காற்றை மிதிக்காமல் நடக்க முடிவதில்லை

காற்றை
மிதிக்காமல்
நடக்க முடிவதில்லை

========================

முகம் பார்க்கும்
கண்ணாடியில்
வெறுமையை யாரும்
பார்த்ததில்லை

=======================

பந்தில் பட்டு
திரும்பி வந்தது
சுவர்

========================

இனிப்பு,
எறும்புகளின்
வேடந்தாங்கல்

வேடந்தாங்கல்,
பறவைகளின்
இனிப்பு

========================

உடல் எனும்
ஆடையை
வெயிலில் காயப்போட்டேன்
அது
உலரவேயில்லை

========================

பூமியை
உருட்டுகினறன
கால்கள்

========================

மழை விட்டதும்
மரத்துக்கு
தலைதுவட்டியது
காற்று

========================

இருட்டைப்
போர்த்திக்கொண்டு
வெளிச்சம் உறங்குகிறது
இரவில்

வெளிச்சத்தைப்
போர்த்திக்கொண்டு
இருட்டு உறங்குகிறது
பகலில்

( நன்றி : " ஆடாத மரத்தை காற்று பார்த்ததில்லை " - என்ற தேவதச்சனின் வரிகளுக்கு )

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ்ணதே (5-Jul-14, 10:13 am)
பார்வை : 123

மேலே