கடைசி முத்தம்

தேடிப் போன பூக்கள்
தூரம் போகையில்
எதேச்சையாய் மிதித்த சருகுகள்
பாதம் விட்டு விலகவில்லை..
கால் சுவடுகள் எல்லாம்
சருகின் அச்சுகள்..
பிய்த்து எரிய குனிகையில்
ஒட்டியிருந்த முள்ளும் தூசும்
என் பாதம் காத்ததன் அடையாளங்கள்..
இவை பயனில்லை
என்று தூரம் வீசுகிறேன்..
என் கூடையில்
எனக்கே தெரியாமல்
விழுந்த இலைகள்
வீடு வரை வருகின்றன!!
வீதியெல்லாம் உந்தன் நிறம்..
மறுபடி உன்னை
காணும் விருப்பத்தில்
உன் நிறமே அடையாளமாய்
கொண்டு உன்னை தேடினேன்..
உன்னை காணவில்லை..
ஒற்றை நிறத்தை எண்ணி எண்ணி,
வானவில்லாய் மாறியவளே
உன் நிறக்கலவை
எனக்கெப்படி புரியும்?
இரத்தம் பாலாய் மாறுகிறதா?
ஒரு சொட்டு இரத்தம்
பாலை கெடுக்கிறது..
குடமாய் கலந்த தண்ணீர்
எங்கே போனதென்று தெரியவில்லை!!
தேடித் தேடி
மாய்ந்து போன
கணங்களுக்கு புரிவதில்லை
பிரிக்க முடியாமல்
என்னுள் கலந்து போனவைகளை
வெளியே தேட முடியாதென்று!
அன்பின் முகங்களும்
என்னுள் ஐக்கியமானைவை..
இதில் கடைசி முத்தம் என்று
ஒன்றுமேயில்லை!!
இறந்து போன அப்பாவை
மகனில் பார்க்கையில்,
மழையில்லா வேர்கள்
பைப் நீரில் குளிர்கையில்,
மகாபாரதக் கண்ணன்
என் குழந்தையாய்
மடியில் தவழ்கையில்..
இப்படி எத்தனையோ கணங்கள்!
நிச்சயமாய் சொல்கிறது..
கடைசி முத்தம் என்று
ஒன்றுமேயில்லை!!