காலனவன் காத்திருக்கின்றான்

காற்று வேகமாக
வீசிக்கொண்டிருக்கின்றது...
இந்தப் பூவின் காம்பு
வலிமை இழந்துவிட்டது...
காலம்தான்
தீர்மானிக்க வேண்டும்
எப்பொழுது நான்
விழப்போகின்றேன் என்று...!

நேற்றுவரை
அந்தக் கைத்தடி ஊன்றி
நடந்துக்கொண்டிருந்த
இரண்டு கால்களும்
இன்று கண்விழித்தெழுந்த பொழுது
என் பேச்சைக் கேட்கவில்லை...!

என்றோ கூன் விழுந்த
முதுகுத் தண்டு
இன்று வளைந்துகொடுக்கவில்லை

இருவிழிகள் என்றோ
ஓய்வெடுக்கத் தொடங்கிவிட்டன

செவிகள் மட்டும்
என் உள்ளுணர்வுக்கு
செவிமடுத்து
சில சங்கதிகளை
அவ்வப்போது
உள்வாங்கிக்கொண்டிருக்கின்றன...!

பல உறவுகளின்
நடமாட்டம்
என்னால் உணரமுடிந்தது...!

சில நாட்களுக்கு முன்புதான்
கவிதாவிற்கு
நிச்சயம் முடிந்திருந்தது...
இன்னும் இரண்டு வாரங்களில்
சுபகாரியம்...
பத்திரிகை மண்டபம் சமையல்
இப்படி அனைத்தும்
தயாராகிவிட நிலையினில்
என்ன செய்வதென்று தெரியாமல்
புலம்பிக்கொண்டிருந்தான்
எனது இளைய மகன்...!

ஒருகுரல்
நடப்பது நடக்கட்டும்
வேலைகளைத் தொடருங்கள் என்றது...!

கவிதா...
என் இளைய பேத்தி
என் அருகினில் வந்தமர்ந்து
என்னைத் தன் மடியினில்
வைத்துக்கொண்டு
இளஞ்சூட்டில் கொஞ்சம்
காப்பித் தண்ணீரை
என் வாயில் ஊற்றினாள்...!

எங்கிருந்தோ
அதில் சிதறி விழுந்திருந்த
ஒரு துளி உப்பின் சுவையில்
என் உயிர்
சிலிர்த்துக்கொண்டு எழுந்தது...!

அந்தக் காற்றோடு
போராடத் தயாராகிவிட்டேன் நான்...
உடல் தன் பிடியைத்
தளர்த்திவிட்ட நிலையில்
உயிர்ப்பூவாகிய நான்
இன்னும் அந்தக் காம்பினை
இறுகப்பிடித்துக் கொண்டிருந்தேன்...!

அந்த இரவு பகலின்
கால மாற்றத்தை
ஒலியும் அமைதிக்குமான
இடைவெளியில் உணர்ந்துகொண்டு
நாட்களை எண்ணத் துவங்கினேன்...!

கவிதா...
நேரம் தவறாமல்
அவ்வப்போது காப்பி
கொடுத்துக்கொண்டிருந்தாள்...!

இமைகள்
துடிப்பதை நிறுத்திவிட்டன...
கருவிழிகள்
அந்தக் காற்றோடு
கரைந்துவிட்டதை உணர்ந்தேன்
கண்ணீர்த்துளிகளின்
ஈரம்தன்னை உணரமுடியாத
நாழிகை ஒன்றில்...!

வாய் திறக்கப்பட்டு
ஏதோ ஊற்றப்படுவதை மட்டும்
சற்று உணர முடிந்தது...
ஆனால் அது கவிதாவின்
அரவணைப்பு அல்ல
என்பதனை மட்டும் உணர்கின்றேன்...!

அன்றைய பொழுது
மிகப்பெரும் அமைதியை
என் உலகத்தினுள்
நிலைகொள்ளவைத்துக் கொண்டிருந்தது..!

சிறு சலசலப்புடன்
அந்த இரவு தன்னை
இருளுக்குள்
போர்த்திக் கொண்டிருந்தது...!

ஓர் அணு தன்னைத்
தயார் படுத்திக்கொண்டிருந்தது
புதியதொரு காம்பின் நுனியில்
புதிதாய் பிறப்பதற்கு...!

நான் அந்தக் காற்றினை
சற்று வேகமாக வீச விழைத்தேன்
சிறு மொட்டு ஒன்று
சிலிர்த்து எழட்டும் என்று...!

காற்றும்
என் பேச்சைக் கேட்டு வீசியது...
எனக்குள் அந்த
நிம்மதிப் பெருமூச்சினை
உள்வாங்கிக் கொள்வதற்கும் சேர்த்து...!

எழுதியவர் : வெ கண்ணன் (5-Jul-14, 10:31 am)
பார்வை : 126

மேலே