அவள் அப்படித்தான் - சிறுகதை- பொள்ளாச்சி அபி

“ஒரு பொம்பளையா இருந்துகிட்டு,எத்தனை உசுரைக் கொன்னுருப்பா.., இவளுக்கெல்லாம் இந்த கெதி வராம...?”

“ஆண்டவன் ஏதோ பரிதாபப்பட்டு இதோட வுட்டானேன்னு..,பொழச்சா சந்தோசப் பட்டுக்கட்டும்..!”

நினைவு தப்பிய நிலையில்,மூன்று நாட்களாக அரசு மருத்துவமனையில்,அவசர சிகிச்சைப் பிரிவில் படுத்திருக்கும் காமாட்சியைப் பார்த்து விட்டு,வெளியேறிய பெண்கள்,பேசிக்கொண்டே கடந்ததைக் கேட்ட,கோபாலுக்கு அவர்கள் மீது ஆத்திரமாய் வந்தது.

சாலையைக் கடக்க முயன்ற காமாட்சியின் மீது,இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராமல் லேசாய் மோத,மல்லாந்து விழுந்ததில்,பின் மண்டையில் பலத்த அடி.காமாட்சிக்கு நினைவு தப்பிப் போயிற்று. இதுவரை கண்களை திறக்கவே இல்லை.‘அறுபது வயசுக்காரியான காமாட்சி ஆத்தாவுக்கு..இந்த நெலமை வந்திருக்க வேண்டாந்தான்..விதி..யாரை வுட்டது.?’ கோபாலின் மனசுக்குள் விரக்தி நிறைந்தது.

‘இவங்களுக்கு ஏன் இப்படியெல்லாம் தோணுச்சு.? இவங்க சொல்லிட்டுப் போற மாதிரியா ஆத்தா நடந்துகிச்சு..?’ ஆத்தாவின் நடவடிக்கைகள் குறித்து அவ்வப் போது கோபாலுக்கும் சந்தேகம் வரத்தான் செய்யும்.அதனை அப்போதே கேட்டு விடுவான்.ஆத்தா சொல்லும் பதிலில்,அவனது சந்தேகம் தீர்ந்து விடும். ஆனால், ஊருக்கெல்லாம் போய் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா என்ன..?

அவனிடம் முதன்முதலாக,காமாட்சி மனம்விட்டுப் பேசிய தினம் அவனுக்குள் மீண்டும் சித்திரமாக வந்தது.

“கோபாலு அந்த செவலைக் கிடாயை,முதல்லே கட்டு.மத்த ரெண்டையும் விடிஞ்சப்புறம் பாத்துக்கலாம்..” காமாட்சி ஆத்தா சொன்னவுடன்,துண்டுக் கயிறுகளுடன் தயாராக இருந்த கோபாலு,அந்த ஆட்டின் முன்பாக உட்கார்ந்து, அதன் முன்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கட்டினான். வழக்கமாய் மனிதனின் கையில் கயிற்றைக் கண்டால்,தனது கழுத்தை நீட்டி நிற்கப் பழகியிருந்த அந்த ஆடு,தனது முன்னங்கால்களை அவன் கட்டுவதைக் கண்டு, பரிதாபமாய் விழித்தது.காரணம் கேட்பதுபோல,தனது தலையை அவனது கன்னத்தோடு மேலும்,கீழுமாக உரசியது.நேற்று இரவுகூட பசுந்தழையும்,கழுநீரும் கொடுத்தவன் இப்போது எதற்கு கால்களைக் கட்டுகிறான் என்று நினைத்து பதறியதோ என்னவோ..? மே..மே..என்று வழக்கத்தைவிட பெருங்குரலெடுத்துக் கத்தியது. அதனைப் பொருட்படுத்தாத கோபாலு,பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கட்டி, தரையில் அதனைத் தள்ளிவிட்டு முடிச்சை இறுக்கினான்.

‘தொப்’பென்று விழுந்ததில், ‘ஏதோ விபரீதம்..’ஆட்டிற்கும் புரிந்திருக்க வேண்டும். இடைவிடாத அதன் அலறலில்,அருகாமையில் கட்டிவைக்கப் பட்டிருந்த மற்ற இரண்டு ஆடுகளும் கத்தின.பயம் துல்லியமாய்த் தெரிந்தது. “ஆத்தா..கட்டியாச்சு..!”

தனது உடலின் முன்புறம் முழுவதுமாக மறைக்கும் வகையில், காக்கித் துணி ஒன்றைக் கட்டிக் கொண்டிருந்த காமாட்சி, “இதா வந்துட்டேன்..”வந்தவள் கையில், சாலை விளக்கொளியில் பளபளவென்று ஒரு பகுதியில் மின்னிய கறி வெட்டும் கத்தி இருந்தது.

தரையில் கிடந்த ஆட்டின் உடம்பை,அது திமிற முடியாதபடி,வழக்கம்போல அமுக்கிப் பிடித்துக் கொண்டான் கோபாலு.ஆட்டின் தலைப்புறம் வந்து நின்ற காமாட்சி,கிழக்கு நோக்கி நின்று, கையில் கத்தியுடன் கை குவித்து,ஏதோ முணு முணுத்தாள்.பின்னர் குத்துக் காலிட்டு அமர்ந்தவள்,ஆட்டின் தலையை இடது கையால் அமுக்கிப்பிடித்துக் கொண்டு,அதன் குரல்வளையின் அடிப்புறத்தில் கத்தியை வைத்ததுதான் தெரியும். வலியால் துடித்த ஆட்டின் கடைசிநேர அலறல்.. “க்ளக்..” என்ற சப்தத்துடன் முடிந்தது.ஆத்தாவின் செயலில்,கொஞ்சம்கூட இரக்கமோ,தயக்கமோ,கைநடுக்கமோ இல்லை.காரியத்திலேயே கண்ணாக இருந்தாள்.

ரத்தம் கொப்பளித்து தெறித்த நான்கு விநாடிகளுக்குள்,தலையை தனியே அறுத்து எடுத்த காமாட்சி,அதனை அருகிலிருந்த கல்மேடையில் வைத்துவிட்டு,துள்ளிக் கொண்டிருந்த ஆட்டின் உடலுக்கு கைலாகு கொடுத்தபடியே..உம்..தூக்குடா..” எனச் சொல்ல,அதற்காகவே காத்திருந்த கோபாலும்,சடக்கென்று தூக்கி,தொங்கிக் கொண்டிருந்த கொக்கியில் தலைகீழாக மாட்டினார்கள்.தொங்க விடப்பட்ட ஆடு ஊசலாடாதவாறு, காமாட்சி பிடித்துக் கொள்ள,அதன் கழுத்திலிருந்து ஒழுகும் இரத்தத்தைப் பிடிக்க வாகாக,ஒரு வாளியை எடுத்து வைத்தான் கோபாலு.ரத்தம் முழுதாய் வடிந்தவுடன்தான் தோலை உரிக்கவேண்டும்.

கிழக்கு வெளுப்பதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.இன்று ஞாயிற்றுக்கிழமை.கறி வாங்குவதற்கு வழக்கத்தைவிட நேரத்திலேயே வாடிக்கையாளர்கள் வந்துவிடுவர்.

ரத்தம் முழுதாக வடிந்திருந்தது.தொங்கவிடப்பட்ட ஆட்டின் முன்வந்து நின்ற காமாட்சி,அதன் கழுத்தில் கத்தியை வைத்து,மெதுவாய் நெஞ்சு,வயிறு,கால்கள்.. என கத்தியை இறக்கிக்கொண்டே வந்தாள்.ரத்தமும்,கொழுப்பும் கசியக்கசிய, எங்கேயும் சிறு பிசிறுகூட இல்லாமல்,தோலை முழுதாய் உறித்தெடுத்ததில், அவளது செறிவான அனுபவம் தெரிந்தது.

ஆத்தாவின் கை லாவகத்தை எப்போதும் போல வைத்த கண் விலகாமல் பார்த்துக் கொண்டிருந்த கோபாலு ஆத்தாவின் கையிலிருந்து தோலை வாங்கி, கல்மேடையில் பரத்திப் போட்டான்.ஆட்டின் குடல்,ஈரல்,இதயம்,என தனித்
தனியாக சிந்தாமல் சிதறாமல் அறுத்தெடுத்து ஆத்தா சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள்.

பொதுவாக இரக்கம் மிகுந்தவர்களாயிருக்கும் பெண்கள்,இது போன்று உயிர்களைக் கொல்வார்களா..?அதையும் ஒரு தொழிலாகவே செய்வார்களா..?’அவனுக்கு ஆச்சரியமும், கேள்விகளும் தோன்றத்தான் செய்தன. அதனை வாய்விட்டு, ஆத்தாவிடமே கேட்டுவிட்டான்.

“அடப் போடா..எங்கப்பனும்,என்வீட்டுக்காரரும் சாகுறவரை செஞ்ச தொழிலுதான். இத வெச்சுத்தான் எம் பையனைப் படிக்க வெச்சோம்.கவருமென்ட்டு வேலை வாங்கிக் கொடுத்தோம். அவனுக்கு கல்யாணமும் செஞ்சு வெச்சோம்.

மருமகளுக்கும்,எனக்கும் ஒத்துவர்லே.மாசாமாசம் செலவுக்கு பணம் கொடுக்குறேன் ஆத்தா..ன்னு சொல்லிட்டு,தனிக் குடித்தனம் போன எம்மகன், கொஞ்ச நாள்லே, சோத்துக்கே திண்டாட வெச்சுட்டான்..” சொல்லிக் கொண்டே வந்தவளின் குரலில் திடீரென கோபம் கொப்பளித்தது. “எங்கிட்டேயிருந்து அவனுக்கு மன்னிப்பே கிடையாது.நான் செத்துட்டா,எனக்கு கொள்ளி வெக்கக் கூட,அவன் வரக் கூடாதுன்னு இப்பவும் ஆத்திரமா இருக்குடா கோபாலு.!”ஆத்தா ரொம்பப் பழியுணர்ச்சியோட பேசுற மாதிரி தெரிஞ்சது.

சில விநாடிகள் கழித்து,“காக்கா வளத்துவுட்ட குஞ்சு பெரிசா வளந்த பின்னாடி, எந்தக் காக்கா போயி,எனக்கும் சேத்து தீனி பொறுக்கிட்டு வா..ன்னு சொல்லுது. அதான்..நா பாட்டுக்கு கையிலே சத்தியிருக்கிற வரையிலே கத்தியைப் பிடிக்கலாம்னு இறங்கிட்டேன்.இப்பப் பாரு..எவந் தயவுமில்லாமே என்னாலே பொழைக்கமுடியுது..!” ஆத்தாவின் குரலில்,தன்னைத் தோற்கடிக்க முயன்றவர் களை, தனியாகவே எதிர்த்து நின்று போராடி வெற்றி பெற்ற பெருமிதம்.

“ஏண்டா..இந்தத் தொழிலு உனக்கு பாவமாத் தெரியுதா..? நெனச்சாலும் நெனச்சுக்கோ.. புண்ணியத்தை எப்பிடி சேக்குறதுண்ணு எனக்கும் தெரியும்..” சிரித்துக்கொண்டே சொன்ன ஆத்தாவின் கண்கள் பிரகாசமாக மின்னியது.

அது என்னவோ அப்படித்தான்.பனிரெண்டு வயதுவரை,அநாதையாக சுற்றித்திரிந்த தனக்கும் சேர்த்தல்லவா,இந்த நான்கு வருடங்களாக ஆத்தா சோறு போடுகிறாள். இன்னும் நாலுபேருக்கு உதவி செய்யவும் ஆத்தாவிடம்,இப்போதும் உழைப்பும், சக்தியும் இருக்கிறது.அதற்குப் பிறகு,ஆத்தாவிடம்,அது குறித்து அவன் ஒன்றும் கேட்கவில்லை.

முதல் வாடிக்கையாளர் வந்துவிட்டார்.“பை கொண்டு வந்திருக்கீங்கல்லே.,” ஆத்தாவிடம் இறைச்சி வாங்குபவர்கள் நிச்சயம் பை கொண்டு வரவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.

சதையும்,எலும்புமாக அவர் கேட்டபடி வெட்டியெடுத்து,எடைபோட்ட ஆத்தாவின் கையிலிருந்த தராசின் முள்,கறியிருக்கும் தட்டுப் பக்கம் சாய்ந்து இருக்கும்படி பார்த்துக் கொண்டாள்.வந்தவருக்கு பரம திருப்தி.தாமரை இலையில்,இறைச்சித் துண்டுகளை வைத்து,ஒரு காகிதத்தில் பொதிந்தவள், பொட்டலமாய்க் கட்டுமுன்பு, அதனை அப்படியே கறிமுட்டியில் வைத்து விட்டு, தொங்கிக் கொண்டிருந்த ஈரலிலிருந்து கொஞ்சமாய் வெட்டி,பொட்டலத்தில் போட்டுக் கட்டிக் கொடுத்தாள். “கொழந்தைகளுக்கு ஆத்தா குடுத்துச்சுன்னு,உங்க பொம்பளைகிட்டே சொல்லுங்க..!” அதனை வாங்குவதற்காக தன்னிடம் இருந்த துணிப்பையை விரித்துப் பிடித்துக் கொண்டிருந்தவரின் முகம் முழுக்க சிரிப்பு.ஆத்தாவின் இந்தப்போக்கு யுக்தியா, இயல்பா..என கோபாலுக்கு சரியாகப் புரியவில்லை.

‘ஆத்தா வெட்டி விக்குற கறியிலே,அது மீதி,இது மீதின்னு எதுவுமே மிச்சமாகாது. அப்படியே சிலப்போ எப்பவாவது மிச்சமானா,அது பக்கத்துவீடுகளுக்கு சரிபங்காப் பிரிச்சு,இலவசமாப் போயிடும்.இதுலே நட்டமாகுதுன்னு கணக்கு பாக்காத ஆத்தா, வெளியிடங்களில் இப்படியில்லை.!

அன்றைக்கொரு நாள்,மீதி ஒரு ரூபாய் சில்லறையை,“அப்புறம் தாரேன்..”என்று சொல்லி டபாய்க்கப் பார்த்த,பிரைவேட் பஸ்கண்டக்டரை,கண்டபடி ஆத்தா திட்டியதில், கண்டக்டரின் பரம்பரையே சின்னப்பட்டது.மொத்த ஜனமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க.“சாகப்போற வயசுலே கெழவிக்கு பேச்சைப் பாரு..” யாரோ ஒரு ஆண்,கூட்டத்தில் குரல் கொடுக்க, “யாருய்யா அது,ஆயிரம் வருசத்துக்கு இங்கியே இருக்கறவனா பேசுறது..?”ஆத்தாவின் கேள்விக்கு, நிசப்தம்தான் பதில்.

அதே போலத்தான்,காய்கறிக்காரன் ஒருநாள் சிக்கினான்.“தராசை சரியாப் புடிக்கலை.. குடுக்குற காசுக்கு மரியாதையா பொருள் குடுக்குறதுன்னா குடு.. இல்லேன்னா உன் யாவாரமே வேண்டாம்..”என்று குதித்தாள்.

‘ஆத்தா இப்படியெல்லாம் கணக்குப் பாத்து அங்கலாப்பு படுதே..பணம் சேக்கணும்னு இப்ப ஆசை வந்திருச்சோ..’என்று நினைத்தவனின் எண்ணத்தையும்,ஆத்தா அன்று தவிடு பொடியாக்கினாள். கோபாலுக்கு புதிய சட்டையும்,லுங்கியும் வாங்கித் தருவதற்காக,பொள்ளாச்சியிலேயே பெரிதாயிருந்த துணிக்கடையில்,நல்ல துணி, பொருத்தமான விலை..என்று தேடித்தேடி வாங்கிய ஆத்தா,கல்லாவில் பணத்தைக் கொடுத்துவிட்டு,திரும்ப வாங்கிய மீதிப்பணத்தில் ஒரு நூறுரூபாய் நோட்டு அதிகமிருக்க, அதனைத் திருப்பிக் கொடுத்துவிட்டு,“தம்பி,உங்க அப்புச்சி கஷ்டப்பட்டு சேத்த மொதலை, நீ சீக்கிரம் கரைச்சுருவே போலிருக்கே..”என்று சொன்னதில்,அந்த வாலிபன் வெட்கப்பட்டு குறுகிப்போனான்.

வெளியே வந்தபின் ஆச்சரியம் தாளாத கோபாலு, “ஏன் ஆத்தா,ஒத்த ரூபாய்க்கு சண்டை போடுற நீ,சுளுவா வந்த நூறு ரூவாயை வுட்டுப்புட்டியே..?”

வெடுக்கென்று திரும்பிப் பார்த்த காமாட்சி, “ஏண்டா உம்புத்தி இப்புடிப் போகுது.., உன்னைச் சொல்லி குத்தமில்லே,எப்பவும் சரியா இருக்கோணும்னு நெனக்கிற வங்களைத்தான் இந்த ஒலகம் தப்பானவங்கன்னு சொல்லுது..,ஆனா கோபாலு.., எங்கிட்டே திருட்டுபெரட்டு ஏதும் பண்ணுனேன்னு தெரிஞ்சது. கை,காலு நொண்டீனு கூட பாக்கமாட்டேன்..ஈவு இரக்கமில்லாமே தொரத்திருவேன்” வெட்டுக்கத்தியின் கூர்மை மின்னும் கண்களில் ரௌத்திரம் பொங்க,காளியாத்தா மாதிரி கர்ஜித்தாள்.

“மன்னிச்சுரு ஆத்தா..அநாதியா வந்த எனக்கு,நாலு வருஷமா ஆதரவா இருக்குற உங்கிட்டேப்போய் நான் அப்படியெல்லாம் பண்ணுவேனா ஆத்தா.. சத்தியமா அப்பிடியொரு நெனப்புகூட எனக்கு வராது ஆத்தா..” எப்பவுமே இப்படித்தான், ஒவ்வொருத்தருகிட்டேயும் ஒவ்வொரு மாதிரி நடந்துக்கிற ஆத்தா நல்லவளா, கெட்டவளான்னு முடிவுக்கே வரமுடியலை..விடுகதை மாதிரி மாறிப் போயிட்டாளே..!’

‘இவகிட்டே அடைக்கலம் தேடிவந்தப்போ..தனியாளா இருந்த ஆத்தா முகத்துலே எப்பவும் ஒரு சோகக் களை இருந்துட்டேயிருக்கும்.ஆனா..இப்ப கொஞ்சநாளா, எப்பவும் சுறுசுறுப்போட, ஏதோவொன்னை சாதிச்சுட்ட மாதிரி மொகத்துலே பெருமை தெரியுதே.. என்னவா இருக்கும்..?’ தனக்கேற்பட்ட சந்தேகத்தை நிதானமாக கேட்க வேண்டும் என்று நினைத்திருந்த போதுதான்,ஆத்தா விபத்தில் சிக்கி,இங்கே வந்து படுத்துக்கொண்டிருக்கிறாள்.ஆத்தா சீக்கிரம் கண்விழிக்க வேண்டும். காமாட்சி படுத்திருந்த கட்டிலின் ஓரமாக அமர்ந்திருந்தான் கோபாலு.

“ஏம்ப்பா..கோபாலுங்கிறது நீதானா..?” வார்டுக்குள் வந்த நர்ஸ்,அவனைப் பார்த்துக் கேட்க,ஆமாம் என்று அவன் தலையாட்ட,“உன்னை பெரிய டாக்டரு கூப்பிடுறாரு..” என்றபடியே அவள் கடந்து சென்றாள்.

டாக்டரின் அறைக்கு முன்சென்று அவன் தயங்கி நிற்க, “யாரு..கோபாலா..?”

“ஆமாங்கய்யா..”

“நீ காமாட்சியோட மகன்தானே..?”

“இல்லைங்கய்யா..ஆனா,மகன் மாதிரி ஆத்தா என்னையப் பாத்துகிச்சு.!”டாக்டர் எதையோ புரிந்து கொண்டவராக,“அந்தம்மாவோட மகனோ,மகளோ இருந்தா வரச்சொல்லுப்பா..!”

“சரீங்கய்யா..”என்று சொல்லிவிட்டுத் திரும்பியவனுக்கு,‘சண்முகத்தை கூப்பிட்டுச் சொன்னா அவன் வருவானா..? ஆத்தா கண்ணு முழிச்சபின்னாடி,அவனை ஏண்டா கூப்பிட்டேன்னு திட்டுமா..? பெரிய டாக்டரு சொல்லும்போது,முடியாதுன்னு எப்படி சொல்றது..? என்னவோ போ..,நடக்கறது நடக்கட்டும்.’ சண்முகத்துக்கு போன் செய்துவிட்டு,ஆத்தா முக்கியமான சொந்தக்காரருன்னு குறித்து வைத்திருந்த இன்னொரு எண்ணுக்கும் தகவலைச் சொல்லிவிட்டு வந்தான்.

அரைமணி நேரத்திற்குள் சண்முகமும்,மற்றொருவரும் தனித்தனியே வந்து விட்டனர்.இருவரும் டாக்டரின் அறைக்குள் சென்று அரை மணிக்கும் மேலாகப் பேசிக் கொண்டிருந்தனர்.டாக்டர் ஏதேதோ பேப்பர்களைக் காட்டி,காட்டிப் பேசிக் கொண்டிருந்தார்.சண்முகம்,அவ்வப்போது அழுகையை கட்டுப்படுத்துவதும், சமாளிப்பதும் தெரியவந்தது. ஏதாவது பெரிய ஆபரேசனா இருக்குமோ..?

வெளியே வந்த இருவரும்,தங்களுக்குள் கொஞ்சநேரம் பேசிக் கொண்டே, கோபாலை நோக்கி அருகில் வந்தனர்.“வக்கீல் சார்,பையன்கிட்டே நீங்களே விவரத்தை சொல்லுங்க..”என்றபடியே,சற்று தள்ளி நின்று கொண்டான் சண்முகம்.

“தம்பி..ஆத்தா இருக்குற வீட்டையும்,பேங்க்லே இருக்கற ரெண்டு லட்ச ரூபாயை யும் உம்பேர்லே ஆத்தா எழுதி வெச்சிருக்கு..!”

“அதெல்லாம் எனக்கெதுக்கு சார்.? ஆத்தாவுக்கு ஏதாவது ஆபரேசன் பண்ணனுமின்னா எடுத்து செலவு பண்ணுங்க..!”

“அது இப்ப முடியாது தம்பி.ஆத்தாவுக்கு இதுக்கு முன்னாடியே ஒருதடவ நெஞ்சு வலி வந்தப்போ, இங்கதான் வந்து பாத்துட்டுப் போயிருக்கு.அப்பவே,தனக்கு ஏதாவது ஒடம்பு முடியாம செத்துப் போயிட்டா..தன்னோட ஒடம்புலேயிருந்து, கண்ணு,கிட்னி,இதயம்,கல்லீரலுன்னு என்னென்ன உறுப்பெல்லாம் எடுக்க முடியுமோ,அதை எல்லாத்தையும் எடுத்து, மத்தவங்களுக்கு பொறுத்திடுங்கன்னு.. எழுதிக் கொடுத்திருக்கு.மிச்ச ஒடம்பையும் கவருமென்ட் ஆசுபத்திரிக்கு தானமா கொடுக்கச் சொல்லிருக்கு தம்பி..!”

“அதெல்லாம் செத்தப்புறம்தானே செய்யணுமின்னு சொல்லீருக்கு.அதுக்கு இப்ப என்ன..?”

“ஆத்தா செத்துப் போச்சு..! மூளைச்சாவுன்னு சொல்லுவாங்க..!”

புரியாதவர்களுக்கு புதிராய் இருந்த ஆத்தா,புரிந்தவர்களுக்கு புனிதமாகியிருந்தாள். எப்போதும் அவள் அப்படித்தான்..!

-----------பொள்ளாச்சி அபி ------------
------ ------------ ---------- ----------------

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (5-Jul-14, 2:46 pm)
பார்வை : 419

மேலே