நெசவு நெய்தல், சமையல் செய்தல், வீட்டைப் பராமரித்தல் என அத்தனையிலும் ஜோதியம்மாளுக்கு உதவியாய் இருந்தாள் கனகம். இப்படியொரு வாழ்க்கையில் அவளுக்கிருந்த ஆறுதல், தோழிகளும் அவர்களுடன் இணைந்து பார்க்கும் திரைப்படங்களும் தான். அதற்கும் வந்தது ஒரு முடிவு! ஒரு நாள் திரைப்படத்திற்குச் செல்வதற்க்கு, தந்தையாரிடம் அனுமதி கேட்ட பொழுது “இன்னைக்கு நீ சினிமாவுக்குப் போகணும்னா, அடுத்த சினிமாவுக்கு நீ எப்போ போவன்னு சரியா சொல்லிட்டுப் போ!” என்று நீலகண்டன் கேட்க, அந்த ஆசைக்கும் முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டாள் கனகம்.
பிறகு இருபது வயதில் கனகம், முருகேஷை மணம் செய்து கொண்டாள். நடுத்தர வர்க்க மணவாழ்வில் என்ன நடக்கும்? வழக்கம்போல் மாமியார், நாத்தனார்களின் அர்த்தமற்ற குணம்தான், அவளையும் வதைக்க ஆரம்பித்தது !
திருமணமான ஒரு வருடத்தில் ரோஜாவின் நிறத்தில் தன் ஜாடையிலேயே அழகான பெண் குழந்தையொன்றைப் பெற்றெடுத்தாள் கனகம்! அதற்கு சீலா என்ற பெயரும் வைத்தாள். மாமியாரோ, “வரதட்சனையாகத் தராமலிருக்கும் தங்கச்சங்கிலியைப் பெற்றுக் கொண்டுதான் வர வேண்டும்” என்று கண்டிப்புடன் கூறிவிட்டார் !
ஆனால், கனகத்தின் பெற்றோர்களோ அதைச் செய்ய முடியாத சூழலில் இருந்தனர். இருப்பினும் சுய கெளரவத்தை விட்டுக்கொடுக்காத கனகம், தன் பிள்ளைக்குப் பால் வாங்க கூட பணமில்லாத நிலையிலும் துணிவுடன் போராடி, நெசவு நெய்து, பணத்தைச் சேர்த்து, அதில் தன் மாமியார் கேட்ட நகையை வாங்கிக் கொண்டு, கணவன் வீட்டிற்குத் தன் குழந்தையுடன் சென்றாள் !
இருப்பினும் அவள் கஷ்டம் தீரவில்லை. ஏனென்றால், பிள்ளைக்கு பால் வாங்குவதற்குக் கூட பிள்ளையார் சிலை ஒன்றைத்தான் நம்பியிருந்தாள் கனகம்! ஆம். கனகத்தின் கணவர், தான் வேலை செய்யும் பட்டரையிலிருக்கும் பிள்ளையாருக்கு ஒரு சிலர் பூஜை செய்து வைக்கும் முக்கால் ரூபாயை எடுத்துக் கொண்டு வருவார், பால் வாங்குவதற்கு! ஆனால், சம்பளம் கிடைக்கும்பொழுது மறக்காமல் கடனைத் திருப்பி செலுத்திடுவர் பிள்ளையாருக்கு!
பின்னர், கணவனுடன் இணைந்து போராடித் தன் குடும்பத்தை ஏற்றம் கொள்ள வைத்து, புகுந்த வீட்டில் தனக்கிருந்த பிரச்சனைகளையும் ஒரு வழியாக தீர்த்தாள் கனகம். ஆனால், அதன் பின், உடன்பிறப்புகள் வழியே பிரச்சனைகள் மூண்டது !
கனகத்தின் மூத்த தம்பியோ ஊதாரிக்கு இலக்கணமாய் சுற்றித் திரிந்தான். திடீரென்று ஒரு நாள் தான் வெளிநாடு செல்வதற்கு பணம் வேண்டுமென்று பெற்றோரிடம் நச்சரிக்க ஆரம்பித்தான். கனகமும் பெற்றோரின் நிலைமையை புரிந்துக் கொண்டு, வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து உதவினாள். ஆனால், அவனோ வெளிநாட்டிற்கும் செல்லவில்லை! பணத்தையும் பத்திரப்படுத்தவில்லை!
பின்னர், கனகத்தின் இரண்டாவது தம்பியோ, மதுவிற்கு அடிமையாகி உடல்நிலைக் கெட்டுத் திரிந்தான். அவனை மருத்துவமனையில் சேர்த்து, வேண்டிய செலவுகளைச் செய்து, உபசரணையையும் செய்தாள் கனகம். இந்நிலையில் கனகத்திற்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. அந்த குழந்தைக்கு “சுபாஷ்” என்றும் பெயரிட்டாள்.
பின்னர், சிறுக சிறுக சேமித்த பணத்தில், அழகான மாடி வீடு ஒன்றைக் கட்டினாள் கனகம்! அந்த நேரத்தில் கனகத்தின் தம்பிகளும் பெற்றோரும் திருப்பூருக்கு தொழில் நிமித்தமாக இடம்பெயர்ந்தனர். அங்கு அவர்கள் தங்குவதற்கு ஒரு நல்ல வீடில்லாமல் இருந்ததால், கனகத்தின் தம்பிகள் “மதுரையில் குடியிருந்த தந்தையாரின் வீட்டை விற்றிடலாம்” என்று நினைத்தனர். அப்பொழுது கனகம் “பாரம்பரியமாய் வாழ்ந்து வந்த வீட்டை விற்க வேண்டாம்! அதை நான் கூட வாங்கிக்கொள்கிறேன்!” என்று கூறி பதிலுக்கு தான் ஆசையாய் கட்டிய புதிய வீட்டை விற்று, திருப்பூரில் நிலம் வாங்கி, வீடு கட்டிக் கொடுத்தாள் அந்த அப்பாவி மகள்! தம்பிகள் மீது வைத்த நம்பிக்கையில், தந்தை வீட்டிற்காக தன் பெயரில் பத்திரங்களும் எழுதி வாங்கிக் கொள்ளவில்லை கனகம்!
இந்நிலையில் கனகத்தின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவருக்குத் தேவையான மருத்துவச்செலவுகள், உபசரிப்புகள் செய்து தன் பிள்ளைகளில் ஒருவராய் தன் தாயைப் பார்த்துக் கொண்டாள் கனகம்! இதற்கு கனகத்தின் கடைசி தம்பி மட்டுமே துணை நின்றார்! நோயின் வீரியம் அதிகரிக்க கனகத்தின் தாயார் காலமானார். பின்னர் தன் முதல் இரண்டு தம்பிகளுக்கும், தாயாகவும் பொறுப்புள்ள அக்காவாகவும் இருந்து, தகுந்த பொருட்செலவில் திருமணம் நடத்தி வைத்தாள், கனகம்!
பின்னர், நெசவுத் தொழில் நலிவுற்ற பிறகு, இட்லி தோசை மாவு விற்று, தன் மகளையும் மகனையும் கல்லூரிப் படிப்பு வரை அனுப்பிவைத்தாள் கனகம்! வாழ்வின் பெறும் பகுதியைத் தன் சுற்றத்திற்காகவே உழைத்து உழைத்து தேய்ந்தவள், திருப்பூருக்குச் சென்று தம்பிகள் வீட்டில் தங்கி வேலை பார்த்தால் சற்று நிம்மதி கிடைக்குமென்று சென்றாள். ஆனால், அவள் செய்த நன்மைகளைச் சிறிதும் எண்ணாமல், அவளைத் தண்டமாகவும் தொந்தரவாகவும் மட்டுமே பார்த்து அவள் மனதை நோகடித்து திருப்பி அனுப்பிவிட்டனர் அந்த பாசத் தம்பிகள்!
பின்னர், கனகத்தின் தந்தையாரும் காலமான பிறகு, தந்தையார் பெயரில் மதுரையிலிருக்கும் அந்த பாரம்பரிய வீட்டினைத் தன் பெயருக்கு மாற்றுவதற்கு கனகம் தம்பிகளை அனுகிய பொழுது மனிதத்துவம், சகோதரத்துவம் அற்ற அவர்கள் “அந்த வீட்டினை உனக்குத் தருவதற்கு நாங்கள் கையெழுத்திடமாட்டோம்!” என்று அவளை ஏமாற்றி, அவளின் நம்பிக்கையையும் புதைத்துவிட்டனர்! மேலும், கனகத்தின் கணவரையம் அவமானம் செய்து விட்டனர். அதிலும், மூன்றாவது தம்பி மட்டுமே கனகத்திற்குத் துணை நின்றான்.
மனம் உடைந்த கனகம், பின்னர்தன் குடும்பத்தையும், நோய்வாய்பட்ட தன் மாமியாரையும் பாதுகாப்பதிலேயே தன் வாழ்வை அர்ப்பணித்து கொண்டாள்! ”
“ஏய்...சுபாஷ், இடையில அந்த கனகத்தோட பையன் பேரு சுபாஷ்னு சொன்னியே...அது நீ தானா ?”
“ஆம். அந்த கனகம் தான் என் தாயார் !”
“ஓ... அப்போ, இப்ப உங்க அம்மா அந்த தம்பிகள விட்டு முற்றிலுமா ஒதுங்கிட்டாங்களா?”
“அவள் என்றும் தன் தொப்புள்கொடி உறவுகளைக் கிழித்தெரிந்திட மாட்டாள். சிலகாலத்திற்கு முன்பு தான் தன் மகளைத் தனது கடைசித் தம்பிக்கு மணமுடித்துக் கொடுத்திருக்கிறாள்!”
“அப்போ, எப்பவுமே உங்க அம்மா இப்படித்தானா?”
“எப்பவுமே “அவள் அப்படித்தான் ””.
-----------------------------------------------------------------------------------
மீண்டும் வானம்பாடி-புனிதா வேளாங்கண்ணி
கால் கடுக்க நிக்கிறேங்க தண்ணீருக்கு
வந்த வண்டி போயிருச்சு மாளிகைக்கு
குடிக்க கூட தண்ணியில்ல எங்களுக்கு
என்ன பாவம் செஞ்சமுங்க பகவானுக்கு
தண்ணிக்காக அலையிறமே தெருத் தெருவா
தண்ணிக்குழாய் ஆயிடுச்சே துருத் துருவா
குடிகெடுக்கும் தண்ணிக்கடை தெருவுக் கொன்னா
குடிகாக்கும் தண்ணீர்தர யார் இருக்கா
குளம் குட்டை வத்திடுச்சே வயிறுபோல
நிலம் எல்லாம் காய்ஞ்சிடுச்சே மனசுபோல
மரம் எல்லாம் வெட்டிவிட்டோம் உறவுபோல
தண்ணி போச்சு உசுறுமட்டும் ஒட்டிக்கிச்சு
இருப்பவன் பணம் கொடுத்தே வாங்கிக்கிறான்
இல்லாதவன் எங்கே போவான் சொல்லிடுங்க
தாகம் தீர்க்க தண்ணீர்மழை பொழிந்திடுமோ
மீண்டும் வானம்பாடி வாழ்வில் வந்திடுமோ
------------------------------------------------------------------------------
மீண்டும் வானம்பாடி
சிறகின்றிப் பறந்தோம் சிறாராய்ப் பள்ளியில்
கட்டவிழ்ந்த காளையராய்க் களித்திருந்தோம் கல்லூரியில்
பாடத்தில் திளைத்து மேடையில் முழங்கி
திடலில் விளையாடி கனவில் மிதந்து
காலடி வைத்தேன் நனவுலகில் நானும்
விழைந்தே ஏற்றேன் பயிற்றும் தொழிலை
உழைத்தே பெற்றேன் பணியினில் ஏற்றம்
உலகியல் கற்றேன் விழுந்தும் எழுந்தும்
இன்பமும் துன்பமும் இல்லறத்தில் துய்த்து
மனையாள், பிள்ளைகள், சுற்றமும் சூழ்ந்திட
சுமைகள் சுமந்து கடன்கள் முடித்து
காலச்சுவடுகளில் கற்ற பாடங்கள் பலவாம்
பணியில் ஓய்வொடும் வயதில் மூப்பொடும்
நினைவுச் சிறகுகள் விரித்தேன் மனவானில்
பாடிடலானேன் மீண்டும் வானம்பாடியாய் இன்று
யாண்டுகள் பலவாயினும் மீட்டெடுத்தேன் எனையே
சபா வடிவேலு
-----------------------------------------------------------------------------------------------
மீண்டும் வானம்பாடி
===================
மீண்டும் வானம்பாடி -சொ . சாந்தி
கஞ்சியுண்டும் சிறகடித்த வானம்பாடிகள் நாங்கள்
வருமானம் தேடி மானத்தை இழந்தவர்கள்....
பத்திரங்களில் கையெழுத்திடுகையில் அறிந்திருக்கவில்லை
பணி என்னவென்றும், சிறகுகள் பறிக்கப்படுமென்றும்....
சிவப்பு வீதிகளில் இன்ப தொழிற்சாலைகளில்
உற்பத்தி இயந்திரங்களாய் நாங்கள் ஓய்வின்றி ...
கவனக் குறைவுகளில் சிசுக்கொலைகள் அவ்வப்போது
கருப்பைகளை ரணமாக்கி வலிகளை சுமந்து...
எங்களின் தொழில் தண்டனைகளற்ற குற்றங்களாகிறது
அதிகாரிகளுக்கு ஓசியில் தாசிகளாய் இருக்கையில்...
இருட்டுலகில் விருப்பமின்றி விலைபோகும் எங்களுக்கு
இரவு இரவாகவும்... பகல் பகலாகவும். ஆவதெப்போது??
பறிக்கப்பட்ட சிறகுகளை மீட்டுத் தாருங்கள்
மீண்டும் வானம்பாடியாகிறோம் கஞ்சியேனும் உண்டு...
விபச்சாரிகளாய் வாழ்வை தொடரும் எண்ணமில்லை
வாழ விடுங்கள் எங்களையும் சராசரிகளாய்...
-----------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------
மீண்டும் வானம்பாடி -பொள்ளாச்சி அபி
அகிம்சையின் பாதைகளில் எரிகிறது அக்கினி
நாடுகூட வேண்டாமெனத் துறந்த புத்தனின்
படைகள் இனமழித்து எக்காளம் இடுகின்றன.
உலகநாடுகளின் விசாரணைகள் ஊற்றிக் கொண்டன.
சன்னியும்,ஷியாவும் மோதிக் கொள்வதில்
நோன்புகள் எங்கோ புறந்தள்ளப் படுகின்றன.
அடைக்கலம் கேட்டு அலறும் குரல்களில்
அத்தனை மதங்களும் கலந்திருந்தன.
சேவையிலிருந்து லாபத்தடம் மாறுது ரயில்கள்
எரிவாயுவை இனியெட்டிப் பிடிக்க முடியாது.
முல்லைப் பெரியாறு நீருக்கு நூறுகோடி
லஞ்சத்தின் பிடியில் சரியும் பதினொருமாடி
உத்தரப் பிரதேசமும்,பொள்ளாச்சியும் சமமாகிறது
அழியாமலே இருக்கிறது தீண்டாமைச் சுவர்கள்
அக்கினிக் குஞ்சுகளாய்,அகிலத்தைப் புரட்டிவிட
வட்டமிட்டுப் பறக்குமோ மீண்டும் வானம்பாடி..!
-------------------------------------------------------------------------------------
மீண்டும் வானம்பாடி- கவிஜி
மரபு வானம் உடைத்து புகுந்த
சிறகின் கானம் படைத்த சந்தம்,
உனது எனது படைத்தல் தாகம்
உயரப் பறக்க கிடைத்த சொந்தம்.....
வானம் பாடும் வானம் பாடி
கவிதை ஆச்சு, வாழ்க்கை தேடி,
கானம் தேடும் வார்த்தை கூடி
காதல் ஆச்சு, கவிதை தேடி.........
கட்டமைப்பு அப்படி, கடவுள் போல
எட்டாத தப்படி, கவிதை வேல,
என்று சொன்ன கவியரசன் பழசு
சிற்பி ஞானி புவியரசு புதுசு.......
மீண்டும் எழுதி எழுதி உடைப்போம்
புதுக் கவிதை தாண்டி படிப்போம்,
தாண்டும் வரிகளின் இடை வெளியில்
மீண்டும் வானம் பாடி சமைப்போம்....
மீண்டும் வானம்பாடி-velaanganni
சொகுசான வாழ்க்கை ஒரு காலத்திலே
சொத்துக்கும் பஞ்சமில்லை சுக போகத்திலே
இரைச்சானே காசையெல்லாம் இழி பழக்கத்திலே
உரைத்தானே தீயவார்த்தை கெட்ட மோகத்திலே
அப்பனும் ஆத்தாவும் எத்தனை சொல்லியும்
அவன் பழக்கத்தை கொஞ்சமும் மாத்தலையே
மாமனும் மச்சானும் எவ்வளவு அடிச்சும்
அவன் அணுவளவு கூட திருந்தலையே
ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட மாமன்மக ஓஞ்சுப்புட்டா
தன்னைத்தானே வருத்திக்கிட்டு திருத்தமுயன்று கஷ்டப்பட்டா
ஊருசனமும் ஒதுங்கிக்கிச்சு உறவுபூரா ஒதுக்கிடுச்சு
நாட்டாமையா யாருயிங்கே தீர்ப்புசொல்ல வந்திடுவார்
பொறந்த பொண்ணு வாயத் தொறந்து
கேட்டா அவனை ஒரே கேள்வி
அன்றே திருந்தினான் அதுவரைக்காய் வருந்தினான்
மீண்டும் வானம்பாடி வாழ்வில் இசைத்ததடி...
---------------------------------------------------------------------------------------
மீண்டும் வானம்பாடி-raaju venu
வானில் சுற்றித் திரியும் வானம்பாடிகளாய்
நீயும் நானும் - காதலெனும் வானில்...!
மண்ணுள் ஒழிந்து வேடிக்கை காட்டுகிறது
அதேசாம்பல் வானம்பாடி - என்மனதினுள்
நீ ஒழிந்து நர்த்தனம் ஆடுவதுபோல...!
சிறகடித்து உயரே பறந்தது வானம்பாடி,
நானும்கூட வானம்பாடியாய் உயரே - உயரே
உந்தன் கடைக்கண் பார்வை பட்டதால்...!
புயலடித்து சிறகொடிந்து வீழ்ந்தது வானம்பாடி,
எனதன்பை திருடிக்கொண்டு - நீ ஓடினாய்
எனது இதயத்தை வெற்றிடமாக்க எண்ணி...!
கால்களால் நடைபயின்றது "மீண்டும் வானம்பாடி",
எனதிதையம் உனதன்பு நினைவுகளுடன் - இன்றும்
என்றும் சிறகுவிரிக்கும் "மீண்டும் வானம்பாடியாய்"...!
வானமென அன்பும் விரிந்ததுதான் - சிறகுவிரி
"மீண்டும் வானம்படியாய்" அனைத்தும் உன்வசப்படும்...!
----------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் வானம்பாடி –shyamala rajasekar
அடித்தட்டு மக்களுக்காய் அறைகூவல் விடுக்கும்
அதிகார வர்க்கத்தின் நசுக்குதல் எதிர்க்கும்
அரிதாரம் போடாமல் உண்மையை உடைக்கும்
அதுவே கவிபாடும் வானம்பாடி இயக்கம் !
கூடுகள் திறந்து கூடிய கூட்டம்
அடங்காது யாப்பில் அவர்தம் முழக்கம்
கவிதை வித்து விருட்சமாய் வளரும்
கனலாய் சிவந்து சீறிப் பாயும் !
உரக்கச் சொல்லி உரிமை கேட்கும்
உரத்த சிந்தனை உள்ளம் மீட்கும்
புரட்சிப் போக்கால் புரட்டிப் போடும்
புதுமை தொனியில் பாடுபொருள் விரியும் !
தூண்டும் வன்முறை பூண்டோடு தொலைய
தோண்டும் குழியில் ஊழல்கள் புதைய
சீண்டும் மதவாதம் அடியோடு அழிய
வேண்டும் வேண்டும் மீண்டும் வானம்பாடி !!
------------------------------------------------------------------------------------------------
மீண்டும் வானம்பாடி-nadamara
இறைவனின் படைப்பா , இயற்கையின் செயலா
எதுவென அறியா இருவரின் பிணைப்பில்
உயிர் உருவாகி, உடலது கூடி
ஒருகுரல் கொடுத்து உலகினிற் பிறந்தது .
பாலுக் கழுது , நோய்வரின் துவண்டு
தளிர்நடை பயின்று, தானென வளர்ந்து
பருவம் எய்தி , பலதொழில் கற்று
இல்லறம் எண்ணும் நல்லறம் கண்டது .
வழிவழியாய் வரும் சங்கிலித் தொடராய்
பிள்ளைகள் பெற்று, பெரியவ ராக்கி,
மங்களம் நிறைந்த மணவினை முடித்து
வாழ்க்கைச் சக்கரம் சுழன்று வந்தது.
உடலெனும் சிறையில் ஒடுங்கிய காலம்
ஒருபெரும் சுமையாய் உணர்ந்த வேளை
படைத்தவன் நிழலை நாடி மீண்டும்
பறந்தது உயிரெனும் வானம் பாடி .
---------------------------------------------------------------------------------------------
மீண்டும் வானம்பாடி -Kaarththikaa AK
எங்கோ ஒரு பறவை இசை
மீட்டுகிறது என் கற்பனை வரிகளுக்கு
நான் மட்டுமான இந்த உலகத்தில்
நாதம் எட்டிப் பார்த்ததாய் எண்ணம்
பாட்டுப் பாடும் மனம் பறக்கத்
துடிக்கிறது ,பழமைகளைக் கழித்து விட்டு
புத்தம் புதிய காற்றில் ஏறி
உலகை பவனி வர ஆசைதான்
மரபு வேலிக்குள் மட்கிப் போன
கனாக்கள் மறு பிறவி கண்டன
உதிர்ந்த பாக்கள் உதித்தன புதியதாய்
தயக்கப் புயல் கரை கடந்தபோது
சாளரத்தில் முகம் காட்டுகிறது வெளிச்சம்
கைக்கெட்டும் தொலைவில் வாழ்க்கை வானம்
எட்டித்தொட மனமின்றி வளைத்துப் பார்க்கச்
சிறகடிக்கிறது மனம் மீண்டும் வானம்பாடியாய் !!
------------------------------------------------------------------------------------------------
போட்டிக் கவிதை-- மீண்டும் வானம்பாடி-Joseph Julius
நீலவான் கடல் மீதில் நிவர்ப்புடை ஓடமதாய்
கீழைக் காற்றோடே மிதந்திடும் புள்ளினமே
காலங்கள் மாறிடினும் காட்சிகள் மாறிடினும்
காந்தம் மாறிடா கானப் புட்கலமே!
மலைமுதுகு நிலைகுலைய மாருதி ஆர்த்திடினும்
நிலையழிவு வந்தாலும் நிறைகுட நாவலர்போல்
கலைமலி ஞாலமிதின் விண்ணளந்து மண்ணளந்த
விலையிலி வங்கியமே வடகமுன் பாடலே!!
உன்னைப் போலிரு சிறகுகள் எனக்கிருந்தால்
கன்மம் மறந்து நான் கறங்கு போலாவேன்
கன்னல் இசையினிலே ககனமே கனகமென
கறங்கைச் செய்கையிலே மீண்டும் வசந்தமதே!!!
வடிவுடை யுன்வடிவு புள்ளி வடிவமதாய்
வசியம் வடிக்கையிலே வயிறியர் வயிறெரிவர்
வங்கூழ் உண்டாலும் தங்கிடும் குளிறு அதில்
அங்கம் முழுவதுமே அடையும் ரோமாஞ்சனமே!!!!
********
வங்கியம்=இசைக்குழல்
கன்மம்=செய்தொழில்
கறங்கு=காறாடி
வஇறியர்=கூத்தர், பாடகர்.
வங்கூழ்=காற்று
குளிறு=ஒலி
-----------------------------------------------------------------------
மீண்டும் வானம்பாடி-- விவேக்பாரதி
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
முதலாளித் துவமொழிந்து சமத்து வத்தின்
=முதுமொழிதான் வையமெலாம் நிறையு தற்கும்
நிதமேழை மக்களது உலையும் பொங்கி
=நித்திலம்போல் நல்வாழ்க்கை நிலைப்ப தற்கும்
மதயானை போல்வளர்ந்த ஊழல் பேய்தான்
=மண்ணிதையும் விட்டொழிந்து போவ தற்கும்
பதமாக இறக்கைகள் விரித்து மீண்டும்
=பாவலர்கை சேரவேண்டும் வானம் பாடி !
மனிதநேயம் பனைமரமாய் வளர்ந்து ஓங்கி
=மரியாதை மானிடருள் காண்ப தற்கும்
தனிமனித எண்ணத்தை போக்கி எங்கும்
=தமிழொளியை அண்டமெலாம் பாய்ச்சு தற்கும்
கனியொத்த தேன்கவிகள் நாளும் செய்து
=காலமெலாம் நிரந்தரமாய் இருப்ப தற்கும்
இனிதாகத் தானமைந்த வானம் பாடி
=இனிமீண்டும் பிறக்கவேண்டும் கானம் பாடி !
---------------------------------------------------------------------------------------
மீண்டும் வானம்பாடி-nusky
உதிரம் சேர்த்து உடல் தந்தவள்
உடலால் மட்டும் என்னை பிரிந்தவள்
உலகுக்கு மட்டும் அவள் இறந்தவள்
என்னுடனே என்றும் மனதில் இருப்பவள்
பிறர் கண்களுக்கு மண்ணறையில் வாழ்பவள்
என் கண்களுக்கு உயிரோடு இருப்பவள்
என்னை விட்டு என்றும் பிரியாதவள்
என்னை ஈன்றெடுத்த தாய் அவள்
என் சொல்லுக்கு சொந்தக்காரி அவள்
என் செயலுக்கு வித்திட்டவள் அவள்
என்னை பொன்னாய் சுட்டவள் அவள்
என்றும் புன்னகையோடு வாழவைத்தவள் அவள்
மண்ணறை கண்டாள் அவள் என்றோ
என் வழக்கை வானம்பாடி அற்றது
அவளால் தொலைந்த அந்த வானம்பாடி
மீண்டும் வாழ்வில் வட்டம் போடாதோ.....?
--------------------------------------------------------------------------------------
மீண்டும் வானம்பாடி -புவனேஸ்வரி பாலமுருகன்
விரும்பி போனால் விலகி போகுமாம்!
விலகி போனால் விரும்பி வருமாம்!
இப்படி நினைப்பதற்கு மாறுதான்
வாழ்க்கையில் நிதமும் நிகழுமானால்,
"கனவுதான் எதற்கு?
கண்ட கவலைதான் எதற்கு?"
"உணவுதான் எதற்கு?
அதிக உழைப்புதான் எதற்கு?"
"அன்புதான் எதற்கு?
அதில் மனகசப்புதான் எதற்கு?"
"சொந்தம்தான் எதற்கு?
அதற்க்குள் உறவு போராட்டம்தான் எதற்கு?"
"காதல்தான் எதற்கு
அதில் மனம் கசிவதுதான் எதற்கு?"
"கடவுள்தான் எதற்கு
அதை தேடி துளைவதுதான் எதற்கு?"
இப்படி உயிருக்கு உரமாய் அனைத்தும்
தேவையின்றி நிகழ்ந்தே தீரவேண்டுமானால் - நம்
ஆறாம் அறிவான மனசுபடும் வலிக்கு
யார்தான் பொறுப்பு?
இறைவா மீண்டும் எப்போது
உன் பிறப்போ
அன்றுதான் மனிதம் படும்பாட்டுக்கு
ஒரு முடிவு
======================================================
மீண்டும் வானம்பாடி -ஆதிநாடா
சுழலும் உலகத்தில் சொல்லொணா துன்பத்தில்
உழலும் மனிதன் மனதின் நிழலாய்
இருப்போர்கள் இல்லா நிலையினிலே வாழ்வில்
பெருக்கெடுக்கும் சோகம் பிரிந்தடங்கிப் போக
பொருத்தமுள்ள அன்பை புனையும் இணையாலே
வானம்பா டிப்பறவை மீண்டு சிறகடித்து
கானம் இசைக்கும் களிப்பு
-aathinaadaa
இழந்த உரிமை, இழைக்கப்பட்ட இன்னல்,
அழுதே தொழுதும் அரங்கேற்றி விழுத்த
பலபேர் இணைந்து பசிதீர்த்துக் கொண்ட
குலமாதர் கற்பும், குழந்தை உயிரும்
ஒருநாளில் கொன்ற உயிரனைத்தும் கேட்ட
மறுமலர்ச்சித் தீண்டின் மனவானம் பாடி
சிறகடிக்கும் மீண்டும் சிரித்து.!
2)
திலகம் இழந்து தினந்தோறும் கண்ணீர்
உலப்பி உருகித் தவிக்கும் நிலவாய்
வசந்தம் விரும்பும் விதவை மனதை
இசைந்த குணத்தோடு ஏற்கும் மனம்வைப்பின்
மீண்டும் அவர்வானம் பாடியாய் அன்புண்ணத்
தீண்டும் மறுவாழ்வுத் தேன்!
(வானம்பாடி என்னும் சாதகப் பறவை சந்திரன் ஒளியைத் உண்டு வாழ்வதுபோல் இழந்த வாழ்வு கிடைப்பின் அன்பைமட்டும் புசித்து வாழ நினைப்பாள் என்னும் பொருளில் அன்புண்ண என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது= உலப்பி -இரைத்து)
-ஆதிநாடா
------------------------------------------------------------------------------------------
ஐநிலம் பண்டைய செழுமை கொண்டிட
மக்களுள் ஒற்றுமை விளைத்திட கூடுவோம்
அன்பதை நாட்டினர் உணர்வினுள் பெருக்கி
அகிலம் வியந்திட நாளுமதை பாடுவோம்..!
தீங்கதை விற்போரை தீக்கிரை ஆக்கிட
பஞ்சங்கள் துரத்தி பாரினில் சொந்தங்களாவோம்
நன்மைகள் நல்குவோர் நாமென்று முன்வர
நாதிகள் அற்றவர் வையத்தில் இல்லைஎன்போம்..!
இன்னதை சொல்லிடும் உங்களின் வானம்பாடி
தரணியை தாங்கிட வான்தூரம் சென்றிடுவாள்
அநீதி அழித்திட ஆதவன் காதினில் ஓதி
மும்மாரி பொழிந்திட மேகம்கண்டு முறையிடுவாள்..!
நிலவிடம் வெண்ணிற கொடிதனை வாங்கி
சமத்துவ பேரணிக்காய் விண்மீன்கள் கூட்டிவருவாள்
மண்புக முயற்சிகள் தாழ்ச்சி காணுமொரு நாளும்
நீவீர் எழிச்சியுற மகிழ்வாள் மிண்டும் வானம்பாடி..!
விஜயலட்சுமி-கவிபாரதி
-----------------------------------------------------------------------------