கலப்படமே அறிவு
அறிஞர் என்று அறிய
அளவுகோல் எது?
அறிஞர் ஒன்றை அறிய
திறவுகோல் எது?
விற்பனை செய்பவர் எல்லாம்
விற்பன்னர் இல்லை
கற்பனை செய்பவர் எல்லாம்
கவிஞரும் இல்லை
அறிவுவென்ற ஒன்று இன்று
அழிவென்று ஆனது
அறிவாளி என்பது புணர்ந்து
அழிவாளி ஆனது
வெடிவைக்க ஆயுதம் செய்பவன்
அறிவாளி ஆனான்
விடிவுக்கு ஆவணம் செய்பவன்
அப்பாவி ஆனான்
நல்ல துணியை கிழித்து உடுப்பவள்
பண்பாடு அறிந்தவளாம்
கிழிந்த துணியை ஒட்டுப்போட்டு உடுப்பவள்
பண்பாடு அற்றவளாம்
கிழித்துக் கட்டுபவள் உலகால்
கழித்துக்கட்டப் படாமல்
மறைத்துக் கட்டுபவள் அழகால்
குறைத்து மதிக்கப்படுகிறாள்
ஒட்டுக் கேட்கும் கெட்டவன்
ஒற்றனாய்ப் போற்றப்பட்டான்
தட்டிக் கேட்கும் நல்லவன்
தீவிரவாதியாய் தூற்றப்பட்டான்
துப்பெல்லாம் துலக்கி மறைப்பவன்
ராஜ தந்திரியாம்
தப்பெல்லாம் விளக்கி உரைப்பவன்
ராஜாவின் மந்திரியாம்
அரிவாளைத் தீட்ட விழையும்
அறிவாளர் திட்டம்
அரியணை விட்டு விலகினால்
தெளிவாகும் கூட்டம்
அறிவென்று அறியப்பட்ட எதுவும்
அறிவென்று படவில்லை
அறிவென்ற அடிப்படை எதுவும்
அறிந்ததாகப் படவில்லை
அறிவு என்பது இன்று
அறியப்படாமல் இருப்பதால்
அறியாமை என்ற ஒன்று
அறிவானது
அறிவு மட்டும் வெளிப்படும் நிலை
தீயைப் போல சுட்டிடும்
அன்பு சேரும் கலப்பட நிலை
தாயைப் போல காத்திடும்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
அறிவில் விலக்குப்பெற்றதால்
மடமை மண்ணினில் புரையோடும்
தெரிவை உலகு பெற்றது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
